Published : 24 Nov 2022 06:15 AM
Last Updated : 24 Nov 2022 06:15 AM
முதன்முதலாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு மே மாதம்ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது எதிர்கொண்ட கரோனா பெருந்தொற்று பிரச்சினை யைக் கட்டுக்குள் கொண்டுவந்த அவர் மக்களுக்கான கல்வி, மருத்துவம் மற்றும் பல்வேறு நலன்களை மக்களிடமே கொண்டு சேர்க்கும் முகமாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’, ‘இல்லம் தேடிக் கல்வி’ போன்ற புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
இந்தாண்டு மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய ‘நான் முதல்வன்’ திட்டம் தொழில்நுட்ப யுகத்தில், தமிழக மாணவர்களின் அதிநவீனத் திறன்களை வளர்த்தெடுக்கும் லட்சியத்தில் உருவான திட்டம்.
இதன் நோக்கம் என்ன? - ஸ்டாலின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “தமிழ்நாட்டு மாணவர் ஒருவர் உலகின் எந்த நாட்டு மாணவரையும் விட தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதைக் காட்டும் திட்டம் நான் முதல்வன்.”
பொதுத்துறையும், தனியார் துறையும் ஒன்றுசேர்ந்து வியூகங்களை உருவாக்கி இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகின்றன. தொடக்கத்தில் உதவி பெற்று வளர்ந்து ஒருநிலையில் தன்னைத்தானே தொடர்ந்து இயக்கிக் கொள்ளும் விதமாக திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்படுவது ஐஏஎஸ் அதிகாரி ஜெ. இன்னசன்ட் திவ்யாவின் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்தான்.
‘நான் முதல்வன்’ எப்படி இயங்கிக் கொண்டி ருக்கிறது? ஒரு திறன்மேம்பாட்டுக் களத்தில் மாணவர்களுக்கு அடிப்படை வகுப்புகள் இணையம்வழி நடத்தப்படுகின்றன. எந்தெந்த அறிவுத் துறைகளில் மாணவர்களின் திறன்கள் குறைவு என்பதை மதிப்பீடு செய்யும் அலகுகள் மாணவர்கள் தங்கள் குறைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவி செய்கின்றன. அடுத்த நிலையில் பொறியியல், கலைகள், விஞ்ஞானம், பாலிடெக்னிக், ஐடிஐ, மருந்தகத் துறை மற்றும் மருத்துவ அறிவியல் ஆகிய துறைகளில் உருவாகி வரும் புதிய திறன்களிலும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகின்றன.
பயிற்சி பெற்ற மாணவர்கள் தரமும் தகுதியும் பெற்று பெரும் நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காக வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்கும் அதிசிறந்த நிறுவனங்களையும் (மைக்ரோசாஃப்ட், டிசிஎஸ், ஆரக்கிள், எச்.சி.எல்), திறன் மேம்பாட்டு நிறுவனங்களையும் (மசை, எடுரேக்கா, எல்அண்ட்டி எடுடெக், கோர்சேரா) ‘நான் முதல்வன்’ திட்டத்தை வளர்த்தெடுக்க கொண்டு வந்திருக்கிறார் தமிழக முதல்வர்.
இந்தத் திட்டத்தின்கீழ் தகவல் தொழில்நுட்பம் முதல் புதிய தொழில்நுட்பம் வரையிலான களங்களில் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களின் பட்டியலையும், திறன்களின் பட்டியலையும் www.naanmudhalvan.tn.gov.in என்ற இணைய முகவரியில் Training Partners in Naan Mudhalvan என்ற பிரிவில் காணலாம்.
பல்வேறு துறைகளில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளைப் பற்றிய தகவல்களை ‘நான் முதல்வன்’ இணையதளம் வழியாக அறியலாம். இவற்றைப் பயன்படுத்தி புதியவர்கள் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி நிலை வேலைகளுக்கும், நிரந்தர வேலைகளுக்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்த இணையதள முகவரிகள் பின்வருமாறு: Industry Connect in Naan Mudhalvan (tn.gov.in); Jobs
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT