Published : 15 Oct 2022 03:02 PM
Last Updated : 15 Oct 2022 03:02 PM
மதிப்பிற்குரிய கலாம் ஐயா,
எங்களையெல்லாம் கனவு காணச் சொல்லி இன்றுவரை எங்களின் கனவு நாயகனாக, எங்களுடைய ஊக்கமாக திகழ்கிற உங்களுக்கு முதலாவதாக எங்களுடைய பிறந்த நாள் வாழ்த்தும் வணக்கமும். ‘கனவு என்பது நீ தூங்கும்போது வருவதல்ல; உன்னை தூங்க விடாமல் செய்வதே அது!’ என்று எங்களை விழித்திருந்து கனவுகள் கண்டு, அவைகளை நனவாக்கவும் கற்றுக் கொடுத்த பேராசிரியர் நீங்கள். உங்களது எழுச்சியுரை எங்களை உற்சாகப்படுத்தியது.
‘கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும்; சிந்தனைகள் செயல்களாகும்’ என்ற உங்கள் வார்த்தைகள் எங்களுக்குள் உத்வேகத்தை ஏற்படுத்தியது. 2020-ல் இந்தியா ஒரு வல்லரசாக மாற வேண்டும், உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கினை உயர்த்த வேண்டும் என்ற உங்களுடைய கனவு நனவாகும்படி, நமது நாடு படிப்படியாக முன்னேறி வருகிறது என்று இக்கடிதம் மூலம் உங்களுக்கு தெரிவிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
ஐயா, ‘இந்திய வளர்ச்சிக்கான கருவியே கல்வி’ என்று கூறி, கல்வியை மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் அன்று கனவுக் கண்டீர் அல்லவா? இன்று, இந்திய தேசத்தில் கல்வித்துறை எல்லா வகையிலும் ஏற்றத்தைக் கண்டு மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. ஐந்தாண்டு திட்டத்தின்கீழ் நமது தேசத்தின் ஆரம்ப, உயர்நிலை கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வியிலும் வசதிகள் பல பெருகி, கல்வித் துறை முன்னேறியுள்ளது. 2001-ல் வெறும் 64.80 சதவீதமாக இருந்த எழுத்தறிவு விகிதம், இன்று 74.04 சதவீதமாக உயர்ந்து உள்ளது என்று கூறுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
சுமார் 30 லட்சம் குழந்தைகள் ஆன்லைன் மூலம் கல்வியறிவு பெறுகின்றனர். மாணவர்களுக்காகப் பிரத்யேகமாக 20 ஆயிரம் வாட்ஸ்-அப் குழுக்கள் செயல்பட்டு, டிஜிட்டல் கல்வி முறை சோர்வின்றி செயல்பட்டு வருகிறது. 2009-ல் இலவச கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21A-ன் கீழ் சட்டமாக இயற்றப்பட்டு, இன்று தேசத்தின் கடைக்கோடியிலிருக்கும் குழந்தைகளுக்கும் கல்வி சென்றடைகிறது. "உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை. உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்" என்ற உங்கள் வார்த்தைகள்தான் இன்றுவரை எங்கள் கனவுகளுக்கான அடித்தளமாக விளங்குகிறது.
எங்களை விட்டு நீங்கள் மறைந்து சென்றிருக்கலாம், ஆனாலும் நீங்கள் விதைத்து சென்ற பொன் வார்த்தைகள் இன்றுவரை எங்களுக்குள் வேரூன்றி வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ராமேஸ்வரத்தில் பிறந்து, விண்வெளி பற்றி கனவுகள் கண்டு, பின் ஏவுகணைகளின் தந்தை என்று பெரும்பெயர் பெற்று, இன்றுவரை எங்களது இளைஞர்களின் முன்னோடியாக திகழ்கிற உமக்கு நாங்கள் தலைவணங்குகிறோம். உலக மாணவர் தினமாக கொண்டாடப்படும் உம்முடைய பிறந்தநாளான இன்று, உம்முடைய ‘வல்லரசு' கனவை மேலும் நனவாக்க நாங்கள் உழைப்போம் என்றும், ‘மூன்று பக்கம் கடல் கொண்ட தேசம் அல்ல இந்தியா, நான்கு பக்கமும் புகழ் கொண்ட நாடு எங்கள் இந்தியா’ என்ற பெயரினைப் பெறும்வரை நாங்கள் ஓய்வதில்லை என்றும் உறுதியளிக்கிறோம்.
கட்டுரையாளர்
எஸ்.எஸ் .சரவணன்,
சிருஷ்டி பள்ளிகள் தலைவர், வேலூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT