Published : 12 Oct 2022 06:08 AM
Last Updated : 12 Oct 2022 06:08 AM
மரத்தின் உச்சியில், ஒரு பொம்மைக் கிளியைத் தொங்கவிட்டு, அதன் கண்களை குறி வைத்து அம்பு எய்தச் சொன்னார் துரோணர். பிறகு, “இப்போது நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்?” என்று பாண்டவர்களையும், கௌரவர்களையும் கேட்டார். இலை, மரம், கிளை, காய், பறவை, வானம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய்க் கூறியபோது அர்ஜுனன் மட்டும், “நான் ஒரு பறவையின் கண்களைப் பார்க்கிறேன்” என்று கூறினான். பதில் அளித்த அனைவருக்குமே வில்வித்தையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
ஆனால், அர்ஜீனனுக்கு மட்டுமே ஒரு சிறந்தவில்லாளியாக வேண்டும் என்ற விருப்பம்மட்டுமல்லாமல், அந்த விருப்பம் நிறைவேறுவதற்குரிய கவனச் செறிவும் இருந்தது. உண்மையில் ‘கவனம் செலுத்துதல்’ என்பதுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகத் தேவையான ஒரு வாழ்க்கைத் திறன் ஆகும். கவனத்தின் வீச்சினைப் பொறுத்தே, ஒருவரின் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்களில் எவரெவருக்கு கற்றலில் விருப்பமும், இலக்கும் உள்ளதோ, அவர்கள் மட்டும் மிகுந்த கவனத்தோடு கற்றுக் கொள்கின்றனர். மற்றவர்கள், கவனம்இன்மையால், கற்றலில் பின்தங்கிய மாணவர்களாகவோ, இடை நிற்கும் மாணவர்களாகவோ மாறிவிடுகின்றனர்.
வயதை பொறுத்தது: கவனிக்கும் திறனானது, ஒருவரின் வயதைப் போல், குறைந்தபட்சம் இரண்டு மடங்கு நிமிடங்கள், அதிகபட்சம் ஐந்து மடங்கு நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அதன்பிறகு, உடலும், மனமும் சற்று தளர்வு நிலைக்கு வந்தால்தான், மீண்டும் அவர்களால் கவனம் செலுத்த இயலும். இதற்காகத்தான், அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், ஒரு ஐந்து நிமிடங்கள் சிட், ஸ்டாண்ட் என்றோ அப், டவுன் என்றோ கூறி, முந்தைய பாட வேளையின் தாக்கத்திலிருந்து மாணவர்களின் மனதையும், உடலையும் தளர்வு நிலைக்கு கொண்டு வருவர். அதன்பிறகு கற்பிக்கத் தொடங்குவர். ஆனால், இந்தக் காலத்தில் ஆசிரியர், வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், மாணவர்களின் மன நிலையையும், கற்றல் திறனையும் கருத்தில் கொள்ளாமல், நேற்று கற்பித்துவிட்ட இடத்திலிருந்து இயந்திரத்தனமாய் கற்பிக்கத் தொடங்குகின்றனர். பாடங்கள் வெவ்வேறாக இருந்தபோதிலும், மாணவர்கள் அவர்களே தானே. மாணவர்களால் தொடர்ச்சியாக கவனம் செலுத்த இயலாது என்பதை ஏனோ ஆசிரியர்கள் மறந்து விடுகின்றனர்.
ஆரம்ப நிலையில்... எந்த ஒரு செயலிலும் ஆரம்ப நிலையில், கவனம் என்பதை தொடர்ந்து நீட்டிக்கச் செய்ய எவராலும் இயலாது. நாளாக ஆக, பழக்கத்தினாலும், விருப்பத்தினாலும்தான் கவனத்தின் வீச்சை அதிகப்படுத்த இயலும் என்பதை பெற்றோர், ஆசிரியர்கள் உள்பட அனைவரும் உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். அவ்வப்போது, அவர்களுக்கு விருப்பமான விளையாட்டுகளை விளையாடச் செய்யலாம். பாடப் புத்தகத்தையும் தாண்டி, அவர்களின் விரும்பத்திற்கேற்ப வேறு ஏதேனும் ஒரு இணைச் செயலில் ஈடுபட ஊக்கப்படுத்தலாம். கவனத்தை ஒருமுகப்படுத்தக் கூடிய வகையில், மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவற்றை அறிமுகப்படுத்தலாம்.
கல்வி இணைச் செயல்பாடுகளான மன்றங்கள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளான விளையாட்டு, பாடல்,நடனம், ஓவியம், ஆரிகாமி, திரைப்படம் இவற்றில் ஈடுபடும் போது மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்க இயலும் என்பதை அறிந்து, தற்போது பள்ளி வாராந்திர கால அட்டவணையில் இதற்கென பாட வேளைகளை ஒதுக்கி, பள்ளிக் கல்வித் துறையினர் வெளியிட்டுள்ளனர். இதன் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். மொத்தத்தில் எந்த ஒரு செயலிலும் விருப்பத்தை ஏற்படுத்தினால் மட்டுமே, கவனம் ஏற்படுத்த முடியும் என்பதை உணர வேண்டும். அதற்கான ஆர்வத்தை உண்டாக்க ஆசிரியர்களும், பெற்றோரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது அவா.
கட்டுரையாளர்: தலைமையாசிரியர்,
அரசினர் உயர் நிலைப் பள்ளி,
திருக்காலிமேடு, காஞ்சிபுரம் மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT