Last Updated : 10 Dec, 2022 06:35 PM

 

Published : 10 Dec 2022 06:35 PM
Last Updated : 10 Dec 2022 06:35 PM

ஒப்பற்ற ஆசான் மகாகவி பாரதியார் | பாரதியார் பிறந்த நாள் 140

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 1997-ல் எனக்கு ஓவிய ஆசிரியராக வேலை கிடைத்தது. பேரார்வத்துடன் பள்ளிக்குச் சென்றேன். பள்ளிக்குள் நுழைந்ததுமே பாரதியாரின் மார்பளவுச் சிலை என்னை வரவேற்றது. அருகே சென்றேன். பாரதியாரே வரவேற்ற உணர்வு. பெருமிதமாக இருந்தது.

1966-ல் பாரதி பிறந்தநாளன்று அன்றைய தமிழக முதல்வர் எம். பக்தவத்சலத்தால் திறக்கப்பட்ட சிலை என்று கல்வெட்டு கூறியது. பக்கவாட்டில் இருந்த கல்வெட்டில், “மகாகவி திரு. சி.சுப்பிரமணிய பாரதியார் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் 1904-ம் ஆண்டு தமிழாசிரியராக பணியாற்றினார்” என்று பொறிக்கப்பட்டிருந்து. அதை வாசிக்கும்போது என் மனம் அடைந்த பெருமிதத்திற்கு அளவே இல்லை.

பாரதி கற்பித்த காலம்: எங்கள் பள்ளிக்குள் எங்கு சென்றாலும் பாரதி இங்கு நடந்திருப்பார், அமர்ந்திருப்பார் என்று எண்ணி எண்ணி மகிழ்வேன். பாரதியார் ஆசிரியராக வேலை செய்தபோது வருகைப் பதிவேடு, புகைப்படங்கள் போன்ற ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்க்க ஆவலாக இருந்தது. பள்ளி அலுவலகத்தில் விசாரித்தேன். சம்பளக்கணக்கு குறிப்பேட்டின் தாளைப் பாதுகாப்பாகச் சட்டமிட்டு வைத்திருந்தார்கள். முன்பு ஏதாவது இருந்திருக்கலாம் இப்போது இது மட்டுமே இருக்கிறது என்று கூறினார்கள். அதில் ஆங்கிலத்தில் சுப்பிரமணிய பாரதி என்று எழுதப்பட்டிருந்தது. வயது 22. அவரது மாதச் சம்பளம் ரூ.17.8 என்றும் இருந்ததைப் பார்த்து மகிழ்ந்தேன். பாரதியாரின் கையெழுத்தை நேரில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தமும் இருந்தது.

மதுரையில் மகாகவியின் சிலை, சேதுபதி பள்ளியில் மட்டுமே இருக்கிறது. பாரதியார் பிறந்தநாள், நினைவு நாள் என்றால் பலரும் அவரது சிலைக்கு மாலை போட வருவார்கள். 2000-ம் ஆண்டில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. பாரதியாரிடம் படித்த மாணவர் ஒருவர் வந்திருந்தார். பாரதியார் சிலை அருகே நின்று அவரது நினைவுகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீயெனப் பள்ளியெங்கும் பரவியது. அச்செய்தி கேட்டு அளவற்ற ஆர்வத்தோடு பள்ளியின் முகப்பு நோக்கி விரைந்தேன்.

பாரதியார் சிலையைச் சுற்றிப் பத்திரிக்கையாளர் கூட்டம். சிலையருகே வெள்ளைத் தாடியோடு முதியவர் ஒருவர் கம்பீரமாக நின்றிருந்தார். "ஐயா, உங்களுக்கு என்ன வயதாகிறது?" என்று ஒருவர் கேட்டார்.

"எனக்கு 80 வயது. நான் மகாகவிபாரதியாரிடம் 6-ம் வகுப்பு படித்தேன்" என்று பெரியவர் கூறினார். ஒரு நாள்அவர் மகளோடு விளையாடும்போது நான் அவளை அடித்துவிட்டேன். அப்போதுதான் 'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாடலைப் பாடினார்" என்று அந்தப் பெரியவர் சொன்னவற்றை எல்லாம் அனைவரும் நெகிழ்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்தோம். நீண்ட அனுபவப் பகிர்வுக்குப் பிறகு பாரதியின் மாணவர் பள்ளியைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்.

1902-ம் ஆண்டு காசியிலிருந்து எட்டையபுரம் திரும்பினார், பாரதியார். ஜமீன்தாரிடம் அவர் பார்த்த வேலையில் அதிக இஷ்டமில்லை. மதுரையிலிருந்து வெளிவந்த ‘விவேக பானு' என்ற இதழில் பாரதி எழுதிய ‘தனிமை இரக்கம்' என்ற கவிதை பிரசுரமானது. அதுவே முதலில் அச்சான பாடல். ஜமீன்தாரிடம் கருத்து வேறுபாடு எழுந்தது. அதையே சாக்காகக் கொண்டு வேலையை உதறிவிட்டு வேறு வேலை தேடிக் கிளம்பினார்.

‘பாரதி தமிழ்’ - மதுரைக்கு வந்ததும் மதுரைக்கல்லூரியில் பேராசிரியராக இருந்த உறவினரைச் சந்தித்தார். அவர் மூலம் சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி தற்காலிகமாகக் காலியாக இருப்பதை அறிகிறார். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய தமிழறிஞர் அரசன் சண்முகனார் விடுமுறையில் சென்றிருந்ததால் சில மாதங்கள் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு பாரதிக்குக் கிடைத்தது. நேரடியாகவே பள்ளியில் தமிழாசிரியர் வேலை கிடைத்தது. வேறு வேலை கிடைக்கும்வரை பாரதியார் ஆசிரியராக இருந்தார்.

பெ.தூரன் எழுதிய ‘பாரதி தமிழ்' என்ற நூலில், மதுரை, 30-3 – 1953.

அன்புடையீர், தங்கள் 24.3.53 தேதியுள்ள கடிதம் கிடைத்தது. அதில் குறித்தவாறு பழைய தஸ்தாவேஜிகளைத் தேடிப் பார்த்ததில் காலஞ்சென்ற அமரகவி திரு. சுப்பிரமணிய பாரதியாரவர்கள் 1-8 -1904 முதல் 10 - 11 - 1904 வரை இப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியிருப்பதாகத் தெரிகிறது.

தங்கள், எஸ். நாராயண ஐயர், தலைமையாசிரியர் என்று சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அனுப்பிய கடிதத்தின் மூலம் பாரதி ஆசிரியராக வேலை செய்த நாட்களை பெ. தூரன் உறுதி செய்திருக்கிறார்.

பத்திரிகையாளராக ஆனபிறகு பாரதியார் நாட்டுக்கும் தமிழுக்கும் வலிமையான பங்காற்றுபவராக மாறினார். ஆசிரியராக வேலை பார்த்ததால் கல்வி குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார். பாரதியாரோடு பழகியவர்கள், அவர்களிடம் கேட்டவர்கள் எழுதிய புத்தகங்கள் நிறைய இருக்கின்றன. - கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், ‘கரும்பலகைக்கு அப்பால்’, ‘கலகல வகுப்பறை’ உள்ளிட்ட கல்வி குறித்த நூல்களின் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x