Published : 28 Oct 2022 06:14 AM
Last Updated : 28 Oct 2022 06:14 AM

காஞ்சிபுரத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக தேசிய யோகா போட்டியில் வெண்கலம் வென்ற ஷிவானி

ஸ்ரீ.பாக்யலஷ்மி ராம்குமார்

சென்னை: செல்போன்தான் உலகம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் இளையோர் மத்தியில், சிறு வயதில் இருந்தே யோகா பயிற்சியில் ஈடுபட்டு, தற்போது தேசிய யோகா போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் காஞ்சிபுரம் ஷிவானி. காஞ்சிபுரம் மின்நகரை சேர்ந்த தேவேந்திரன் - ரோஜா தம்பதியின் மகளான இவர், மாமல்லன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 பயில்கிறார். தனது யோகா பயணம் குறித்து நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.

அப்பாவின் நண்பர் மகன் யோகா கற்றுக் கொண்டிருப்பதை அறிந்து, அப்பா என்னையும் நான்காம் வகுப்பு படிக்கும்போது யோகா வகுப்பில் சேர்த்துவிட்டார். முதலில் விருப்பம் இல்லாமல் அப்பாவுக்காக யோகா பயிற்சி எடுத்துக் கொண்டேன். கை, கால் வலிப்பதாகக் கூறி இதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றுகூட நினைத்ததுண்டு. இதை புரிந்து கொண்டு யோகா கலையின் பெருமை, பயன்களை பக்குவமாக அப்பா கூறி ஊக்கப்படுத்தினார்.

எதிர்பாராமல் வந்த சோதனை: ஒருகட்டத்தில் என்னை அறியாமல் யோகா கலை மிகவும் பிடித்துப் போனது. யோகா மாஸ்டர் யுவராஜ் அளித்த சிறப்பான பயிற்சியால் தயாராக ஆரம்பித்தேன். ஒருமுறை மாவட்ட அளவிலான யோகா போட்டிக்குத் தயாரான போது கால் முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. இரண்டு மாத ஓய்வு கட்டாயம் என்றதும் மிகவும் வருந்தினேன். மருத்துவர் இனி யோகா செய்யக் கூடாது என்றார். அதை மீறி பயிற்சி மேற்கொண்டேன். சில நேரங்களில் நொறுக்குத் தீனி சாப்பிட்டுவிட்டு, குறிப்பிட்ட இடைவெளியில் யோகா செய்யும்போது வலி ஏற்படும். அந்த நேரத்தில்தான் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத நொறுக்குத் தீனியை சாப்பிட்டதே காரணம் என்பதை உணர்ந்து அவற்றை தவிர்த்தேன். தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு, பள்ளி விளையாட்டுகளுக்கான இந்திய கூட்டமைப்பு நடத்திய யோகா போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றேன். முதல் முறையாக யோகா போட்டிக்காக டெல்லி சென்றது நல்ல அனுபவம். சத்தீஸ்கரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று பரிசு பெற முடியாவிட்டாலும், அடுத்த போட்டியில் பரிசு பெற்றே ஆக வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். அதன்விளைவாக மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற போட்டியில் வென்று ரூ.1.50 லட்சம் பரிசுத்தொகை பெற்றேன்.

தொடர் வெற்றி: தமிழக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற போது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து 2-ம் இடம் பிடித்து இரண்டு சைக்கிள்களை பரிசாகப் பெற்றேன். எப்படியாவது முதலிடம் பிடித்து சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என்று போராடினேன். அதன்படி 3-ம் ஆண்டில் முதலிடம் பிடித்தேன். ஆனால், அந்த முறை முதல் பரிசுக்கு கோப்பைக்கு பதில் சைக்கிள் வழங்கப் போவதாக அறிவித்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே 2 சைக்கிள்கள் இருக்கிறது என்று போட்டி நடத்தியவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், சேம்பியன் ஆஃப் சேம்பியன் பட்டத்தை விட்டுக் கொடுக்க நேரிடும் என்றனர். அது எனது நீண்டகால கனவு என்பதால் அதை விட்டுக் கொடுக்காமல் மீண்டும் சைக்கிளையே பரிசாகப் பெற்றுக் கொண்டேன். திரிவிக்கிரம ஆசனம், நடராஜ ஆசனம், விருச்சாசனா ஆகியன எனக்கு பல பரிசுகளைக் குவிக்க காரணமாக இருந்தவை ஆகும். ‘கேலோ இந்தியா யூத் கேம்ஸ்’ தேசிய அளவிலான யோகா போட்டிக்கான முதற்கட்ட தேர்வு மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2021-ல்நடைபெற்றது. அதில் தேர்வானதன் மூலம் இந்தாண்டு ஜூன் மாதம் ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த பஞ்ச்குலா மாவட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 18 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றேன்.இதுவரை மொத்தம் 60-க்கும் மேற்பட்ட பதக்கங்களும், கேடயங்களும் வென்றுள்ளேன். வளர்ந்து வரும் யோகக் கலையை ஒலிம்பிக் போட்டியில் சேர்த்தால் யோகாவிற்கு உலக அளவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும். மருத்துவப் படிப்பு எனது இலக்கு. அத்துடன் யோகா பயிற்சி மையம் அமைப்பதும் எதிர்காலத் திட்டம் என்கிறார் ஷிவானி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x