Published : 24 Aug 2022 09:09 AM
Last Updated : 24 Aug 2022 09:09 AM

புதிய கல்வி கொள்கை பற்றி அமித் ஷா கருத்து: சிறந்த தேசமாக இந்தியா உருவாகும்

போபால்

தேசிய கல்விக் கொள்கை மாணவர்களை சிறந்த மனிதனாக உருவாக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நாட்டின் புதிய தேசிய கல்விக் கொள்கைகுறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தேசிய கல்விக் கொள்கை, பொதுமக்களின் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கிறது. இதற்கு முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவரை ஒரு துறையில வெற்றிகரமான நிபுணராக மாற்ற வடிவமைக்கப்பட்டது. ஆனால் புதிய கல்விக் கொள்கை ஒரு மாணவனை சிறந்த மனிதனாக மாற்றுவது மட்டுமல்லாமல், இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும். நாடு என்பது ஆறுகள் அல்லது மலைகளால் மட்டுமே சிறந்த நாடாக மாறாது.

ஒரு நாடு சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவை. அப்படிப்பட்ட தன்னம்பிக்கையும் ஆளுமையும் மிக்க மனிதர்களாக மாணவர்களை உருவாக்கும் வகையில் சிறந்த கல்வியாளர்களால் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிக்கும். ஆங்கிலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடையே தாழ்வு மனப்பான்மையை வளர்த்து, தங்கள் காலனித்துவ ஆட்சியை நீட்டிக்க முயன்றனர்.

ஆனால், புதிய கல்விக் கொள்கையில் இந்திய கலைகள், கலாச்சாரம், தாய்மொழி ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது நமது நாட்டு மாணவர்களை மட்டுமின்றி, வெளிநாட்டு மாணவர்களையும் நிச்சயம் ஈர்க்கும். கல்வித் துறையுடன் தொடர்புடைய அனைவரும் தேசிய கல்விக் கொள்கை குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டும். எதிர்கால தலைமுறையினரின் வாழ்வும் நமது நாடும் வளமானதாக உருவாக புதிய தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x