Published : 17 Aug 2022 07:28 AM
Last Updated : 17 Aug 2022 07:28 AM
மதுரை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி திவ்யஸ்ரீ அகில இந்திய மதுரை வானொலி நிலையத்தில் ஒரு மணி நேரம் ஆர்.ஜெ.வாக (தொகுப்பாளராக) செயல்பட்டு அசத்தினார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிப்பவர் திவ்ய.
அகில இந்திய வானொலியில் பேசுவதற்கு ஆர்வமாக இருந்த இவருக்கு, பள்ளி ஆசிரியை முத்துலட்சுமி உரிய பயிற்சி அளித்தார். இந்நிலையில், மாணவியின் திறமையை அறிந்த பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் அகில இந்திய மதுரை வானொலி நிலையத்தைத் தொடர்பு கொண்டு மாணவி திவ்யஸ்ரீ ஆர்.ஜெ.வாக செயல்பட அனுமதி பெற்றார்.
அதையடுத்து தேவகோட்டையில் இருந்து மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவியை அழைத்துச் சென்றார். அங்கு அகில இந்திய மதுரை வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி தலைவர் தாராதேவி, ஒலிபரப்பு பொறுப்பாளர்கள் ஜேக்கப் ஜெபரூபன், புகழ் மாரிமுத்து ஆகியோர் மாணவி திவ்யஸ்ரீயை வரவேற்று, வானொலி நிலையத்தின் ஒலிப்பதிவு அறைக்கு அழைத்துச் சென்றனர்.
"கண்ணாடி மாளிகை" என்கிற நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் நேரலையில் வானொலி நேயர்களுடன் தொலைபேசி வழியாகப் பேசி மாணவி தொகுத்து வழங்கினார். ஒலிப்பதிவில் உறுதுணையாக நெறியாளர்கள் ரோஸி, விக்னேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியை மாணவி திவ்யஸ்ரீ,நேயர்களுடன் பேசி சிறப்பாக ஒருங்கிணைத்ததற்கு வானொலி நிலையத்தினர் பாராட்டு தெரிவித்தனர். அதற்காக நிகழ்ச்சித் தலைவர் தாராதேவி மாணவிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கினார். வானொலி நேயர்களும் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவி திவ்யஸ்ரீ, “எனது இளம் வயதில் அகில இந்திய மதுரை வானொலியில் ஆர்.ஜெ.வாக செயல்பட வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நேரலையில் நேயர்களுடன் பேசிய நிகழ்வு எனது வாழ்நாளில் மறக்க முடியாததாக இருக்கும்.
அத்துடன் வானொலி நிலைய பொறுப்பாளர்கள் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வானொலியில் ஒரு நிமிடமாவது பேசிவிட மாட்டோமா என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் எனக்கு இத்தகைய அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி. இந்த நிகழ்ச்சி என்னை மேலும் தன்னம்பிக்கை உடையவளாக மாற்றியுள்ளது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT