Published : 20 Sep 2022 06:10 AM
Last Updated : 20 Sep 2022 06:10 AM
அவை கிடைத்தற்கரிய பொருட்கள் அல்ல. இருந்தும் களிப்பைத் தந்தன. அஞ்சு காசுக்கு கமர்கட்டை வாங்கி துணியில் சுற்றி காக்காகடி கடித்து பகிர்ந்து உண்டபோது கிடைத்த சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்குமா என்று தெரியவில்லை. சிறுவர்கள் உள்ளம் மகிழ எத்தனை எளிய மிட்டாய்கள் இருந்தன!
பஞ்சுமிட்டாய் - பஞ்சாய் உள்ளே போன மிட்டாய் சுருங்கி கரைந்து நாவையும், உதட்டையும் ரோஜா வண்ணமாக்கும். “பஞ்சுமிட்டாய் சேலைக்காரி” என பாடலே எழுதும் அளவுக்கு பஞ்சுமிட்டாய் கலர் முத்திரை பதித்துவிட்டது.
தேன் மிட்டாயை சுவைக்கும்போது அதன் உள்ளிருக்கும் ஜீரா நாவில் இனிக்கும். பள்ளியின் வாசலில் விற்கும் காகிதமிட்டாய் கடித்ததும் நொறுங்கும். ஆரஞ்சு சுளை போன்ற மஞ்சள், ஆரஞ்சு வண்ண மிட்டாய்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்றும் எல்லா இடங்களிலும் வழங்கப்படும். கடக் முடக்கென்று கல்கோனாவை கடிக்கும்போது உடைந்த கடலை வெல்லத்துடன் சேர்த்து சுவைக்கும்.
ஜல் ஜல் ஓசை! - அப்புறம் அந்த அருமையான ஜவ்வு மிட்டாய். ஜல் ஜல் என சத்தம் கேட்டதும் வீதிக்கு ஓடுவோம். கம்பின் உச்சியில் இருக்கும் பொம்மை கைதட்டும் ஒலிதான் அது. கைகளில் பிணைக்கப்பட்டு இருக் கும் பித்தளை தகடுகளை தட்ட ஒரு கயிற்றைக் கட்டி மிட்டாய்க்காரர் கால் கட்டை விரலில் வளையத்தோடு இணைத்து இருப்பார். கட்டை விரலை அசைப்பதன் மூலம் கயிறு இறுக்கப்பட்டு பித்தளைத் தகடுகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஜல் ஜல் என்று ஒலி எழுப்பும். அதுதான் குழந்தைகளை அழைக்கும் மந்திர ஓசையாகும். வரி வரியாக பல நிறங்களில் ஜவ்வு மிட்டாய் பெரிய மூங்கில் கழியில் சுற்றப்பட்டிருக்கும்.
மிட்டாய்க்காரர் நாலணா, எட்டணாவிற்கு ஏற்றவாறு மோட்டார் வண்டி, தேள், பாம்பு, மயில், கைக்கடிகாரம், நெக்லஸ் போன்ற பொம்மைகள் செய்து தருவார்.கொசுறாய் சின்ன மிட்டாயை கன்னங்களில் ஒட்டுவார். சில நேரங்களில் மீசை போல ஒட்டிவிடுவார். ஜவ்வு மிட்டாயை கன்னங்களில் ஒட்டுவார். சில ஜவ்வு மிட்டாயை உடனே சாப்பிடாமல் எல்லோரிடமும் அதைக் காட்டி, பெருமைப்பட்டுக் கொள்வோம். இந்த மிட்டாயை சுவைத்துச் சாப்பிடும் ஆனந்தமே தனிதான். "பப்பர் மிண்ட்" வாங்கித் தருவதாகச் சொல்லி தாத்தா வயலுக்கு அழைத்துச் செல்வார். மதியம் வரும் பொரி உருண்டைக்காரம்மா பொரி உருண்டை தருவார். இரவு ஏழரை மணிக்கு "டிங் டிங்" ஒலியுடன் வரும் "பாதாம் மிட்டாய்" எனப்படும் சோன்பப்படி இரவு நேரத்தை இனிப்பாக்கும்.
சூட மிட்டாய், சீரக மிட்டாய், தேங்காய் மிட்டாய், கடலை மிட்டாய், குச்சி மிட்டாய், எள்ளு மிட்டாய் இவற்றுடன் இலந்தை வடை, பனங்கிழங்கு, குருவிரொட்டியும் இணைந்து குழந்தைப் பருவத்தை குதூகலிக்க வைத்தன என்றால் மிகையாகாது. இன்றைய குழந்தைகளின் உலகில் இதுவரை வர்ணித்த ஓசைகளும் இல்லை, தித்திக்கும் ஊர்கார மிட்டாய்க்களும் இல்லை என நினைக்கும் போதுதான்... - கட்டுரையாளர், எழுத்தாளர்,தனியார் பள்ளி முதல்வர், தொடர்புக்கு: arunahari@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT