Published : 06 Sep 2022 06:08 AM
Last Updated : 06 Sep 2022 06:08 AM
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய மாதிரி கால அட்டவணை அனுப்பப்பட்டுள்ளது. இக்கல்வியாண்டில் புதுமைகள் ஏதேனும் புகுத்தப்பட்டுள்ளதா என்று பார்த்தேன். வியந்தேன்.
ஆம். ஒவ்வொரு வேலை நாளிலும் மதிய உணவு இடைவேளை முடிந்தவுடன் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு 30 நிமிடங்களும் 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு 20 நிமிடங்களும் புத்தகங்கள் வாசிக்கவும் செய்தித்தாள் வாசிக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துடன், வழக்கமாக வழங்கப்படும் வாரம் ஒருமுறை நூலகப் பாடவேளையும் 4 முதல் 12-ம் வகுப்புகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
என்னுடைய மாணவப் பருவத்தில் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த என் பெற்றோர் எடுத்த பெருமுயற்சிகள் என் கண்முன்னே வந்து சென்றது. நேரமின்மை என்ற ஒரே காரணத்தை நான் எத்தனை விதமாக சொல்லி செய்தித்தாள் வாசிப்பதில் இருந்து தப்பித்திருக்கிறேன்.
என் வயதொத்த மாணவர்கள் தொலைக்காட்சி ஆதிக்கத்தில் சிக்கத் தொடங்கியிருந்த காலம் அது. எனக்கென்று ஒரு உலகத்தை நானே உருவாக்கும் வயதில் நூல்கள் வாசிப்பை நான் எனதாக்கிக் கொண்டேன். ‘நற்செயல்களை ஒத்திப்போடுதல்’ என்பது எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் தண்டனைதான் என உணர்ந்து கொண்ட தருணம்.
ஒவ்வொரு நூலை வாசிக்கும்போதும் அந்த நூலாசிரியரின் கருத்தையும் அதை அவர் வெளிப்படுத்தும் விதத்தையும் பிரச்சினைகளை அவர் அணுகியிருக்கும் முறையையும் மதிப்பிடவும் ரசிக்கவும் கற்றுக்கொண்டேன்.
இந்த அகன்ற உலகத்தை ‘நூல் வாசிப்பு’ நமக்கு விரைவாக அறிமுகப்படுத்தி விடுகிறது. ஆம். மிகப்பரந்த இம்மண்ணின் வாசத்தையும் அதில் வாழும் மனிதர்களின் உள்ளங்களையும் புத்தகங்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். இன்று, பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாளில் சராசரியாக 20 நிமிடங்கள் வாசிப்பிற்காக கொடுக் கப்பட்டு உள்ளதால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என சிந்திக்கத் தொடங்கினேன்.
வாசிப்பதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால், இன்னும் வாசிப்பில் முழுமையாக ஈடுபடாத மாணவர்களுள் என்ன மாற்றம் நிகழும் என்று பார்ப்போம்.
முதல் வாரத்தில், வெறும் பார்வையாளனாக இருக்கும் மாணவன் சிறிது சிறிதாக, புத்தகங்களைக் கையில் எடுத்து பதிவேடுகளில் இடம்பிடிப்பான். அடுத்து, பிரித்துப்பார்க்கவும் படங்களைப்பார்க்கவும் பக்கங்களைத்துழாவவும் துவங்குவான்.பக்கங்கள் குறைவாக உள்ள நூல்களை எடுத்துப் பகுதியாக வாசிக்கத் தொடங்குவான்.
இதனால் அதிக எண்ணிக்கையில் உள்ள புத்தகங்களைத் தம் பள்ளி நூலகத்திலிருந்து எடுத்ததாக பெருமைப்படுவான். இவ்வாறு வாசிப்பதை ஊக்கப்படுத்துவதால், ஒவ்வொரு நாளும், அவனுள் ஏற்படும் சிந்தனை மாற்றம் அவனை மென்மேலும் வாசிக்க வைக்கப்போகிறது.
பெரும் சவால்
எனினும், பாடநூல்களைத் தாண்டிய புத்தகங்களை வாசிப்பது, அவர்களுக்கு எப்போதும் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. மதிப்பெண்ணை நோக்கிய மாணவர்களின் ஓட்டமே அதற்கு மிக முக்கியக் காரணம் ஆகும். நூலகப் பாடவேளைகளில் ஒவ்வொரு மாணவரும் புத்தகம் எடுக்கும் மற்றும் திரும்ப அளிக்கும் தேதியும் நூலகச் செயலியில் அப்புத்தகத்தின் பெயருடன் உள்ளீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு அவரவர் பள்ளிகளிலேயே பல்வேறு நூல்களுடன் உள்ள நூலகங்களும் அவற்றை எடுத்து வாசிக்க நேரமும், ஆசிரிய ரின் வழிகாட்டுதலும், நூல்வாசிப்பு சார்ந்த போட்டிகளும், மாநில அளவில் சிறப்பு முகாமில் கலந்துகொள்வதும், தலைசிறந்த எழுத்தாளர்களை சந் தித்து உரையாடுவதும், வெற்றி பெற்றவர்களுக்கு கல்விச் சுற்றுலாவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாகரிக உலகின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகத் திகழும் மின்னணு சாதனங்களின் பிடியில் விட்டில் பூச்சிகளைப்போல் சிக்கிக் கொண்டிருந்தாலும் நீங்கள் பள்ளியில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் அனைத்து செயல்களிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவதற்கு நூல் வாசிப்பு பேருதவியாக இருக்கும் என்பதை என்னைப்போல் நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.
அரும்புகளே! “உடலுக்குஎப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு” என்ற சிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்றைப் பின்பற்றுவோம். நூல் வாசிப்பை நேசிப்போம். சுவாரசியமாய் சுவாசிப்போம்.
கட்டுரையாளர், ஆசிரியை,
அரசு உயர்நிலைப்பள்ளி,
திருக்கண்டலம், திருவள்ளூர் மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT