Published : 03 Aug 2022 06:12 AM
Last Updated : 03 Aug 2022 06:12 AM
சென்னை: பஸ்சில் ஏறிவிட்டு டிக்கெட் வாங்கினால் போதும். ஆனால், டிக்கெட் வாங்கிவிட்டுத்தான் ரயிலில் ஏற முடியும் என்பன போன்ற ஏராளமான தகவல்களை சுற்றுலா மூலம் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் மேலபட்டாம்பாக்கம் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியை டி.பிருந்தா.
மாணவர்கள், ஆசிரியர்களின் மன அழுத்தத்தைப் போக்க பல்வேறு வழிமுறைகள் பரிந்துரைக்கப் பட்டாலும் சுற்றுலாப் பயணம் அருமருந்தாக உள்ளது. நீண்டதூரம் போக முடியாவிட்டாலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்காவது அழைத்துப் போகலாம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
இதுபோல முடிந்தவரை சுற்றுலா அழைத்துச் சென்று மாணவர்களுக்கு அறிவுப்பசியைப் போக்கி வருகிறார் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, மேலபட்டாம்பாக்கம் அரசுஉயர்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியைடி.பிருந்தா. அவரது ஒரு சுற்றுலா அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
ஆறாம் வகுப்பில் ‘டிரிப் டூ ஊட்டி’, ‘ரயில்வே கேரேஜ்’ என்கிற பாடங்கள் உள்ளன. இந்த பாடங்கள் நடத்தும்போதே நிறைய கேள்விகளை மாணவர்களிடம் கேட்டேன். ரயில் என்றால் என்ன, அதன் என்ஜின் எங்கு இருக்கும், ரயில் டிக்கெட் கவுன்டர் எங்கே இருக்கும் என்பன போன்ற கேள்விகளைக் கேட்டேன். ஆனால், எந்த கேள்விக்கும் மாணவர்களிடத்தில் பதில் இல்லை. இதை வகுப்பறையில் வைத்து சொல்லித் தருவதை காட்டிலும் சுற்றுலா பயணம் மூலம் அனுபவ ரீதியாக புரியவைக்க முடியும் என தோன்றியது.
அதன்படி, ரயில் சுற்றுலாவுக்கான அனுமதியை தலைமை ஆசிரியை மற்றும் ரயில் நிலைய மாஸ்டரிடம் பெற்றேன். சுமார் 50 மாணவர்களை ஐந்து ஆசிரியைகளுடன் மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து கடலூர் வரை பயணிகள் ரயிலில் அழைத்துச் சென்றோம்.
கடலூரில் ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு ரயில் நிலைய அதிகாரிகள் விளக்கினார்கள். விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட ரயில் பண்ருட்டி, திருக்கோயிலூர் வந்துவிட்டது என்பதை நேரில் காண்பித்தனர்.
ரயில் வந்ததும் மாணவர்கள் ரயிலில் ஏறி மகிழ்ச்சியில் திளைத்தனர். சிறிது நேரம் ரயிலை நிறுத்தி ரயிலில் உள்ள வசதிகள் குறித்து விளக்கினர். ரயிலில் உட்கார்ந்து செல்லும் வசதி, படுத்துக்கொண்டு செல்வதை "பெர்த்" என அழைப்பது, "பான்ட்ரி கார்" என்பது ரயிலில் உள்ள சமையலறை, பஸ்சில் ஏறிய பிறகு டிக்கெட் எடுத்தால் போதும், ஆனால், ரயிலில் ஏறும் முன்பு டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுத்தாக வேண்டும், ரயிலில் யாரையாவது வழியனுப்ப வந்தாலோ, அழைத்துப் போக வந்தாலோ பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க வேண்டும், ரயிலின் குறுகிய பாதை, அகல ரயில் பாதை போன்ற விஷயங்களை நாங்களும் எடுத்துரைத்தோம்.
ரயிலில் கழிப்பறை வந்த கதையையும் நான் கூறினேன். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியபோது, வட இந்தியாவில் ரயிலில் பயணம் செய்த ஒருவர், ரயில் நிலையம் ஒன்றில் இறங்கி கழிப்பறைக்கு போனார். அவர் வருவதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
அதனால் பெரிதும் அவதிப்பட்ட அந்த பயணி ரயில்வே நிர்வாகத்திற்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதமே ரயிலில் கழிப்பறை வசதி செய்து கொடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று மாணவர்களுக்கு விவரித்தேன். இந்த சுற்றுலா மாணவர்கள் ரயிலைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள பெரும் வாய்ப்பாக அமைந்தது.
இவ்வாறு ஆசிரியை டி.பிருந்தா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT