இந்தியாவில் கல்வித்துறையில் செலவழிக்காமல் விடப்பட்ட தொகை ரூ.36,657 கோடி - கல்வியாளர்கள் அதிர்ச்சி
நாட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ.36,657 கோடி வரை பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தேவைப்படும் பல பணிகளுக்கு இந்த நிதியை பயன்படுத்த வேண்டும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.93,224 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, ரூ.56,567 கோடி மட்டுமே கல்விப்பணிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ரூ.36,657 கோடி பயன்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கல்வித்துறை வளர்ச்சிக்காகவும், நிதி ஒதுக்கீட்டிற்காகவும் பல்வேறு தரப்பினர் போராடிவரும் நிலையில், ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் விடப்படுவது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசு உதவிபெறும் கல்வி மையங்களில் மட்டும் ரூ.7,143 கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதற்கு முந்தைய 2019 - 20-ல் இந்த தொகை ரூ.355 கோடியாகவும், 2020-21-ல் ரூ.274 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள 46 மத்திய பல்கலைக்கழகங்களில் 19 ஆயிரத்து 349 அனுமதிக்கப்பட்ட பேராசிரியர் காலியிடங்கள் உள்ளன. இதில் 6 ஆயிரத்து 535 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தில் மட்டும் 859 இடங்கள் காலியாக உள்ளன. அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 611 பேராசிரியர் பணியிடங்களும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 499 இடங்களும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 359 பணியிடங்களும் காலியாக உள்ளன. இதுபோல நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்த முடியும். தரமான கல்வி வழங்க தரமான ஆசிரியர்கள் அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதும், மறுபுறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் கவலையளிப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, கல்விக்காக கடந்த 2004-05-ம் ஆண்டு முதல் மத்திய அரசு கூடுதல் வரி வசூலித்து வருகிறது. கல்வித்துறைக்காக ஒதுக்கப்படும் தொகையுடன் கூடுதலாக இந்த வரி மூலம் கிடைக்கும் தொகை செலவழிக்கப்பட வேண்டும். ஆனால், கூடுதல் வரியை சேர்த்த பின்னரும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். கல்விக்காக மத்திய அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே செலவழிக்கிறது. நார்வே போன்ற வளர்ந்த நாடுகளில் கல்விக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவீதம் வரை நிதி ஒதுக்கப்படுகிறது. அதே அளவுக்கு நிதி ஒதுக்கி கல்வித்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
