Published : 26 Aug 2022 06:12 AM
Last Updated : 26 Aug 2022 06:12 AM
சென்னை: மாணவர்களின் கற்றல் இடைவெளி சீராகும் வரை இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் மேலும் கூறியதாவது:
கரோனா காலத்தில் கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி இருந்த மாணவர்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதற்காகத் தொடங்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்கள் இன்னும் தேவைப்படுகின்றனவா?
கரோனா காலம் ஏற்படுத்திய தாக்கம் மற்ற எல்லா வயதினரையும்விட மாணவர்களை பெருமளவில் மனதளவில் பாதித்தது. அவர்களுக்கான கற்றலை அவர்களுக்கு விரும்பும் வகையில் வழங்குவதற்காகத்தான் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் கொண்டு வரப்பட்டது.
தான் சார்ந்திருக்கிற ஊர், தெருவில் வசிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களின் மூலம் கல்வியை மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். கடந்தஜூலை 8-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சியில் 2 லட்சமாவது இல்லம் தேடிக் கல்வி மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். மாணவர்களின் கற்றல் இடைவெளி சீராகும் வரை இத்திட்டம் தொடரும்.
அதிமுக அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தாலும் பள்ளிக் கல்வித்துறையை பொருத்தவரையில் கடந்த 10 ஆண்டுகளில் நோட்டுப் புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளிலேயே 100 சதவீதம் சென்று சேர்ந்துவிடும். ஆனால் தற்போதைய ஆட்சியில் தொடர் தாமதம் நிலவுகிறது. காலணி, புத்தகப்பை உட்பட இதர பொருட்களின் விநியோகத்திலும் இதேநிலை தான் நீடிக்கிறது. இந்த வழக்கமான பணிகளில் தொய்வு ஏற்படக் காரணம் என்ன?
கடந்த காலங்களில் மாணவர் களுக்கான கல்வி உபகரணங்களை தாமதமாக வழங்கியவர்கள், இப்போது தாமதமாக வழங்குவதாக குற்றம் சொல்கிறார்கள். இதுபோன்ற வீண் குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல் வருங்காலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் நுழையும் போதே கல்வி உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு முயற்சிக்கிறோம்.
கரோனா பரவலுக்குபின் சுமார் 5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்தனர். ஆனால், போதுமான உட்கட்டமைப்பு வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் அவர்களில் 20 முதல் 30 சதவீதம் பேர் மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். அரசுப் பள்ளிகளை நாடி வந்த மாணவர்களை தக்க வைக்க அரசு தவறி விட்டதா?
‘அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம்’ எனும் கொள்கையை நோக்கித்தான் எங்களின் பயணம் சென்று கொண்டிருக்கிறது. பெற்றோர் தங்களின் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். அதற்கு நாம் தடைபோட முடியாது. நாங்கள் எங்கள் அரசு பள்ளி சார்பாக மாணவச் செல்வங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.
அரசுப்பள்ளிகளில் தற்போதைய பிரச்னைகளில் மிக முக்கியமானது ஆசிரியர் பற்றாக்குறை. நமக்கு 17 ஆயிரத்துக்கும் மேலான ஆசிரியர்கள் தேவையுள்ளது. அடுத்த 2, 3 ஆண்டுகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஒய்வு பெறவுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தை கல்வித்துறை மெத்தனமாக கையாள்வதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனரே?
மெத்தனமாக கையாள்வது என்றுஇல்லை! மென்மையாக கையாள்கி றோம். மாணவர்களின் நலனுக்காகத்தான் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். ஆனால் அதற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்தபிறகு அனைத்து பள்ளிகளிலும் தேவையான ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT