Published : 14 Nov 2022 06:15 AM
Last Updated : 14 Nov 2022 06:15 AM

அன்புள்ள அப்பா... அழ.வள்ளியப்பா

தேவி நாச்சியப்பன்

குழந்தைகள் மகிழ்ச்சியோடு பாட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைத் தந்தவர் எங்கள் (தேவி நாச்சியப்பன்) தந்தை குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா. இந்தப் பாடல்களை எல்லாம் எப்படி எழுதினார்? எங்கு எழுதினார்? குழந்தைக் கவிஞர் பாடல்கள் எழுதத் தனி அறைக்குள்ளோ, அமைதியான சூழலைத் தேடியோ சென்றதில்லை. குழந்தைகளோடு குழந்தையாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே அப்பா பல பாடல்களை எழுதினார்கள்‌.

அவற்றுள் ஒன்றைச் சொல்கிறேன். அப்பா இந்தியன் வங்கியில் பணியாற்றினார்கள். சென்னையில் 36 ஆண்டுகளும் காரைக்குடியில் 4 ஆண்டுகளும் பணியாற்றி ஓய்வு பெற்றார். காரைக்குடியில் இருக்கும் போது எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் அண்ணாமலை என்ற சிறுவன் இருந்தான். அவனும் அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் மாலை நேரத்திலும் விடுமுறை நாட்களிலும் எங்கள் வீட்டில்தான் விளையாடிக் கொண்டிருப்பார்கள். என்று தொடங்கி, அண்ணாமலை முன்னாலே ஆனை வருவதையும், பின்னாலே ஆடிப்பாடி ஓடி வரும் அலமுவையும் பார்த்ததாக ஒரு பாடல் எழுதினார்.

அண்ணாமலை மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். யாராவது "அண்ணாமலை அண்ணாந்து பார்த்தான் ஒண்ணுமேயில்லை" என்று கேலியாகப் பாடினால், அவனுக்காக வள்ளியப்பா எழுதிய பாடலைப் பெருமையோடு பாடுவான். 1975-ம் ஆண்டில், சர்வதேச மகளிர் ஆண்டில் பெண்களுக்காகப் பல விழாக்களும் சிறப்பு நிகழ்ச்சிகளும் பல இடங்களில் நடைபெற்றன. கவிமணி குழந்தைகள் சங்கக் குழந்தைகளாகிய நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சிறுமி "பெண்களான நாங்கதான் சிறப்பு மிக்கவர்கள். அதான் கொண்டாடுகிறார்கள்." என்றாள்.

ஒரு சிறுவன் " அப்படீன்னா ஆண்களுக்குச் சிறப்பே இல்லையா? "என்று ஏக்கத்துடன் கேட்டான். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா ஒரு பாடல் எழுதினார்கள். என்று ஒரு பாடலை எழுதிக் கொடுத்ததும் அந்தச் சிறுவனுக்கு ஒரே மகிழ்ச்சி. துள்ளி குதித்துக் கொண்டு இந்தப் பாடலைப் பாடி, "பார்த்தாயா ஆணினத்தின் சிறப்பை?" என்று பெருமிதத்துடன் கேட்டான். வள்ளியப்பா பெண்களை மதித்துப் போற்றுபவர் என்றாலும் சிறுவனின் ஏக்கத்தைப் போக்கப் பாடினார்.

தந்தை பிறந்தது புதுக்கோட்டை மாவட்டம், ராயவரம். குழந்தைப் பிரியரான நேருவை, ‘சாகித்ய அகாதமி' நடத்திய புத்தகக் காட்சியில், தமிழ்ப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த வள்ளியப்பா சந்தித்தார். நேரு, வள்ளியப்பாவிடம் குழந்தைப் புத்தகங்கள் பற்றிய விவரங்களை அக்கறையுடன் கேட்டறிந்தார். அதனால் தமிழகம் திரும்பிய வள்ளியப்பா, தான் நிறுவிய குழந்தை எழுத்தாளர் சங்கத்தில் ஆண்டு தோறும் நேரு பிறந்த நாளில் குழந்தைகளுக்கான நூல்களை வெளியிடுவது என உறுப்பினர்கள் சம்மதத்துடன் முடிவு செய்தார். அதன்படி ஆண்டு தோறும் வெளியிட்டனர். ஒரு ஆண்டு குழந்தைகள் தினத்தில் 77 குழந்தை நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்தனர்.

நேரு மீது கொண்ட அன்பால் "நேரு தந்த பொம்மை" என்ற பாடல் நூலையும்," நேருவும் குழந்தைகளும்" என்ற உரைநடை நூலையும் எழுதினார். இந்த நூலில் நேரு குழந்தைகளிடம் கொண்ட அன்பை ஒளிப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். எங்கள் தந்தை, "குழந்தைகளின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி." என்று வாழ்ந்தவர். தாம் எழுதிய பாடல் கருத்துக்களைத் தாமும் பின்பற்றினார். பகிர்ந்து உண்பது, சிரமப்படுவோர்க்கு உதவுவது, காலத்தைப் போற்றுவது, நண்பர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது எனக் குழந்தைகளுக்காகப் பாடலில் பாடிய கருத்துகளைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். ஆயிரக்கணக்கான குழந்தைகளைத் தாம் வாழ்ந்த காலத்திலும், மறைந்த பிறகும், எக்காலத்திலும் மகிழ வைக்க ஏற்ற பாடல்கள், கதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளைத் தந்தவர் வள்ளியப்பா. நூற்றாண்டு காணும் குழந்தைக் கவிஞரின் படைப்புகளைக் குழந்தைகள் படித்து மகிழ வேண்டும், பயன் பெற வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x