Published : 01 Aug 2022 06:04 AM
Last Updated : 01 Aug 2022 06:04 AM
சென்னை: மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு விவரங்களை இன்று (ஆக.1) முதல் செயலியில் மட்டுமே பதிவுசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின்கீழ் 37, 554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் 52.75 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே மாணவர், ஆசிரியர் வருகைப் பதிவை கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை பள்ளிக் கல்வித்துறை 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த செயலி வழியாக ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவு மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதன்பின் ஆசிரியர் பணிப்பதிவேடு, வருகைப்பதிவு, மாணவர் விவரம் உட்பட அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்க டிஎன்எஸ்இடி (TNSED) என்ற மேம் படுத்தப்பட்ட செயலியை தமிழக அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது. இதன்வழியாக வருகைப்பதிவு உள்ளிட்ட அலுவல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தகவல்களை துறை அதிகாரிகளால் நேரடியாக கண்காணிக்க முடியும். இந்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவை இன்று (ஆக.1) முதல் செயலியில் மட்டுமே பதிவுசெய்தால் போதுமானது.
மேலும், விடுப்பு, முன்அனுமதி ஆகியவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆசிரியர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் பரவலாக உள்ளன.
இதுகுறித்து தென்காசி மாவட்டம், வீரசிகாமணியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை க.மகாலட்சுமி கூறுகையில், “செயலி மூலம் மட்டும் மாணவர் வருகைப் பதிவு செய்வது எளிது, நேரம் விரையமாகாது.
ஏனென்றால் இனிமேல் நாங்கள் வருகைப் பதிவேட்டில் பதிவிடத் தேவையில்லை. அதுபோல வருகைப் பதிவு தொடர்பான மாதாந்திர அறிக்கை தயாரிக்க வேண்டியதில்லை. மேலும், பேரிடர் காலங்களில் வருகைப் பதிவேடு போன்ற ஆவணங்கள் சேதமடைந்தால், பிற்காலத்தில் மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவதில் பெரும் சிரமம் ஏற்படும். வருகைப் பதிவு உள்ளிட்ட தகவல்கள் டிஜிட்டல்மயமாகும்போது மாணவர்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சு.உமா மகேஸ்வரி கூறுகையில், “செல்போன் செயலி மூலம் வருகைப்பதிவு 4 ஆண்டுகளாக நடைபெறுகிறது. வருகைப் பதிவேட்டில் மாணவரின் வருகை இரண்டு முறை காலை 9.30 மணிக்கும், பகல் 1.30 மணிக்கும் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள எமிஸ் செயலியில் காலையில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.
உறவினர் திடீர் மரணம், உடல்நிலை சரியில்லை போன்ற காரணங்களுக்காக மாணவர்கள் வீட்டுக்குச் செல்ல நேரிட்டால் அந்த நாளை மாணவரின் விடுமுறை நாளாக பதிவிடும் முறை எமிஸ் செயலியில் இல்லை. மற்றபடி இந்த செயலியைக் கொண்டு தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், இடைநிற்றல், நீண்டகால வருகையின்மை, ஆசிரியர்களின் வருகை உள்ளிட்ட தகவல்களை சென்னையில் இருந்தபடியே கல்வித் துறை உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் தெரிந்து கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்க முடியும்" என்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம், மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தி.பரமேஸ்வரி கூறும்போது, “நெட்வொர்க் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை சரிசெய்துவிட்டு எமிஸ் செயலி மூலம் மட்டும் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகைப் பதிவை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பள்ளியில் நடக்கும் அத்தனைக்கும் தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு என்று சொல்கிறார்கள்.
அதேநேரத்தில் இந்த செயலி மூலம் தலைமை ஆசிரியர்களின் அதிகாரம் மறைமுகமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. உள்ளூர் சூழலுக்கு ஏற்ப செயல்பட முடியாத நிலையும் ஏற்படும். இருந்தாலும், மாணவர் சேர்க்கை, இடைநிற்றல் போன்றவற்றில் உள்ள குளறுபடிகளை கண்டுபிடிக்க இந்த டிஜிட்டல் முறை பயன்படும்.
மேலும், குழந்தைகளின் முழு விவரங்கள் கொண்ட மிகப்பெரிய ஆவணமாக இந்த செயலி இருக்கும்" என்றார். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்த செயலியில் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படும் நடைமுறைச் சிக்கல்கள் நாளடைவில் சரிசெய்யப்படும்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT