Published : 07 Nov 2022 06:15 AM
Last Updated : 07 Nov 2022 06:15 AM
கல்வி என்பது பள்ளியில், இன்னும் குறிப்பாக வகுப்பறையில் பெறுவது மட்டுமல்ல. அது பள்ளி வளாகத்திலும், வீதியிலும், வீடுகளிலும் விரவிக் கிடக்கிறது. கற்றுக்கொள்ள எல்லாஇடமும் திறந்திருக்கிறது, ஆனால்மனம் தான் இறுகிப் போய் உள்ளது. வகுப்பறையில் மட்டுமேகல்வி என்று திரையை மூடிக்கொண்டோம். அதுபோலவே கற்றுக்கொடுப்பவர் ஆசிரியர் என்று சுருக்கிக்கொண்டோம். குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ள இரண்டு முக்கிய நபர்கள் ஆசியரும் பெற்றோரும்தான்.
இருவருக்குமான எல்லைகள் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. பெற்றோர் நிறைய ஆசிரியரின் குணாதிசியங்களுடனும், ஆசிரியர்கள் பல இடங்களில் பெற்றோர்களின் மனத்துடனும் அணுகவேண்டியுள்ளது. இந்த இருவருக்குமான இணக்கம் மிகவும் முக்கியம். குழந்தையின் வளர்ச்சியில் எங்கே நிறை, குறை இருக்கிறது என இருவரும் பரஸ்பரம் பேசிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
அதுபோல இவர்கள் இருவரும் இணைந்து செயல்படுவதைப் பார்க்கும்போது குழந்தைகள் மத்தியில் பெரிய நம்பிக்கையையும் நேர்மறை எண்ணங்களும் விதைக்கப்படும். குன்றத்தூரில் அமைந்துள்ள பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளியில் ஆசிரியர் தின நாள் கொண்டாடப்பட்டது. இதனை ஒருங்கிணைத்தது பெற்றோர் கழகம். பெரும்பாலான பெற்றோர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். ஆசிரியர்கள் நாடகம் நடத்தினர். அவர்களுக்கு விளையாட்டுகளும் நடைபெற்றது. சின்னச்சின்ன உரைகள். குழந்தைகள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஒரு குழந்தை “எங்கள் வீட்டுச்சூழலையும் கேட்டு அதற்கு ஏற்ப பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி” என்றது. அதைக்கேட்கவே நெகிழ்ச்சியாக இருந்தது. பெற்றோர் கழகம் சார்பாக ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசாக நூல்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள் பள்ளி அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
பெற்றோர்கள் – ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடிக்கடி இணைந்து ஆலோசிக்க வேண்டும். அது, இக்காலத்திற்கு மிக அவசியமான முன்னெடுப்பாகும். நிகழ்வுகளை பெரும்பாலும் மாணவர்களை செய்யச்சொல்லி ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பார்கள். சில சமயம் பெற்றோர்கள் பார்வையாளர்களாக இருப்பார்கள். பெற்றோர்கள் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும்போது இன்னும் கூடுதலாகவும் நெருக்கமாகவும் பள்ளிக்கான சிக்கல்களையும் போதாமைகளையும் உணர்வார்கள். இயன்ற இடங்களில் எல்லாம் அவர்களின் கரங்களை நீட்டுவார்கள். இது எல்லாவித பள்ளிகளுக்கும் பொருந்தும்.பள்ளி மேம்பாட்டுக் குழுக்கள் தமிழகம் எங்கும் அதன் செயல்பாடுகளைப் அதிகரித்து வருகிறது, அதன் பணி வேறு என்றாலும் மிக முக்கியமான நகர்வு.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள்என எதனை எடுத்தாலும் அதற்கென்று தனித்தனி சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. பெற்றோர்களைப் பள்ளியின் செயல்பாடுகளுக்குள் அனுமதிக்க மறுக்கும் சூழலும் ஒருபக்கம் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சந்திப்புகள் பரவலாகநடக்கும். அதில் பெற்றோர்கள் ஒன்றாக அமர்ந்து பள்ளி நிர்வாகம்மற்றும் ஆசிரியர்களுடன் பேசுவார்கள். முன்னெடுப்புகளையும் அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும் இரண்டு தரப்பு உரையாடும்.
காலப்போக்கில் இந்த சந்திப்புகளை மாற்றிவிட்டார்கள். பெற்றோர்களைக் கூட்டாக சந்திக்க விடுவதில்லை. தனித்தனியாக ஆசிரியர்கள் சந்திக்க மட்டுமே ஏற்பாடு. ஒரு பெற்றோர் சக பெற்றோருடன் பேசவோ அறிந்துகொள்ளவோ ஒரு சந்தர்ப்பமும் இல்லை. பொதுவான வகுப்பு முன்னேற்றங்கள், குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பற்றி பேச ஒரு பொது மேடையே இல்லை. காலத்தில் மிக முக்கிய தேவையாக பெற்றோர்கள் – ஆசிரியர்கள் நல்லுறவு மாறியுள்ளது. இந்த வலுவான கூட்டணி அமைந்தால் மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகும்.
கட்டுரையாளர், சிறார் எழுத்தாளர்
"மலைப்பூ", "1650 முன்ன ஒரு காலத்திலே" ஆகியவை இவரது சமீபத்திய நூல்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT