Published : 15 Oct 2022 01:15 PM
Last Updated : 15 Oct 2022 01:15 PM
பொக்ரான் அணுகுண்டு சோதனை. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் ஆற்றல் பற்றி புரிந்து கொள்வதற்கும் உலக நாடுகள் இந்தியாவை அணுகுண்டு தொழில் நுட்பப் பிரிவில் போட்டியாக கருதுவதற்கும் மிக முக்கியமான காரணம். இந்த பெருமைக்கு பின்னால் இருந்த இந்திய மூளை அப்துல்கலாம் என்று அப்போது எனக்கு தெரியாது. "பூமியை சுத்திகிட்டு இருக்கிற சேட்டிலைட் ஏமாற்றி நம்ம விஞ்ஞானிகள் அணுகுண்டு வெடிச்சிட்டாங்க" என்று ஆசிரியர்கள் வகுப்பறையில் பெருமை பொங்க பொக்ரான் அணுகுண்டு சோதனையை பற்றி சொன்னபோதுதான் முதன்முதலாக அப்துல்கலாம் என்ற பெயரை நான் அறிந்து கொண்டேன்.
நான் 90-களில் குழந்தையா இருந்தவன். 2000 -ம் ஆண்டின் நடுப்பகுதியில் அல்லது இறுதியில் இளைஞர்களாக இருந்த என் போன்ற அனைவருக்கும் ஆதர்ச நாயகன் டாக்டர் ஏபிஜெ. அப்துல்கலாம். அன்றைய தேதிக்கு அப்துல்கலாம் சினிமா பிரபலமோ அரசியல் தலைவரோ இல்லை. அணுகுண்டு விஞ்ஞானி. நான் கண்ட வரையில் படித்த ஒருவரை படித்த இளைஞர்கள் கோடிக்கணக்கில் பின்தொடர்ந்த ஒரே மாமனிதர் அப்துல்கலாம் மட்டும்தான். இந்தியா எப்போது வல்லரசாகும்? என்று ஒரு குழந்தை கேட்டதற்கு. 2020-ல் நாடு வல்லரசாகும் என்று சொல்லி வளரும் நாடு இந்தியா என்ற மனப்பான்மையில் இருந்த இந்திய இளைஞர்கள் அனைவரையும் 2020-ம் ஆண்டு எப்போது வரும் என்ற ஆசையை தூண்டிவிட்டவர் அப்துல் கலாம். இப்போதும் உங்களுக்கு பிடித்த இந்திய குடியரசுத் தலைவர் யார் என்று கேட்டால் இந்திய மக்களிடமிருந்து வருகின்ற முதல் பதில் ஏபிஜெ. அப்துல் கலாமாகத்தான் இருக்கும்.
"கனவு காணுங்கள்" - இதுதான் மாணவர்கள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வார்த்தை. சமூக மாற்றம் என்றுகூட சொல்லலாம். பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பது போல மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று அனைவரும் எல்லா மேடைகளிலும் கனவுகாணுங்கள் என்ற வார்த்தையை சொல்லக் கேட்டு இருக்கிறேன். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு பிறகு தூங்கும் போது வருவதல்ல கனவு, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதுதான் கனவு என்ற அப்துல்கலாமின் வார்த்தைக்கு ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி மகிழ்ந்ததை பார்த்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் தன்னம்பிக்கைக்கான ஏவுகணையாக இன்னும் நூறு ஆண்டுகளுக்கு குழந்தைகளின் மனதில் பறந்து கொண்டே இருப்பார் அப்துல்கலாம். - கட்டுரையாளர்; ஆசிரியர், அரசு உயர் நிலைப்பள்ளி, கல்லாநத்தம், கள்ளக்குறிச்சி மாவட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT