Published : 19 Oct 2022 06:08 AM
Last Updated : 19 Oct 2022 06:08 AM
அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு ஆசிரியர்களிடம் 65 கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் கல்வித்துறையில் தேவைப்படும் புதிய அணுகுமுறைகள், பயிற்சிகள், மாற்றங்கள் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பித்து வரும் ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் பணியை எப்படி செய்து வருகிறார்கள்? ஆசிரியர்களின் தனித்திறமை, ஆர்வம், கூடுதல் திறன்கள், சமூக பங்களிப்பு உள்ளிட்டவைகளை ஆசிரியர் "மதிப்பீட்டு படிவத்தை" எமிஸ்(EMIS) இணையதளம் வாயிலாக நிரப்பும் பணியை விரைந்து செய்து வருகிறார்கள்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, பிரிவு 24, 29 தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு ( NCF) 2011 வகுப்பறை சூழலில் ஆசிரியரை ஆண்டுதோறும் மதிப்பீடு செய்வது பற்றி குறிப் பிடுகிறது. ஆசிரியர்களின் பங்களிப்பை நான்கு நிலை தர குறியீட்டின் கீழ் 65 வினாக்கள் மூலமாக மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆசிரியர் சார்ந்த மதிப்பீட்டு படிவம் 7 தலைப்பு களை உள்ளடக்கியது. குழந்தைகளுக்கான கற்றல் அனுபவங்களை வடிவமைத்தல் என்ற முதலாவது தலைப்பில் பாட புத்தகம் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களை பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் கற்றல் செயல் முறையை திட்டமிடுகிறேன். கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அனைத்து குழந்தைகளையும் கற்பித்தல் கற்றல் செயல்பாட்டில் ஈடுபடுத்துகிறேன் என்பன உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
பொருள் பற்றிய அறிவு மற்றும் புரிதல் என்ற தலைப்பில், நான் எனது எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரியாக நடத்துகிறேன். அவர்களை ஒருபோதும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் காயப்படுத்துவதில்லை. பள்ளிக்கு வராத குழந் தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களின் வழக்கமான வருகையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கிறேன் என்பன உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன. தனிப்பட்ட உறவு என்ற தலைப்பில் மாணவர் கள் பயமின்றி என்னை அணுகுவதை உறுதி செய்கிறேன். மாணவர்களின் சிறப்பான திறமைகளை பாராட்டி ஊக்குவிப்பதோடு அவர்களின் பெற்றோருடன் கலந்துரையாடுகிறேன். பள்ளி விழாக்களில் பங்கேற்க பொதுமக்களை ஊக்குவிக்கிறேன் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் பதில் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழில்முறை மேம்பாடு என்ற தலைப்பில் சுய கற்றல் மற்றும் பல்வேறு பயிற்சிநிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம்எனது பாட அறிவை புதுப்பித்துக் கொள்கிறேன் என்பன உள்ளிட்ட கேள்விகளும், உடல் நலம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் பாதுகாப்பை உறுதி செய்தல் என்ற தலைப்பில் மக்கும், மக்காத குப்பைகளைத் தனித்தனியாக அகற்ற மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். உடல் நலம் மற்றும் சம்பந்தப்பட்ட நிபுணர் களை அழைப்பதன் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கை மனநலம் மற்றும் உணர்ச்சி திறனை மேம்படுத்துகிறேன். உடல் மாற்றங்கள் போக்சோ சட்டம், சிறார் நீதி சட்டம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். போதை பொருள் அதன் தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்பன உள்ளிட்ட கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் சுய மதிப்பீட்டு படிவம் இரண்டு பகுதியைக் கொண்டது முதல் பகுதி 65 வினாக்களுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் தமக்கு மதிப்பீட்டை வழங்க வேண்டும்.
இரண்டாம் பகுதியாக ஆசிரியர் வழங்கிய மதிப்பீட்டை பள்ளி தலைமை ஆசிரியர் ஆய்வு செய்து 7 கேள்விகளுக்கு தம் கருத்தை ஆம் அல்லது இல்லை என பதிவு செய்கிறார். அரசு பள்ளி ஆசிரியர்களை சுய மதிப்பீடு செய்வதன் மூலம் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு பள்ளிக் கல்வித்துறையில் தேவைப்படும் புதிய அணுகுமுறைகள், பயிற்சிகள், மாற்றங்கள், யுக்திகள் கொண்டுவர பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கட்டுரையாளர்: ஆசிரியர்
அரசு தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம்
ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT