Published : 04 Feb 2025 06:34 AM
Last Updated : 04 Feb 2025 06:34 AM
அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை பள்ளிகளின் செயல்பாடு, மாணவர்களின் சிறப்பம் சங்களைப் பெற்றோருக்கு எடுத்துரைக்கும் வகையில் ஆண்டு விழா நடத்தத் தமிழக அரசு பள்ளிகளுக்கு ஆணை வெளியிட்டுள்ளது.
பொதுவாகத் தனியார் பள்ளிகளில் மாணவர் களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆண்டுதோறும் பிரம்மாண்ட ஆண்டு விழாக்களை நடத்துவார்கள். அரசு பள்ளிகளில் அவ்வாறு இல்லாத சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசே நிதி ஒதுக்கி ஆண்டு விழா நடத்த அனுமதித்திருப்பதால் பெற்றோர் களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மாணவர்களின் பேச்சு, எழுத்து, ஓவியம் உள்ளிட்ட பன்முகத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாகக் கலைத் திருவிழாக்களை நடத்திவருகிறது, பள்ளிக்கல்வித்துறை. அதைத் தொடர்ந்து ஆண்டு விழாவையும் நடத்துவது மாணவர்களின் தனித் திறன் வெளிப்பட நல்லதொரு வாய்ப்பாகும்.
தவிர்க்க வேண்டியவை: பள்ளிகள் இதனை முறையாகப் பயன்படுத்திட வேண்டும், மாறாகப் பெரும்பான்மை பள்ளிகளில் நடனத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப் படுவதைக் காண முடிகிறது. குறிப்பாகக் கட்டுப்பாடற்ற ஆபாச திரைப்படப் பாடல்களும் மேடைகளில் அரங்கேறிவிடுவதுண்டு. இதை முற்றிலும் பள்ளிகள் தவிர்க்க வேண்டும்.
நாட்டுப்புறப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், சுற்றுச்சூழல் குறித்த பாடல்கள் உள்ளிட்ட தரமான கருத்துகளை மாணவர்கள் பின்பற்றும் வகையில் திட்டமிட வேண்டும். தீமையான காட்சிகளோ, பாடல்களோ பள்ளி விழாவில் இடம் பெறாத வகையில் கவனம் செலுத்த வேண்டும்.
அரசு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது கூட நன்மை பயக்கும்.
நெறிமுறை தேவை: நற்பண்புகளையும், நன்னத்தையை மாணவர் களுக்கு ஊட்டுவதுதான் சிறந்த பள்ளியின் அடையாளம். தமிழ் இலக்கியத்தின் நீதி நெறி கருத்துகளையும், சீரிய வாழ்வியலுக்கான பண்புகளையும் கலை வடிவில் தரும் விழாவாக ஆண்டு விழாவை வடிவமைக்க வேண்டும்.
கலைகளில் சிறந்த நம் நாட்டில் நல்லெண்ணங் களையும் உயரிய கருத்துகளையும் பிறரிடம் கொண்டு செல்ல பல வடிவங்கள் உண்டு. கோலாட்டம், கும்மியாட்டம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், ஓரங்க நாடகங்கள், சொற்போர், பட்டிமன்றம், மாறுவேடம், கதை கூறுதல், பாடல் பாடுதல் போன்ற பல வடிவங்களை ஆண்டு விழாவில் பயன்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கலாம்.
ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் சிறார் எழுத்தாளர்களின் பாடல்களைப் பாடச்செய்து இலக்கியவாதியாகவும் உருவாக்கச் செய்யலாம். தற்போது அரசு பள்ளிகளில் வாசிப்புத் திறனை மேம்படுத்த வாசிப்பு இயக்க நூல்களை அரசு வழங்கியிருக்கிறது. மாணவர்கள் வாசித்த கதைகளை மேடையில் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு, ஆண்டு விழாவாகும்.
திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், தேசத் தலைவர்கள் பற்றிய உரை, சுற்றுச்சூழல் மேம்பாடு, சமூக அவலங்களிலிருந்து விடுபடும் விழிப்புணர்வு நாடகங்கள், நாட்டுப்புறக் கலைகள், தற்காப்புக் கலைகள் என அரங்கேற்றும்போது பள்ளி மீது பெற்றோருக்கும் நன்மதிப்பு ஏற்பட்டு மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கவும் தக்கவைக்கவும் முடியும்.
இதுவும் ஒரு குடும்ப விழா: ஆண்டு விழாவை ஒரு கிராமத்தின் கூட்டுக் குடும்ப விழாவாகப் பள்ளிகள் நடத்த வேண்டும். அனைத்து பெற்றோர்களையும் அழைத்து அதற்காகத் திட்டமிட்டு எந்தெந்த வழிகளில் எல்லாம் அவர்கள் துணை செய்கிறார்களோ அதை ஏற்கலாம். அவர்கள் ஆலோசனைகளுக்கு அழகாக வடிவம் கொடுத்து மாணவர்களுக்குச் சிறப்பான பயிற்சி அளித்து திறமையை வெளிப்படுத்தும் விழாவாக அடையாளப்படுத்தலாம்.
பிரம்மாண்ட வடிவங்களை விட மிக எளிய வடிவில் விழா அமைத்து அனைத்து குழந்தைகளையும் ஏதோ ஒரு வகையில் பங்கேற்கச் செய்து அனைத்து குழந்தைகளுக்கும் சிறிய பரிசாவது கிடைக்க வகை செய்திட வேண்டும். எல்லாக் குழந்தைகளிடத்திலும் திறன்கள் உள்ளே இருக்கும். அதை வெளிப்படுத்துகிற வாய்ப்புதான் ஆண்டு விழா.
எந்தச் சூழலிலும் திறன் இல்லை என்றோ திறமை இல்லை என்றோ குழந்தைகளை ஒதுக்கி விடக் கூடாது. சிறார்களை அறிவுள்ளவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும், வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் பள்ளிக்கும் பெற்றோருக்கும் உண்டு. ஆண்டு விழா அனைத்து குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் மகிழ்ச்சி தரும் விழாவாகும். சிறுவர்களின் உள்ளங்களில் இது உற்சாக திருவிழா. அவ்விழாவை ஊர் கூடிக் கொண்டாடி மகிழ்வோம்.
- மா.கோவிந்தசாமி; கட்டுரையாளர்: தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தருமபுரி; govindasamypgm@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment