Published : 26 Sep 2022 06:10 AM
Last Updated : 26 Sep 2022 06:10 AM
மதுரை: கரோனா கட்டுப்பாடுகளால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை (செப்.23) மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா விமர்சையாக தொடங்கி இருக்கிறது. இங்கு வருவோரை வரவேற்கும் வகையில் தமுக்கம் மைதானம் நுழைவு வாயிலில் தமிழ் காப்பிய நூல்களை ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைத்தார்போல் வடிவமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர பிரமாண்ட ‘புத்தக சிற்பம்’ பார்ப்போரை கவர்ந்திழுக்கிறது
குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், பதினென் கீழ்க்கணக்கு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் போன்ற தமிழ் காப்பிய, இலக்கண நூல்களை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்து அதன் மேல் இரு குழந்தைகள் உட்கார்ந்து திருக்குறள் வாசிப்பதுபோன்று அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பம், தமுக்கம் மைதானம் சாலையில் செல்வோரையும் புத்தகத் திருவிழாவுக்கு வரவழைக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த புத்தக சிற்பத்தின் வடிவமைப்பு, அதில் உள்ள செயற்கையான புத்தகங்களுக்கு உயிர்கொடுத்துள்ளது. சென்னை கவின் கலைக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் தாளமுத்து, சேகர் ஆகியோர்தான் இந்த புத்தக சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.
சிறுவர்களையும் சுண்டியிழுக்கிறது: இத்தகைய சிற்பத்தை வடிவமைத்தது குறித்து தாளமுத்துவிடம் பேசினோம். அவர் கூறுகையில், “புத்தகத் திருவிழாவில் பள்ளி குழந்தைகளைகவரும் வகையில் குழந்தைகளுக்கான அரங்கு ஒன்றை வடிவமைக்கவேண்டும் என்று ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அழைத்தார்கள். அதன்அடிப்படையில் புத்தகத் திருவிழாவில் பயிலரங்குகள், சிறார் திரைப்படங்கள், குறும்படங்கள், கதைவாசித்தல், கதை சொல்லுதல், சிறார் புத்தகங்கள் என அரங்கை வடிவமைக்கத் தொடங்கினோம். அதன் மாதிரியை ஆட்சியரிடம் கொண்டு சென்று காட்டினோம். அதில், தற்போது தமுக்கம் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தக சிற்பத்தையும் எடுத்துக் காட்டினோம். அப்போது, மிக சிறிய அளவிலே இந்த புத்தக சிற்பத்தை அமைக்க திட்டமிட்டிருந்தோம். அதைப் பார்த்து மகிழ்ந்த ஆட்சியர், எல்லோரும் திரும்பிப் பார்க்கும் வகையில் பெரியதாக வைக்க வேண்டும் என்று கூறி 25 அடி உயரத்தில் அமையுங்கள் என்று ஆர்வப்படுத்தினார். ஆட்சியரின் அந்த ஊக்கமே தற்போது தமுக்கம் மைதானம் முன் அந்த 25 அடி உயர புத்தக சிற்பமாக நிற்கிறது.
பொதுவாக புத்தகத் திருவிழாவைத் தேடி வருகிறவர்கள், பெரியவர்களாகவே இருக்கிறார்கள். அது பெரியவிஷயம் இல்லை. அவர்களையெல்லாம்தாண்டி பள்ளிகளில் படிக்கும் எதிர்காலதலைமுறையினரான சிறுவர்களையும்இதுவரை புத்தகத் திருவிழாவுக்கு வராதவர்களையும் வர வைக்கவும், அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை தூண்ட வேண்டும் என்ற பார்வையே இந்த புத்தக சிற்பத்தை வடிவமைக்கும் எண்ணத்தை எங்களுக்கு உருவாக்கியது.
பொன்னியின் செல்வன் சினிமா போல... புத்தகத் திருவிழா சில தினங்களுக்கு முன்புதான் தொடங்கி இருக்கிறது. ஆனால், இந்த புத்தக சிற்பத்தை அதற்கு பல நாட்களுக்கு முன்பே இங்கு நிறுவிவிட்டோம். தமுக்கம் மைதானம் வழியாக சாலையில் சென்றவர்கள் எல்லோரும் ஒரு கனம் நின்று இந்த புத்தக சிற்பத்தை நின்று ரசித்துப் பார்த்து செல்கின்றனர். அவர்களில் சிலர், உள்ளே என்ன நடக்கிறது என்று புத்தகத் திருவிழா நடப்பதற்கு முன்பே வந்து விசாரித்து சென்றுள்ளனர். அதுதான், இந்த புத்தக சிற்பம் அமைத்ததன் வெற்றி. 10 ஆண்டிற்கு மழை, வெயிலால் பாதிப்பு ஏற்படாதவாறு மரம், பைபர் உள்ளிட்டவற்றை கொண்டு இந்த புத்தக சிற்பத்தை வடிவமைத்துள்ளோம்.
இதையே ஒரு ப்ளக்ஸ் பேனராக வைத்திருந்தால் சும்மா போகிற போக்கில் பார்த்து மட்டும் சென்றிருப்பார்கள். ஆனால், சாலையில் செல்வோரும் நின்று ரசிப்பதோடு உள்ளே என்ன நடக்கிறது என்று புத்தகத் திருவிழாவையும் பார்க்க வைத்துள்ளது இந்த புத்தக சிற்பம். பொன்னியின் செல்வன் படம் திரைப்படமாகும்போதுதான் அந்த நாவலை எல்லோரும் தற்போது வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதுபோலதான், இந்த புத்தக சிற்பம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி உள்ளிட்ட தமிழ் காப்பியங்களை இதுவரை படிக்காதவர்களையும் படிக்கவைக்கும் என்று நம்புகிறோம். அதனால், இனி ப்ளக்ஸ் பேனர் போன்றவற்றை வைக்காமல் குழந்தைகளையும், பொதுமக்களையும் ரசிக்கவும், அவர்களது சிந்தனையை தூண்ட வைக்கவும் எந்த ஒரு கருத்தையும் கலைவடிவத்தில் இதுபோல் வைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இவ்வாறு தாளமுத்து உற்சாகமாக பேசினார்.
படம்: நா.தங்கரத்தினம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT