Published : 05 Dec 2022 06:15 AM
Last Updated : 05 Dec 2022 06:15 AM

பொறுத்தார் பூமி ஆள்வார்...

காமாட்சி ஷியாம்சுந்தர்

நாம் வாழும் இந்த அழகான பூமியானது பொறுமைக்கு உதாரணமாக சொல்லப்படுவது முற்றிலும் உண்மை. பூமியை எத்தனை ஆழமாகத் தோண்டினாலும் தன்னிடம் உள்ள அனைத்து இயற்கை வளங்களையும் தயக்கமின்றி தந்து கொண்டிருக்கிறது; தங்கம், வைரம் போன்ற விலை மதிப்பற்ற உலோகங்களாக; நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிவாயுப் பொருட்களாக; கற்கண்டு போன்ற இனிப்பான சுவையுடைய நீராக தந்து கொண்டே இருக்கிறது, இந்த எழில்மிகு பூமி.

இன்று பூமியின் நிலையைப் பார்க்கும் பொழுது மிகவும் பரிதாபமாக உள்ளது. எத்தனை வகையானமாசுபாடு செய்கிறோம். இந்த பூமியில் எத்தனை கோடி வருடமானாலும் மட்கவே மட்காத நெகிழியை மண்ணிலிட்டு மண்ணை மலடாக்கி வருகிறோம். மண்ணினை மட்டுமல்ல, அந்த மண்ணிலிருந்து விளைகின்ற பயிர்களை உண்டு வரும் விலங்குகளையும், அதனை உண்கின்ற மனிதனையும் மலடாக்கி வருகிறோம்.

தேவையில்லாத பொருட்களை மண்ணிலிட்டு எரிக்கும் போது சுவாசிக்கின்ற காற்றினையும் மாசுபடுத்துகிறோம். ஆக்ஸிஜன் சிலிண்டர்இல்லாமல் ஐசியூவில் இருக்கும் நோயாளி எப்படி உயிர் வாழ்வது சிரமமோ, அதைவிட பரிதாபமான நிலையில் மூச்சு திணறிக் கொண்டிருக்கிறது நமது பூமி, நாம் செய்கின்ற காற்று மாசுபாட்டினால்.

மலையிலிருந்து வழி நெடுகிலும் பாய்ந்தோடி வருகின்ற கால்வாய்களை எத்தனை இடங்களில் வழிமறித்து கான்கிரீட் வீடுகளாக மாற்றி இருக்கிறோம். எத்தனை ஓடைகளிலும் வாய்க்கால்களிலும் குப்பைகளை வீசி எறிந்து முழுவதுமாக நீர் நிலைகளை மாசுபடுத்தி இருக்கிறோம். இதன் விளைவுகளையே வெள்ளத்தின் போது அனுபவித்து வருகிறோம்.

இத்தனையையும் பொறுத்துக் கொண்டிருக்கும் பூமியிடமிருந்து நாம்கற்க வேண்டிய மிகச்சிறந்த பண்பு நலன் பொறுமை. பொறுமைக்கு எடுத்துக்காட்டான இந்த பூமியின் பண்பு நலனை மாணவரின் உள்ளத்தில் நிலை நிறுத்துவது ஆசிரியரின் இன்றியமையாத கடமை.

மாணவர்கள் தன்னுடன் பயிலும் சக மாணவருடன் பொறுமையின்றி பேசும்போது சொல்லின் அர்த்தத்தை இழப்பர். பதட்டமான நிலைக்கு தள்ளப்படுவர். பொறுமை இழந்து பேசும்போது பிறரது கருத்தினை காது கொடுத்து கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது. ‘தான் சொல்வதே சரி’ என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கும். எனவே, வெறும் வாய்த்தகரராக இருந்தது ஒருவரை ஒருவர் அடித்து காயப்படுத்துகின்ற வன்முறையாக மாறும்.

இதற்கு தீர்வுதான் என்ன? பொறுமை என்னும் மிகச்சிறந்த பண்பினை மாணவரின் வாழ்வினில் கடைபிடிக்க செய்திடுவது ஆசிரியருக்கு மட்டுமல்ல, பெற்றோரின் கடமையும் கூட.

மாணவர்களாகிய குழந்தைகள் பெற்றோரையும் ஆசிரியரையும் பார்த்தே வளர்கிறார்கள். வைரம் போன்று பிரதிபலிக்கிறார்கள். பெற்றோர் சொல் கேட்காத பிள்ளைகூட தனக்குப் பிடித்த ஆசிரியர் கூறினால் உடனடியாக ஏற்றுக் கொள்வது உண்டு. எனவே,

“பொறுமை என்னும்

பெருமைமிகு அணிகலனை

மாணவருக்கு அணிவித்து

பேரு வகை கொள்வது

ஆசிரியருக்கு மட்டுமே சாத்தியம்”

பொறுமையின்றி சொல்லப்படும் ஒவ்வொரு சொற்களும் பிறரது இதயத்தை காயப்படுத்தும். சுவரில் இடப்பட்ட துளைகளை எவ்வாறு அடைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியாதோ, அதுபோலவே பொறுமையின்றி பேசி உள்ளத்தைத் துளையிட்ட வார்த்தைகளால் புண்பட்ட இதயத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாது.

இதையே தான், நம் வள்ளுவரும்,

“தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் சுட்ட வடு.”

என்று ஏழே சீர்களில் கூறிச் சென்றுள்ளார்.

நாம் பணிபுரிகின்ற அலுவலக சூழலாக இருந்தாலும் சரி, உறவுகளை மேம்படுத்துகின்ற குடும்ப சூழலாக இருந்தாலும் சரி, பொறுமையை கடைப்பிடித்து பிறரது உள்ளத்தை வெற்றி கொள்ள வேண்டும்.

“படிப்பில் மதிப்பெண் எடுத்து

வெற்றி பெறுவது மட்டுமல்ல;

வாழ்க்கை என்பது

பொறுமையாக இருந்து

பிறர் மனங்களை வெற்றி பெறுவதே!”

என்பதை மாணவர்க்கு உணர்த்திட வேண்டும். - கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x