Published : 28 Sep 2022 06:18 AM
Last Updated : 28 Sep 2022 06:18 AM
மதுரை: மதுரை புத்தகத் திருவிழாவுக்கு வரும் பள்ளி குழந்தைகளுக்கு நுண்கலைகளை கற்றுத்தர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் புத்தகக் காட்சிக்கு வரும் மாணவர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தினமும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அறிவுத்திறனை வளர்க்கும் போட்டிகள், பட்டிமன்றம், கதை சொல்லல், நூல் வெளியீட்டு விழா, சிந்தனை அரங்கம் போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளுக்காக தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதுமிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிமாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் சுற்றுலாபோல் புத்தகக் காட்சிக்கு அழைத்து வருகின்றனர். புத்தகக் காட்சியில் பள்ளி குழந்தைகளுக்கான நுண்கலை பயிலரங்கு நடைபெற்றது. இதில் தென்னைமர ஓலைகளை வைத்து பல்வேறு கலைப் பொருட்களை உருவாக்கும் முறை குறித்து டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலகராஜ் கற்றுக் கொடுத்தார். மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து ஆசிரியர் திலகராஜ் கூறியதாவது: பொதுவாக புத்தகத் திருவிழாக்களில் குழந்தைகள் சார்ந்த நூல்கள் மூலமே அவர்களை அணுகமுயற்சி மேற்கொள்ளப்படும். இந்த புத்தகக் காட்சியில் நுண்கலை வழியே குழந்தைகளை தன்வயப்படுத்திப் பின்பு நூல்களை அவர்களுக்குஅறிமுகப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட் டுள்ளது. அந்த வகையில் தென்னைமர ஓலைகளை பயன்படுத்தி கலைப் பொருட்களை உருவாக்குவது தொடர்பாக குழந்தைகள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர். இதை அவர்கள் எதிர்காலத்தில் பிறருக்கு கற்றுத்தர ஆர்வம் காட்டுவர்.
இதுபோன்ற மென்மையான அதே சமயம் நுணுக்கமான கலைகளை கற்றுக்கொள்ளும் மாணவர்களின் மனதும் மென்மையாகும். வருங்காலத் தலைமுறையினர் தீயவற்றிலிருந்து விலகியிருக்க இதுபோன்ற கலைகளே கைகொடுக்கும். மரபு சார்ந்த இதுபோன்ற கலைகளை கற்கும்போது மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடும் நேரம் குறையும். மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த கலையினூடாக பண்டைய அளவீட்டு முறைகளான முழம், சான், விரல்கிடை, பாகம்,இஞ்ச் ஆகியவற்றையும் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT