Published : 02 Aug 2022 06:12 AM
Last Updated : 02 Aug 2022 06:12 AM
சென்னை: மாணவ, மாணவிகளை தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுவிக்க முதலில் வீட்டு கலாச்சாரம் மாற வேண்டும். மாணவர்களின் விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல் தங்களது விருப்பத்தை திணிக்கும் பெற்றோரின் மாய எண்ணம் முதலில் மாற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி அண்மையில் அதிகரித்துள்ளது. அண்மையில் 4 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியம். இதுகுறித்துசேலம் மன நல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி கூறியதாவது:
மாணவ, மாணவிகளின் தற்கொலை முயற்சிக்கு முடிவுகட்ட மாற்றம் என்பது வீட்டிலிருந்தே தொடங்கப்பட வேண்டும்.
மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் கல்வி படிப்புதான் மகன் அல்லது மகளின் வாழ்க்கை. அதுதான் நிறைய சம்பாத்தியத்தைக் கொடுக்கும். அதுவே கவுரவம். கார், பங்களா போன்ற ஆடம்பர வாழ்க்கைக்கு அதுதான் அஸ்திவாரம் என்பன போன்ற மாய எண்ணத்தில் இருந்து முதலில் பெற்றோர் வெளியில் வர வேண்டும்.
மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளைத் தவிர அற்புதமான துறைகள் இருக்கின்றன. மகன் அல்லது மகளுக்கு பிடித்தவை எது என்பதை கண்டறிய வேண்டும். ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை பணம் சம்பாதிக்க உள்ள வாய்ப்புகளை குழந்தைகளிடம் எடுத்துரைத்து அவர்களுக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க பெற்றோர் துணைநிற்க வேண்டும்.
அதேநேரத்தில் மாணவ, மாணவிகளுக்கும் பொறுமை அவசியம். வேகமாகப் படித்து, பல லட்சம் சம்பாதிக்க வேண்டும், கார், வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையால் பலருக்கும் எதிர்விளைவுகள்தான் ஏற்பட்டுள்ளன. இந்நிலை மாறவேண்டும்.
பள்ளியில் மாணவ, மாணவியின் அன்றாட செயல்பாட்டில் மாற்றம் இருந்தால் அதனை ஆசிரியர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களின் மன அழுத்தத்தைப் போக்க வேண்டும் என்கிறார் மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.
இதுதொடர்பாக குழந்தை உரிமை செயற்பாட்டாளர் அ.தேவநேயன் கூறுகையில், "வளரிளம் பருவத்தில் உடல், மனரீதியாக மாற்றம் நிகழும். அந்த நேரத்தில் எது சரி, எது தவறு, எது நிழல், எது நிஜம் என இருபாலருக்கும் பெற்றோர் கட்டாயம் சொல்லித் தர வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால், குழந்தைகள் டிவி., சமூக வலைத்தளங்களைப் பார்த்து அதிலுள்ளவற்றை நம்பத் தொடங்கிவிடுவார்கள். பெற்றோர் தங்கள் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
குழந்தைகளின் அறிவுத்திறனை அறிந்து அதற்கேற்பவழிகாட்ட வேண்டும். ஆசிரியர்கள்வெறுமனேபாடத்தை மட்டும் சொல்லித்தராமல் வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவேண்டும். குறிப்பாக 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் வாழ்க்கையில் சாதனை படைத்திருப்பதை எடுத்துக்கூற வேண்டும்" என்கிறார் தேவநேயன்.
கடந்த காலங்களைப் போல பள்ளியில் இருந்து வந்ததும் பெற்றோரிடம் குறிப்பாக அம்மாவிடம் பள்ளியில் நடைபெற்ற அத்தனை நிகழ்வுகளையும் குழந்தைகள் பகிர்ந்து கொள்வது நலம்.
அதுபோல,"தங்களது விருப்பம், எதிர்கால திட்டம், உடல் மற்றும் மன நலம் சார்ந்த பிரச்சினைகள்" என்று எதுவாக இருந்தாலும் பெற்றோருடன் இயல்பாக பேசுவதை குழந்தைகளும் வழக்கமாகக் கொள்ள வேண்டும். இவை நடந்தால், தற்கொலை எண்ணம் முடிவுக்கு வருவதுடன், எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் மன உறுதியும் உருவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT