Published : 22 Sep 2022 06:23 AM
Last Updated : 22 Sep 2022 06:23 AM

வெற்றி நூலகம்: ஆயிரத்துக்கும் அதிகமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்!

ம.பரிமளா தேவி

மேதமை என்பது, தொண்ணூற்றெட்டு சதவிகிதம் முயற்சியும், இரண்டு சதவீதம் ஆர்வமுமாகும் என்று சொன்னவர், அனைவராலும் ஆல் என்று அழைக்கப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன்.

இன்று நாம் வெளிச்சத்தில் இருப்பதற்குக் காரணம் அவர்தான். மின்சார பல்பை 1879-ல் கண்டுபிடித்தார். கிராமபோன். கினிட்டோஸ்கோப், சினிமா ப்ரொஜக்டா், சிமெண்ட் காங்கிரீட் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர். மிகமுக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கை வரலாற்றை யூமா வாசகி எழுதிய “எடிசனைப் பற்றிய சின்னஞ்சிறு கதைகள்” புத்தகத்தின் மூலம் எளிமையாகவும் சுருக்கமாகவும் அறியலாம்.

ஆசிரியரால் முடியாததை செய்த தாய்

தன்னுடைய சிறுவயதில் இருந்தே துருதுருவென்று எதாவது செய்துகொண்டே இருக்கும் சிறுவன் ஆல். ஒன்றையும் படிப்பதில்லை, தன் பேச்சைக் கேட்டு நடப்பதில்லை, எப்போதும் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், பாடங்களை நடத்தும் போது அதைக் கவனிக்காத பையன், பள்ளிக்கூடத்திற்கு வருவதில் ஒரு பயனுமில்லை என்று ஆசிரியரால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுவனாகத்தான் இருந்தான். பிறகு தன் தாய் அளித்த பயிற்சியினால் பத்து வயதிற்குள் நிறைய புத்தங்களைப் படித்தான்.

பன்னிரண்டு வயதில் பெற்றோருக்குச் சிரமம் கொடுக்காமல் புத்தகங்களுக்கும் ஆராய்ச்சி உபகரணங்களுக்கும் வேண்டிய பணத்தைச் சம்பாதிக்க ரயில் வண்டியில் வேலைக்குச் சேர்ந்தான். சேர்ந்த முதல் நாளே நகரத்தில் உள்ள நூலகத்துடன் தொடா்பு ஏற்படுத்திக் கொண்டான். அங்கு ஏராளமான புத்தகங்கள் இருந்தன. ஆல் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கவில்லை. ரயிலின் லக்கேஜ் வேனில் தனக்கென்று கொஞ்ச இடம் கேட்டு பெற்று பழைய அச்சு இயந்திரத்தை வைத்து பத்திரிகையைத் தொடங்கினான். உலகத்திலேயே மிகவும் குறைந்த வயதுடைய பத்திரிகை ஆசிரியா் தாமஸ் ஆல்வா எடிசன் தான். மேலும் ரயில் பெட்டியில் தனது ஆராய்ச்சிகளையும் தொடங்கினான்.

சினிமா கேமரா கண்டுபிடிப்பு

ஒரு நாள் தன் நண்பர்கள் சிலரை வீட்டிற்கு அழைத்து வந்தார் எடிசன். நீங்கள் யாராவது பேசும் எந்திரத்தைக் கண்டிருக்கிறீர்களா? எந்திரம் பாடல் பாடும். என் குரலை அதில் பதிவு செய்திருக்கிறேன் என்றார். அதனூடே ஊசி நகரும்போது பதிவு செய்த ஓசையை மீண்டும் கேட்கமுடியும் என்றார். நண்பர்கள் ஏதொ மாய மந்திரம் என்று நினைத்தார்கள்.

ஒரு நாள் ரயிலில் எடிசன் போஸ்டன் நகருக்கு ஓய்வெடுக்க சென்று கொண்டிருந்தார். வெளியே ரயிலின் வேகத்திற்கிசைவாக காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன. குன்றுகள் நதிகள், வயல்கள், இடையில் கிராமங்கள், மனிதர்கள் இப்படிக் காட்சிகள் ஒவ்வொன்றாகத் தோன்றி மறைந்தன. இப்படிப்பட்ட காட்சிகளை எடிசன் ரயிலிலிருந்து முன்பும் கவனித்து இருக்கிறார். அவற்றின் அசைவு, நிமிடத்திற்குள் ஏற்படுகின்ற மாற்றங்கள் எல்லாவற்றையும் ஒரு குழந்தையின் ஆவலுடன் எடிசன் கவனித்தார். “அசைகின்ற சித்திரங்கள்” எனத் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

பிறகு போட்டோ எடுப்பதைப் பற்றியும் அதில் பயன்படுத்துகிற பிலிமைப் பற்றியும் மிக விரிவாகப் படித்துப் புரிந்து கொண்டார். அதிலிருந்து திரைப்படம் எடுக்கும் கேமராவை உருவாக்கினார். ஆயிரத்துக்கும் அதிகமான கண்டுபிடிப்புகளையும் எடிசன் நிகழ்த்தினார். ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் செய்த எடிசன் எண்பத்து மூன்று வயதுவரை வாழ்ந்தார்.

குழந்தைகளுக்கு சிறுவயதிலே என்னென்ன புத்தகங்களை வாசிக்க அளிக்கலாம் என்ற கேள்வி பலரிடம் ஏற்படுவதுண்டு. கதைகள் மட்டும் இல்லாமல் வரலாற்றையும் அறிமுகப்படுத்தலாம். இப்படியானதொரு வாசிப்பு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாய் அமைகிறது.

கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை, அரசு மேல்நிலைப்பள்ளி, வெலக்கல் நத்தம், திருப்பத்தூர் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x