Published : 14 Jul 2022 06:28 AM
Last Updated : 14 Jul 2022 06:28 AM
கேரள மாநில எல்லைக்குள் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை தமிழக அரசு நிர்வகிக்கிறது. யானை, சிறுத்தை, காட்டெருமை, புலி போன்ற வன உயிரினங்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அமைந்துள்ள இப்பள்ளிக்கு தினமும் இரண்டு ஆசிரியைகள் சென்று பாடம் நடத்தி வருவது தனிச்சிறப்பு.
பரம்பிக்குளம் புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள இப்பள்ளியில் துணிச்சலுடன் இந்த ஆசிரியைகள் பணியாற்றுகிறார்கள்.
இந்தப் பள்ளி, பொள்ளாச்சி யிலிருந்து 56 கி.மீ. தொலைவில் பரம்பிகுளம் புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது.
இந்த புலிகள் காப்பகம் பகுதியில், டாப்சிலிப், தூணக்கடவு சுங்கம் பகுதிகளைத் தாண்டி பரம்பிக்குளம் பகுதி உள்ளது. இது கேரள மாநில அரசுக்குச் சொந்தமான நிலப்பகுதி யாகும். "இங்கு எப்படி ஒரு தமிழக அரசுப் பள்ளி?" என்பது பலருக்கும் வியப்பு கலந்த கேள்வியாக இருக் கும்.
டாப்சிலிப் தாண்டியவுடன், கேரள அரசின் சோதனைச்சாவடி. அது அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், புலிகள் காப்பகம் இருப்பதாலும் இங்கு நுழைவற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. மலைப்பகுதியாக இருந்தா லும், இதில் காணப்படும் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள சமவெளியில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து ஓடும் ஆறு, கேரளாவில் ஓடி நேரடியாக அரபிக் கடலில் கலந்தது. இவற்றைச் சீரமைத்தால், 3 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்ற எண்ணம் 1937-ல் உருவானது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின், 1969-ல் "பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் (Parambikulam Aliyar Project- P.A.P.) திட்டம் தீட்டப்பட்டது.
இதற்காக மலையை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள், அப்பகுதி களுக்குச் சென்று தங்கி, கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு - கேரள அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படை யில், நம் குழந்தைகளுக்குக் கல்வி எட்டாக் கனியாய் ஆகிவிடக்கூடாது என்பதால் பெருந்தலைவர் காமராஜ ரால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில், 12 குழந்தைகள் பயில்கின்றனர்.
ஆண் ஆசிரியர்களே இங்கு வேலை பார்க்க அச்சப்படும் நிலையில், துணிச்சலாக தலைமை ஆசிரியை நாகராணி, ஆசிரியை தமிழ்ச்செல்வி ஆகியோர் பொள்ளாச்சியில் இருந்து பரம்பிகுளத்திற்கு தினமும் 112 கிலோ மீட்டர் சுமார் 2 மணி 15 நிமிடங்கள் திக்...திக்...பயணம் என்றாலும் அச்சமில்லாமல் பள்ளிக்குச் சென்று பணியாற்றி வருவது தனிச்சிறப்பு.
காலை, மாலை என இரண்டு நேரம் மட்டுமே அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்து வராத சமயங்களில், மலைக்கு சென்று வரும் ஏதாவது ஜீப் அல்லது மின்சார வாரியம், பொதுப்பணித் துறை போன்ற அரசு வாகனங்களில் பள்ளிக்குச் செல்கிறார்கள். போகும் வழியில் பேருந்து பழுதடைந்தாலோ, சாலையில் மரம் விழுந்தாலோ, யானை சிறுத்தை போன்ற வன உயிரினங்கள் வழிமறித்தாலோ நடு வழியில் காத்திருந்து, பின்புதான் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். இப்படி பல சவால்கள் இருப்பினும், கற்பித்தலில் உள்ள ஆர்வம் காரணமாக இரு ஆசிரி யைகளும் முழு ஈடுபாட்டுடன் பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.
ஆசிரியை என்.தமிழ்ச்செல்விகூறும்போது, “பேருந்திலிருந்து இறங்கியவுடன், மாணவர்கள் எங்களை அன்புடன் வரவேற்பார்கள். அவர்களு டன் சேர்ந்தே நாங்கள் பள்ளிக்கு செல்வோம். பள்ளிப் பகுதியில் யானைகள், குரங்குகள், காட்டெருமைகள், மான்கள், புலிகள், சிறுத்தைகள், மயில்களும் வந்து செல்லும் என்பதால், மாணவர்களின் பாதுகாப்பை அவ்வப்போது உறுதி செய்வது பிரதான பணியாகும். குழந்தைகளுடன் குழந்தைகளாக, நண்பராக, பாதுகாவலராக, பெற்றோ ராக, வழிகாட்டியாக அவர்களை அரவணைத்துச் சென்று கல்வி கற்பிப்பது யாருக்கும் கிடைக்காத நல்வாய்ப்பு. இயற்கையான சூழலில் இங்கு பணியாற்றுவது முழு திருப்தி யாக இருக்கிறது" என்கிறார்.
"குழந்தைகள் குறும்பு செய்யும் போது செல்லமாய் கண்டிப்பதும், கல்வியை அவர்கள் போக்கிலேயே கற்றுத் தருவதும், பசுமை நிறைந்த வனச்சூழலில், கள்ளம் கபடம் இல்லாமல் வளர்ந்து வரும் குழந்தை களை நன்னெறிப்படுத்தி கல்வி கற்கச் செய்வது வித்தியாசமான அனுபவம்தான்” என்கிறார் தலைமை ஆசிரியை எஸ்.நாகராணி.
இப்பகுதி கேரள எல்லைக்கு உட்பட்டது என்பதால், கேரள மக்களும், இப்பகுதியில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்களும் பள்ளியின் செயல்பாட்டிற்கு உறுதுணை யாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதுஆறுதல் அளிக்கிறது. இரு மாநிலங்களின் நல்லுறவின் அடையாளமாக காட்சியளிக்கிறது இப்பள்ளி. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பள்ளிக்கு அச்சமின்றி போய் பணியாற்றி வரும் இந்த தைரியலட்சுமிகளுக்கு சல்யூட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT