Published : 11 Jul 2022 06:18 AM
Last Updated : 11 Jul 2022 06:18 AM
அகிலன் சரியான வாலுப் பையன். ஒரு இடத்தில நிற்க மாட்டான்.
டீச்சர் இல்லாத நேரத்தில் எல்லாருக்கும் ராக்கெட் செய்ய சொல்லித்தருவான்.
சும்மா சர்...சர் ன்னு ராக்கெட் வகுப்பறையில் பறக்கும்.
"டேய்... என் ராக்கெட் பறக்கலடா. இன்னொரு முறை சொல்லி குடுடா.
ப்ளீஸ் டா..ப்ளீஸ் டா" ன்னு அகிலன் பின்னாடியே வந்தான் ஜோயல்.
அகிலனும், நண்பர்களும் பறக்குற ராக்கெட் பின்னாடி ஓடினர்.
ஜோயலும் "டேய்....டேய்ன்னு" பின்னாடியே ஓடினான்.
"பொறுடா.. பொறுடா...ஒரு நிமிசத் துல வந்து சொல்லித்தாரேன்டா" என்றான் அகிலன்.
"ராக்கெட் விட்டு போர் அடிக்கு துடா, வேற எதாவது புதுசா சொல்லிக்கொடுடா" என்றாள் மதிவதனி.
நோட்டு பேப்பர் கிழிக்கச் சொல்லி, குருவி செய்ய சொல்லி, அதை பறக்க விடவும் கற்றுக்கொடுத்தான்.
"குருவி பற...பற...குருவி பற....பற" ன்னு ஒரே கோரஸ் பாட....
சத்தம் கேட்டு டீச்சர் வர...
அனைவரும் கப்....சிப். அறை முழுவதும் நிறைய குருவிகள் பறந்தன.
டீச்சருக்கு கோபம் "கிர்ர்ர்ன்னு"வந்தது. அந்த நேரம் பார்த்து எங்கயோ பறந்த குருவி, டீச்சர் மேலேயே வந்து விழுந்தது.
"அவ்ளோ தான்.. போச்சு... போ. எத்தனை முறை சொன்னேன். இப்படி விளையாட வேண்டாம்ன்னு. கேட்டீங் களா..?
இப்போ எல்லாரும் சேர்ந்து மாட்டிக்கிட்டோம்", என்று கோபமாய் முகத்தை திருப்பிக் கொண்டாள் ஆன்ட்ரியா.
"யாருடா இந்த வேலையப் பார்த்தது?" என்றார் டீச்சர். எல்லாக் கண்களும் அகிலனை பார்க்க, டீச்சர்க்கு கோபம் கடுமையாக வந்துருச்சு.
"நான் குச்சி எடுக்குறதுக்கு முன்னாடியே ஒழுங்கா பெஞ்சு மேல நில்லுடா... அ கி ல ன்" என்று கத்தினார்.
ஏறி நின்னு திரு..... திருன்னு முழிச்சான். " நீயும் தானே குருவி விட்ட" என்று சமர்கிட்ட வம்பு இழுத்தான்.
இது தான் நேரம் என்று சமரை மாட்டிவிட்டுட்டான்.
"டீச்சர், ராக்கெட் விட்டா என்ன தப்புடான்னு சமர் கேக்குறான்."
கடுப்பான டீச்சர்,"சமர் நீயும் பெஞ்ச் மேல ஏறி நில்லுடா" என்றார்.
அகிலனிடம், "நாளைக்கு பேரன்ட்டோட வரல... அவ்ளோதான்" என்று மிரட்டிச் சென்றார்.
"எல்லாம் உங்களால தான்".
அகிலன் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டான் .
எல்லோருக்கும் அகிலனை பார்க்கப் பாவமா இருந்தது.
மதிவதனி எழுந்தாள். "நாம எல்லாரும் தானே ராக்கெட் விட்டோம். அகிலனுக்கு மட்டும் தண்டனை தருவது தப்பு".
"அப்போ டீச்சர் இருக்கும் போதே, நீ இதை சொல்லிருக்க வேண்டியது தானே" என்றான் சமர் .
"சரி விடுங்கப்பா..."
"இப்போ போய் சொல்லிடுவோம்" என்றான் சுந்தர்.
எல்லோரும் சேர்ந்து "சாரிடா அகில்" என்றனர்.
அடுத்த பாடவேளைக்கு சிவா சார் வந்தார். எல்லோரும் நடந்த கதையைச் சொன்னார்கள். அவர் பெஞ்ச் மேல நிற்கும் அகிலனையும் சமரையும் பார்த்தார்.
உம்மென்று மூஞ்சியை கோணலாக வச்சுருந்த அகிலனை பார்த்ததும், ஹா....ஹா..ன்னு சிரித்துவிட்டார். சிவா சாரைப் பார்த்த அகிலனும் சிரிச்சுட்டான்.
அதை பார்த்து சமர் சிரிக்க.....தொடர்ந்து ஜோயல் சிரிக்க... மதிவதனியும் சிரிக்க... வகுப்பறையே சிரிப் பொலியால் அதிர்ந்தது.
சிவா சார் ஆர்ட் அண்ட் கிராப்ட் ஆசிரியர். சார் வந்தாவே செம ஜாலியா இருக்கும்.
"இன்று உங்களுக்கு பட்டம் செய்ய சொல்லி தரப்போறேன். செய்தபட்டத்தை கிரௌண்ட்ல போயி பறக்க விடப்போறோம்.
யார் பட்டம் உயரமா பறக்குதுனு பார்ப்போமா?" என்று முடிப்பதற்குள் ஓ....ஓ...ஓ...ஓ என்று குழந்தைகள் மகிழ்ச்சியில் கத்தினர்.
வட்டவட்டமாக குழுவாக உட்கார்ந்தனர். பட்டம் செய்தனர் .
அகிலன் இப்படி பேப்பரில் ‘ஒரிகாமி’ செய்வதில் கில்லாடி. பட்டத்தை வேகமாக செய்து முடித்தான்.
அகிலன் குழுதான் முதல் பட்டத்தை செய்து முடித்தது. அடுத்த குழுவிற்கும் கற்றுக் கொடுத்து உதவினான். சிவா சார் அகிலனைப் பாராட்டினார்.
அனைவரும் பட்டத்துடன் மைதானத்திற்குச் சென்றனர். அனைவரின் காற்றாடிகளுக்கும் வால் முளைத்து....றெக்கை முளைத்துப் பறந்தன.....
அங்கு வந்த தலைமை ஆசிரியர் அண்ணாந்து வானத்தை பார்த்து கை தட்டிச் சிரித்தார். அனைவரின் பட்டமும் ஜோராக பறந்தது...
கி.அமுதா செல்வி
பட்டதாரி ஆசிரியர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
குலமங்கலம், மதுரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT