Published : 23 Sep 2022 06:12 AM
Last Updated : 23 Sep 2022 06:12 AM
சென்னை: அரசு பள்ளி வளாகத்தில் சத்துணவு சாம்பார், கலவை சாதத்திற்கான காய்கறிகள் மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செடி, கொடிகளையும் வளர்த்து மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது ராணிப்பேட்டை மாவட் டம், நெமிலி வட்டம், மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளி.
பள்ளிக்கூடம் நுழைவுவாயில், வகுப் பறை வாசல், ஜன்னல், காலியிடம், விளையாட்டு மைதானத்தின் சுற்றுப்பகுதி என ஒரு இடம் விடாமல் வண்ணமயமாகவும், ரம்மியமாகவும் காட்சியளிக்கிறது. இந்த காட்சியை கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர், கிராம மக்கள், பள்ளிக்கு ஆய்வுக்கு வரும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் என வியப்புடன் கண்டுகளிப்பது சிறப்பு.
தூக்கி வீசப்பட்ட பழைய டயர்,பிளாஸ்டிக் பாட்டில், வாளி, டிரம்,பால்பாக்கெட் டிரே உள்ளிட்டவற்றை சேகரித்து காய்கறி தோட்டத்தை உருவாக்கியுள்ளனர். இத்தோட்டத்தில் கரும்பு, வாழை, மணத்தக்காளி கீரை, முடக்கத்தான் கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணி, காரப்பட்டுக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, நந்தியாவட்டை, எலுமிச்சை, தொட்டாற்சிணுங்கி, முருங்கை, இலந்தை, பலா மரம், அருநெல்லி, வெற்றிலை,கருவேப்பிலை, கற்பூரவள்ளி, கனகாம்பரம், மல்லி, அரளி, ரோஜா, செம்பருத்தி, பட்டு ரோஸ், கஸ்தூரி மஞ்சள், வெண்டை, கத்தரி, தக்காளி, மிளகு,பச்சை மிளகாய், பரங்கிக்காய், பூசணிக்காய், நொச்சிச் செடி, திருநீற்றுப் பச்சிலை, துளசி, க்ரோட்டான் செடிகள், சிறுகுறி்ஞ்சான், பிரண்டை, கொய்யா, பசலைக்கீரை, கற்றாழை, சிறுகீரை, அந்திமந்தாரை, சிறியா நங்கை, மாதுளை, பல வண்ணங்களில் டிசம்பர் பூ, ஆவாரை, மனி பிளாண்ட் செடிகள், வேம்பு மரம், புங்க மரம் என பட்டியல் நீள்கிறது. இந்த காய்கறித் தோட்டத்துக்கு பல்லுயிர் பெருக்க பூங்கா என பெயரிட்டுள்ளனர்.
மரக்கன்றில் மாணவர் பெயர்: இது எப்படி சாத்தியமானது என்று இப்பள்ளித் தலைமை ஆசிரியை தி.பரமேசுவரி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்... சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை மாணவ, மாணவியர் மாதம் ஒருமுறை தங்களால் முடிந்தவரை எடுத்து வரும்படி கேட்டுக் கொண்டோம். கிராமம் என்பதால் மாணவர்களும் விரும்பி எடுத்து வந்து பள்ளிக்கு உதவினர். இதன் நீட்சிதான் காய்கறி தோட்டம்.
தவறாக பயன்படுத் தப்பட்டு வந்த பள்ளி கட்டிடத்தின் பின்புறம், நடைபாதையை அரசு வழங்கிய நிதியில் சீர்படுத்தி காய்கறி தோட்டம் அமைத்தோம். முதலில் சாம்பார், கலவை சாதங்கள், கூட்டு பொரியலுக்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டோம். அதனையடுத்து ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்க மூலிகை செடிகள், பழங்கள், கீரைவகைகளையும் வளர்க்கத் தொடங்கினோம். பள்ளியில் உள்ள காலியிடங்கள் அனைத்திலும் மரம், செடி, கொடிகள் வளர்க்கிறோம்.
பள்ளியின் பகுதிநேர ஆசிரியர் சேது மாதவன்தான் காய்கறித் தோட்டத்தைப் பராமரித்து வருகிறார். பள்ளியில் உள்ள சுற்றுச்சூழல் மன்றம்,பசுமைப் படையில் உள்ள மாணவர்கள் சுழற்சி முறையில் விடுமுறை நாட்களில் காய்கறித் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கின்றனர். வகுப்பறை, வராண்டா என எல்லா இடத்தை பசுமையாக்கியுள்ளோம்.
பள்ளியின் 600 மாணவர்களில் ஒவ்வொருக்கும் மரக்கன்று கொடுத்து அவர்களே நட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிக்கச் செய்வதுடன் அந்த மரக்கன்றில் அவர்களது பெயரையும் எழுதிவைப்பது எதிர்கால திட்டம். இதன்மூலம் மாணவர்களுக்கு இன்னொரு உயிர் மீது கரிசனம் ஏற்படும். மாணவர்களின் தனிப்பட்ட பண்பில் மாற்றம் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கம் என்கிறார் தலைமை ஆசிரியை பரமேசுவரி.
காய்கறி தோட்டம் மட்டுமல்லாமல் வண்ணங்களால் மிளிரும் வகுப்பறைகள், வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் சுற்றுச்சுவர்கள், தூய்மையாகப் பராமரிக்கப்படும் பள்ளி வளாகம் என தனியார் பள்ளிகளை மிஞ்சுகிறது மேலபுரம் அரசு மேல் நிலைப்பள்ளி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT