Last Updated : 10 Apr, 2022 04:31 PM

1  

Published : 10 Apr 2022 04:31 PM
Last Updated : 10 Apr 2022 04:31 PM

அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரிப்பு

அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய மாணவர்கள் ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில்கின்றனர். இதில் அமெரிக்காவிற்கு சென்று படிக்க அதிக மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் சீனாவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் புலம்பெயர்தல் சேவைப்பிரிவு(யுஎஸ்சிஐஎஸ்) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021-ம் ஆண்டில் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விவரம்:
சீனா - 3,48,992
இந்தியா - 2,32,851
தென் கொரியா - 58,787
கனடா - 37,453
பிரேசில் - 33,552
வியட்னாம் - 29,597
சவுதி அரேபியா - 28,600
தைவான் - 25,406
ஜப்பான் - 20,144
மெக்சிகோ - 19,680

சீனாவில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட 33,569 அதாவது 8 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து வந்துள்ள மாணவர்கள் எண்ணிக்கை 25,391 அதாவது 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 37 சதவீதம் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எப்-1, எம்-1 ஆகிய இரண்டுவித விசா வழங்கப்படுகிறது. இவை இரண்டும் புலம்பெயர்தல் அல்லாத மாணவர்களுக்கான விசா ஆகும். இந்த பிரிவில் படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 36 ஆயிரத்து 748 என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 257 மாணவர்கள்(16.8 சதவீதம்) அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கல்வி மையங்களில் படிப்பதும் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 224 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். இதில் ஆசிய மாணவர்களே அதிகம். ஆசிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட குறைந்திருந்தாலும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x