Published : 22 Sep 2022 06:23 AM
Last Updated : 22 Sep 2022 06:23 AM
குடும்பத்தினால் எந்தவிதமான அக்கறையும் செலுத்த இயலாத ஒரு குழந்தை. அக்குழந்தை பள்ளி செல்கிறதா? பயில்கிறதா? என்று கவலைப்படும் வாய்ப்பு அக்குடும்பத்திற்கு இல்லை. சில நேரம் அக்குழந்தை பள்ளியைவிட்டு இடைநிற்றல்கூட நேர்ந்துவிடும். அப்படிப் பட்ட சூழலில் அக்குடும்பமும் கவனிக்காமல் பள்ளி முறையாலும் (School system) கவனிக்க இயலாத சூழலில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு அக்குழந்தை தனது கல்வியைத் தொடர நினைக்கிறது.
இது அப்பள்ளியின் கவனத்திற்கு வந்தவுடன் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தையின் இடைக்காலங்களில் இழந்ததை கல்வி வாய்ப்பை அந்த பள்ளியின் ஆசிரியர்கள் சிறப்பு ஏற்பாடுகள் மூலம் உறுதிசெய்கின்றனர். இவையெல்லாம் இன்று சட்டபூர்வமான ஏற்பாடுகள். யாருடைய தயவோ தாட்சண்யமோ அக்குடும்பத்திற்கோ அக்குழந்தைக்கோ தேவையில்லை.
ஆனால் 2000-ம் ஆண்டிற்கு முன்பெல்லாம் இதுபோன்ற சிந்தனைகள் அவ்வளவாக பரவலாகவில்லை. பள்ளிகளில் கூட தேக்கப்பட்டியல் என்று ஒரு பதிவேட்டைப் பராமரித்துக் கொண்டிருந்தனர். இரண்டாண்டு, மூன்றாண்டுகள் ஒரே வகுப்பில் தேக்கமடைந்து இடையே நின்றுவிட்ட குழந்தைகள் ஏராளம். இதனை மனதில் கொண்டே எட்டாம் வகுப்பு வரை எவ்விதமான பொதுத்தேர்வுகளும் கூடாது எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே பள்ளி சேர்ப்பிற்கும் எவ்விதமான தேர்வும்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் ஆகச்சிறந்த கூறுகளில் மேலே சொன்ன குழந்தைகளின் கல்வி உரிமைக்கான கூறுகள் மிகவும் ஆரோக்கியமானவை.\
இந்தியா போன்ற சமூகரீதியான, பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் நாடுகளில் இன்னும் பல ஆண்டுகளுக்கு இதுபோன்ற ஏற்பாடுகள் அவசியமானதே.
தற்போது தமிழக அரசால் உருவாக்கப்படும் கூறுகள் இந்த அடிப்படை அம்சங்களை மனதில் கொள்ளும் என நம்புவோம்.
தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கை ஒவ்வொரு குழந்தையையும் தனிப்பட்ட கற்போராக பார்க்கும் மனப்பாங்கை ஆசிரியர்களின் மனதில் விதைக்கும் வண்ணமும் அதனை உறுதிப்படுத்தும் ஏற்பாட்டை உள்வாங்கிக் கொள்வதாகவும் அமைய வேண்டும். குழந்தைகள் இடைநிற்றலின்றி கற்கும் வாய்ப்பை கிராம சமூகமும் குடும்பங்களும் உறுதிசெய்யும் சமூகசூழலை ஏற்படுத்தித் தர ஏதுவாக்க வேண்டும்.
இதற்காக மாநில கல்விக் கொள்கையில் மேலும் கவனம் செலுத்தவேண்டிய கூறுகள் சிலவற்றையும் காண்போம்.
காலிப்பணியிடங்கள்
காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒவ்வொரு ஒன்றியத்திலும் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட ஏனைய நீண்ட விடுப்பில் செல்லும் ஆசிரியர்களின் இடங்களில் தற்காலிகமாக நிரப்ப தேவையான 10 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் இருப்பில் வைக்கும் ஏற்பாடு வேண்டும்.
மாநில அரசு கலைத்திட்டத்தையும் பாடத்திட்டத் தையும் மட்டும் வரையறை செய்துவிட்டு, இதன் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு மாவட்ட அளவிலான, ஒன்றிய அளவிலான பாடத்திட்டத்தை தயாரிக்கும் திறனை ஆசிரியர்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும்.
குழந்தைகள் தெரிந்ததை வெளிப்படுத்தும் தொடர் ஏற்பாட்டிற்கு வழிவகை செய்வதன் மூலம் தன்னம்பிக்கை பெறும் ஏற்பாடாக தேர்வு முறைகள் அமைய வேண்டும். பொதுவான தேர்வு முறை என்பது எட்டாம் வகுப்பு வரை நிச்சயம் அனுமதிக்கக்கூடாது.
குழந்தைகளின் அடைவுத்திறனில் ஏற்படும்பின்னடைவிற்கான காரணங்களை ஆசிரியர்கள் சுயவிமர்சனமாகப் பார்ப்பதை உறுதிசெய்ய வேண்டும். மாறாக தண்டனை, கண்டிப்பு போன்றவைதவிர்க்கப்பட வேண்டும். ஆசிரியர்களின் அச்சமற்றசூழலில் பணிகளை மேற்கொள்ளும் சூழல் மேம்படவேண்டும். கற்றலில் தொழில்நுட்பங்களின் பங்கு அதிகரிக்க வேண்டும். பள்ளி மேலாண்மையில் தொழில்நுட்பப் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளித்து அதற்கான தனியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT