Published : 25 Nov 2022 06:15 AM
Last Updated : 25 Nov 2022 06:15 AM
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது என்ற அப்துல் கலாம் ஐயாவின் வரிகளுடன் இந்நாளைத் தொடங்குவோம் குழந்தைகளே!
நம்ம ஊரு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் வளைகுடா நாட்டிற்குச் சுற்றுலா செல்ல முடியுமா? அதுவும் கல்வித்துறை அமைச்சருடன்? அப்படிச் சென்றால் அந்த அனுபவம் அவர்களுக்கு எப்படி யிருக்கும்? கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போமா?
சென்ற கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவ மாணவியருக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம் வாயிலாக வினாடிவினா போட்டிகள் ஒவ்வொரு வாரமும் நடத்தப் பட்டன. வினாக்கள் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்டாலும் சிந்தித்து விடையளிக்கும் பாங்கிலேயே இருந்தன. பத்தாம் வகுப்பு மாணவர்களின் அறிவுத்திறனையும் சிந்தனைத்திற னையும் மதிப்பிடும் வகையில் அமைந்திருந்த வினாடி வினா போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களில் 68 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா நகரங்களுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கூடுதல் ஏற்பாடாக, ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தகத் திருவிழாவிற்கும் அனுமதி பெறப்பட்டது.
இந்த சுற்றுலா செல்வதற்கு முன்பு கிடைத்த ஒரு சுவையான அனுபவத்தையும் பகிர விரும்புகிறேன். மாணவர்களின் பயணம் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு விசா பெறும் ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் ஒரு மாணவனுக்கு மட்டும் பாஸ்போர்ட் காலாவதி தேதி 5 மாதங்கள் மட்டுமே இருந்ததால் (விசா பெற குறைந்தது 6 மாதங்கள் இருக்க வேண்டுமாம்) அவனது பாஸ்போர்ட்டை மட்டும் புதுப்பிக்க வேண்டிய ஒரு உடனடித் தேவை ஏற்பட்டது.
இவ்வளவு ஏற்பாடுகள் செய்தும் ஒரு மாணவனை விட்டுவிடுவதா! அன்றைய ஒரே நாளில், சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவனின் பள்ளித் தலைமையாசிரியரிடம் நிலைமையை விளக்கிக் கூறியவுடன், ஒரு ஆசிரியரை இதற்கெனப் பணித்து அம்மாணவன், தந்தை, ஆசிரியர் என மூவரும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டனர். பழைய பாஸ்போர்ட்டுடன் தத்கல் முறையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
அமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடியாக புதுப்பித்தலும் செய்யப்பட்டது. எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் புதிய பாஸ்போர்ட்டை அச்சடிக்கும் பிரிவில் நேரமாகிவிட்டது என்றவுடன் அவர்களிடம் நிலையை விளக்கிச் சொல்ல அச்சடித்தாயிற்று. இனியென்ன, பறக்க வேண்டியதுதான் பாக்கி என நினைக்கும்போது அடுத்த அதிர்ச்சி. விதிமுறைகளின்படி, புதிய பாஸ்போர்ட்டை தபாலில் மட்டுமே அனுப்புவோம் என்று கூறிவிட்டனர்.
மறுநாள், மத்திய அரசிற்கு விடுமுறை. தபால்துறை மட்டும் விதிவிலக்கா என்ன. இதற்கெல்லாம் அயர்ந்து விடுவோமா என்ன. அன்றைய மாலை தபாலில் அனுப்பப்பட்ட வண்டியுடனேயே சென்று அங்கேயே காத்திருந்து இரவு 10 மணியளவில் புத்தம் புதிய மணத்துடன் அதைக் கையில் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியான தருணம் மறக்க முடியாத மலரும் நினைவுகள்தான்.
இனி வரும் ஆண்டுகளில், இலக்கிய மன்றச் செயல்பாடுகள், கணிதப் புலமை, அறிவியல் கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புத்தாக்கப் படைப்புகள், விளையாட்டு, வினாடி வினா, திரைப்பட மன்றம் சார்ந்த செயல்பாடுகள், நூலக வாசிப்பு மற்றும் கலைத்திருவிழா போன்ற அனைத்திலுமே முனைப்புடன் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் தங்கங்களே!
எல்லாவற்றிலும் இருந்தும் அரசு பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களை வெளிநாட்டுக் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடுகள் செய்து வருகிறது. முழுமையான கற்றலுக்கு இதுபோன்ற அனுபவங்கள் பெரிதும் உதவும். - கட்டுரையாளர்: பட்டதாரி ஆசிரியை, அரசு உயர்நிலைப் பள்ளி, திருக்கண்டலம், திருவள்ளூர் மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT