Published : 15 Oct 2022 01:15 PM
Last Updated : 15 Oct 2022 01:15 PM
கலாமிற்கு மிகவும் பிடித்த இரண்டு கண்டுபிடிப்புகள்அருணா ஹரி “தாங்கள் எப்படி இருக்கப் போகிறோம் என்று நம்புகிறவர்களோ அதைப் போலத்தான் மனிதர்கள் பெரும்பாலும் மாறுகிறார்கள். என்னால் முடியும் என்று நம்பினால் ஆரம்பத்தில் அதை முடிப்பதற்கான திறமை இல்லாதவனாக நான் இருந்தாலும் பின்னர் அந்தத் திறமையை நான் பெற்றுவிடுவேன்" என்றார் மகாத்மா காந்தி. ஆம். சாதாரண குடும்பத்தில் பிறந்த அப்துல்கலாம் பல சாதனைகள் புரிந்து மக்கள் மனங்களில் முக்கியமாக மாணவர்களின் இதயத்தில் நுழைந்து, நாட்டின் தலைமகனாய் உயர்ந்த மனிதர் அப்துல்கலாம். தன் சீரிய சிந்தனையால், சிறந்த பண்பால், மக்கள் மீது கொண்ட மட்டற்ற அன்பால் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடு்த்துக்காட்டாய் திகழ்கிறார்.
40 வருடங்களில் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது எது என குழந்தைகள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இதுதான். இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை சரி செய்ய பொருத்தப்படும் கே.ஆர்.கோரனோரி ஸ்ட்ன்ட் என்ற சாதனத்தை கண்டுபிடித்ததும், உடல் ஊனமுற்ற குழந்தைகள் சிரமமில்லாமல் நடக்க மிகவும் எடை குறைவான இலகுரக எஃப் ஆர். ஓ என்ற கேலிபர்களை கண்டிபிடித்ததும் மகிழ்ச்சி அடையும் விஷயம் என்றார். பெற்றோரின் முக்கியமான பொறுப்பு, முழு மனத்துடன், தெளிந்த அறிவும், கடும் உழைப்பும் நிறைந்த நல்ல மனிதர்களாக குழந்தைகள் உருவாக வழிகாட்ட முயற்சிப்பதே ஆகும். கற்றுக் கொள்ளவும், அறிவைப் பெறவும் உதவும் ஆசிரியர் குழந்தையின் ஆக்கத்திறனை பொங்க வைப்பதில் முன்மாதிரியாக வழிகாட்ட வேண்டும்.
பெற்றோரும், ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் செயல்பட்டால் இந்திய தேசத்திற்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைக்கும். அவரிடம் இருந்தது எல்லாம் தனக்குள் இருந்தே அதிகமாக தேடிக் கொள்ளும் வேட்கைதான். வெற்றிகளும், தோல்விகளும் சேர்ந்த கலவைதான் வாழ்க்கை. தோல்விகளிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அவற்றை துணிச்சலோடு எதிர்கொள்ளும் நெஞ்சுரம் வளர்த்து சமாளித்து மீண்டு வருவதுதான் முக்கியமானதாகும். "நீங்கள் விரும்பிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள தளராமல் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய உலகம் உங்களிடமிருந்தே தொடங்குகிறது" என்று சாக்ரடீஸ் சொன்னதுபோல தோல்விகளை கடந்து சாதிக்க உரமூட்டினார். தெளிவான கண்ணோட்டம் இல்லாத தடுமாற்றம், திசை தெரியாத குழப்பம் இதுதான் இந்திய இளைஞர்களை வாட்டும் மிகப்பெரிய பிரச்சினை. "கனவு காணுங்கள்" - வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தரும் ஆற்றல் ஒவ்வொருவருக்குள்ளும் பொதிந்து உள்ளது. வெற்றிகரமான திட்டத்தில் மிக முக்கியமான ஒரேயொரு நிர்வாக உத்தி எது என்றால் சுறுசுறுப்பான தொடர் நடவடிக்கை கள்தான். - கட்டுரையாளர்; எழுத்தாளர், பள்ளி முதல்வர், அன்பில், திருச்சி மாவட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT