Published : 15 Apr 2025 06:27 AM
Last Updated : 15 Apr 2025 06:27 AM
மத்திய தொழிலாளர் பணியைப் பெற்று கர்நாடகாவின் ஹுப்ளியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையராக உயர்ந் திருக்கிறார் கூலித்தொழிலாளர் தம்பதியின் மகன் ராமநாதன். குடிமைப்பணி தேர்வில் வெல்ல அவருக்கு ‘வெற்றிக்கொடி’யில் வெளியான ‘யூபிஎஸ்சி தேர்வை வென்றவர்கள்’ தொடர் ஊக்கம் அளித்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரின் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகையா, லட்சுமி தம்பதி. எண்ணெய் ஊற்றப் பயன்படுத்திய பழைய தகர டின்களை சேகரித்து ஆலைகளுக்கு அனுப்பும் கூலித்தொழிலாளர் முருகையா, செங்கல்சூளை தொழிலாளர் லட்சுமி. இத்துடன் சேவை மனப்பான்மையுடன் தம் பகுதியிலுள்ள கோயிலில் துப்புரவு பணியையும் லட்சுமி செய்து வருகிறார். இவர்களின் மூன்று குழந்தைகளில் கடைக்குட்டியான ராமநாதன் கடுமையாக உழைத்து தொழிலாளர் நலத்துறையின் உயர் அதிகாரியாகி உள்ளார்.
ஒரே தமிழர்: பள்ளிப்படிப்பை தமிழ்வழியில் முடித்த இவர், பெருவாரியான மாணவர்கள் போல முதலில் பொறியியல் பட்டப்படிப்பில்தான் சேர்ந்தார். கல்லூரி இறுதியாண்டில் குடிமைப்பணி மீது ஆர்வம் துளிர்த்தது. அதைக் குறிவைத்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்விமுறையில், எம்.ஏ சமூகவியல் பட்டம் பெற்றுள்ளார்.
பிறகு சட்டக்கல்வியிலும் ஈடுபாடு இருந்ததால், சென்னை அம்பத்தூரிலுள்ள தமிழக அரசின் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் தொழிலாளர் நலச் சட்டம் பிரிவில் பட்டயப்படிப்பையும் முடித்துள்ளார். இந்த முழுநேர ஒரு வருடச் சட்டக் கல்விதான் ராமநாதன் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
பட்டயப்படிப்பு முடிக்கும் நேரத்தில் அவருக்கு குடிமைப்பணியில் ஒரு பிரிவாக, சிஎல்எஸ் (சென்ட்ரல் லேபர் சர்விஸ்) எனும் மத்திய தொழிலாளர் பணிக்காகவும் ஒரு தேர்வு இருப்பது தெரிந்துள்ளது. இதற்குத் தொழிலாளர் பட்டயப்படிப்பு, சட்டக்கல்வி அல்லது மனித வள மேம்பாட்டில் எம்பிஏ அவசியம் என்பதால் இந்தத் தேர்வை அதிகமானவர்கள் எழுதுவதில்லை. மத்திய தொழிலாளர் பணிக்கான இந்தத் தேர்வு யூபிஎஸ்சியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகைப் பிரிவுகளுள் ஒன்றல்ல. எனினும், சிஎல்எஸ் தேர்வையும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு நிறுவனமான யூபிஎஸ்சி நிறுவனமே நடத்துகிறது.
மேலும், இந்தத் தேர்வு யூபிஎஸ்சியை போல் வருடந்தோறும் நடத்தப்படுவதில்லை. இப்பதவிக்கான தேவையைப் பொறுத்து 2 முதல் 4 வருடங்களுக்கு ஒருமுறை இடைவெளிவிட்டு நடத்தப்படுகிறது. கடந்த 2023இல் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய தேர்வில் ராமநாதன் வெற்றி பெற்று சிஎல்எஸ் பெற்றுள்ளார். தேசிய அளவில் 29 பணியிடங்களில் 18ஆவது ரேங்க் பெற்றுள்ளார். அதிலும் தமிழகத்திலிருந்து தேர்வானது இவர் மட்டுமே.
கனவு நிஜமானது: சிஎல்எஸ் தேர்வு, 300 மதிப்பெண்களுக்கான ஒரே ஒரு எழுத்துத் தேர்வு. ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான முதல்நிலையைப்போல் கொள்குறி வகையில் (அப்ஜக்டிவ்) இதுவும் நடைபெறுகிறது. வென்றவர்கள் பெற்ற மதிப்பெண்களைப் பொறுத்து ஒரு பணிக்கு நால்வர் என்கிற அளவில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதைப் பொறுத்து இறுதிப் பட்டியல் வெளியாகிறது. 35 வயது வரம்பிலான தகுதி கொண்ட இந்தத் தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறுகிறது. இதர மொழிகளில் இல்லாத இந்தத் தேர்வை ஆங்கிலத்தில் எழுதுவதே சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு, சட்டம் தொடர்பான பல சொற்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பது காரணம்.
இது குறித்து பேசிய அதிகாரி ராமநாதன், “தமிழ்வழியில் படித்தாலும் யூபிஎஸ்சியை வெல்லும் நம்பிக்கையை ஊட்டியவர் எனது வழிகாட்டி குமரேஸ்வரி பெரியசாமி. அரசு இணை இயக்குநரான இவர், சேவை மனப்பான்மையில் யூபிஎஸ்சிக்கான வகுப்புகளை ஓய்வு நேரத்தில் போதிப்பவர். எளிமையான பின்னணியிலிருந்து வந்து வெற்றி பெற்ற வாழும் உதாரணங்களை அவர் எனக்கு எடுத்துச் சொன்னார். மேலும் குமரேஸ்வரி தமிழ்வழியில் பயின்றவர் எனத் தெரியவந்ததும் உற்சாகம் பீரிட்டெழுந்தது” என விளக்கினார்.
விடாமுயற்சியோடு ஓரிரு அரசு தேர்வுகளை எழுதித் தவறவிட்டாலும் ரயில்வே தொழிலாளர் நல ஆய்வாளர் பணிக்கான ரயில்வே தேர்வு வாரியம் 2020இல் நடத்திய தேர்வில் வாகை சூடினார். 2022 ஜூலையில் வெளியான அதன் முடிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராமநாதன், சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்)இல் பணியாற்றி வந்துள்ளார். ஐசிஎப்பில் இணைந்தாலும் தம் யூபிஎஸ்சிக்கான முயற்சியைக் கைவிடவில்லை. யூபிஎஸ்சி தேர்வில் 2016 முதல் மொத்தம் நான்கு முறை முயன்றுள்ளார். 2019இல் முதல்நிலை தேர்வு மட்டுமே வெல்ல முடிந்தது.
‘வெற்றிக்கொடி’யின் பங்கு; இது குறித்து அதிகாரி ராமநாதன் கூறும்போது, “யூபிஎஸ்சி வெல்ல அன்றாடச் செய்திகளைப் படிப்பதும், சமூக அக்கறையும் அவசியம். கல்லூரி நாட்களிலிருந்தே சகமாணவர்களுடன் சேர்ந்து நாளிதழ் வாசித்து விவாதிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன். ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டின் ‘வெற்றிக்கொடி’யில் வெளியான ‘யூபிஎஸ்சி தேர்வை வென்றவர்கள்’ தொடரில் இடம்பெற்ற எங்கள் கடையநல்லூரை சேர்ந்தவரும் தற்போது உத்தரப்பிரதேச வாரணாசியின் ஆட்சியராகவும் இருப்பவருமான எஸ்.ராஜலிங்கம் ஐஏஎஸ் ஆனது எனது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. இதுபோன்ற வெற்றி அனுபவங்களால், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் என்னைப் போன்றே நிச்சயமாக ஊக்கம் பெற முடியும்” எனத் தெரிவித்தார்.
கர்நாடகாவின் ஹுப்ளி மண்டலத்தில் உதவி தொழிலாளர் ஆணையரான ராமநாதன், மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தமுறை தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கும் பணி செய்து வருகிறார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்கு நிகரான ஊதியமும் பணி உயர்வும் சிஎல்எஸ் பணியிலும் உண்டு. இந்தப் பணி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படுகிறது. ஒரு கூலித்தொழிலாளர்களின் மகன் படித்து அதிகாரியாகி தம் பெற்றோரைப் போன்ற தொழிலாளர்களுக்கே சேவை செய்வது அரிதான செயல்தான்.
- shaffimunna.r@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...