Published : 01 Nov 2022 06:06 AM
Last Updated : 01 Nov 2022 06:06 AM
எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான மலர் வகுப்பு குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடத்தில் வெற்றி யாருக்கு என்ற பாடத்தை நடத்தினேன். அதில் சிங்க ராஜாவே ஒவ்வொரு வருடமும் வெற்றி பெறுவதை மாற்ற எண்ணிய விலங்குகள், அவரவர் திறமைக்கேற்றவாறு போட்டி வைத்து பரிசளிக்கலாம் என்று கூடிப் பேசின.
அதன்படி, கட்டெறும்புக்கு பளு தூக்கும் போட்டி, ஒட்டகத்திற்கு வேகமாக நீர் அருந்தும் போட்டி, வண்ணத்துப் பூச்சிக்கு தேன் சேகரிக்கும் போட்டி, நண்டுக்கு வளை தோண்டுதல், பல்லிக்கு பாறை ஏறுதல், தவளைக்கு தாவுதல், மரங் கொத்திக்கு மரம் கொத்துதல் என ஒவ்வொரு போட்டியும் வைத்த கதையை பாடத்தில் இருந்து சொல்லிக் கொண்டிருந்தேன். ஆர்வமாக கேட்கிறார்கள். இறுதியில் பரிசு வழங்கல் பகுதியில் கட்டெறும்புக்கு கரும்பு, ஒட்டகத்திற்கு பட்டம், வண்ணத்துப்பூச்சிக்கு கிண்ணம், குரங்குக்கு கடிகாரம் என ஒவ்வொரு பரிசும் அதில் உள்ள எழுத்துக்களை குழந்தைகள் அறிவதற்காக கொடுத்ததை விளக்குவதற்காக இங்க பாருங்கடா கட்டெறும்புல முதல் எழுத்து இருக்குதுல்ல..அதனால கட்டெறும்புக்கு கரும்பு பரிசு... அதே போல ஒட்டகம்-பட்டம், தவளை- தட்டு, நண்டு- நகப்பூச்சுனு பரிசுடானு ரொம்ப சீரியசா நான் சொல்லிட்டிருந்தேன்.
அட போங்க டீச்சர். கட்டெறும்புக்கு கரும்பு கொடுத்தா அதால எப்படி சாப்பிட முடியும், அதுக்குப்பதிலா அஞ்சுகிலோ அரிசிப் பையை கொடுத்தால் எறும்பு சாப்பிட்டுக்கிடும்ல..ன்னு விமல் சொன்னான். அப்ப ஒட்டகத்துக்குனு கேக்க, அதுக்கு ஒரு பெரிய தண்ணீர் கேன் கொடுக்கலாம்னும், குரங்குக்கு கடிகாரம் கொடுக்கறது வேஸ்ட், ஒரு தார் வாழைப்பழம் கொடுக்கலாம். அப்புறம் பல்லிக்கு பந்து வேணாம். பூச்சிகளை சருவத் தாளில் போட்டுக் கொடுக்கலாம்னு ஒருத்தனும், நண்டுக்கு நகப்பூச்சு எதுக்கு? அது திங்கறத வாங்கி கொடுக்கலாம். அன்னத்திற்கு பனம்பழம் கொடுக்கலாமாடா...ம்ஹூம்... அஞ்சாறு புழு பூச்சிகளை பிடிச்சு போடுவோம், முயலுக்கு வளையலா? பத்து கேரட்கள பரிசா கொடுக்கலாம் எனச் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.
கடைசியாக வண்ணத்துப்பூச்சிக்கு கிண்ணம் பரிசுனு போட்ருக்கே இதையும் இந்த குழந்தைகள் மாத்தி சொல்லப் போறாங்களோனு நான் யோசிக்க இல்ல டீச்சர். வண்ணத்துப் பூச்சிக்கு தேனை சேத்து வைக்க கிண்ணம் தேவைப்படும்ல அதனால அத வேணும்னா புக்ல இருக்கிறது போலவே இருக்கட்டும்னு சொன்ன குழந்தைகளைக் கண்டு அதிசயித்து நின்றேன். ஒவ்வொரு விழாவிலும் குழந்தைகளுக் கான பரிசுகளாக தட்டு, கிண்ணம் என வாங்குகிறோமே, அவர்களுக்கு தேவையான பரிசை என்றாவது யோசித்து வாங்கி இருக்கிறோமா என்ற உணர்வு எனக்குள் தோன்றி மறைந்தது. இனி அவர்களுக்கான பரிசாக வாங்கி கொடுக்கணும் என்ற சிந்தனையை உள் வாங்கி கொண்டேன். இனி குழந்தைகளுக்கு பரிசு வாங்கறப்ப அவங்க ளுக்கு தேவையானதை வாங்குவோம் தானே...
வகுப்பறைகள் எப்போதும் போதி மரம் தான். நாளும் அது சேதி தரும் தான்...
கட்டுரையாளர்: ஆசிரியை,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,
க.மடத்துப்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம்,
விருதுநகர் மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment