Last Updated : 11 Nov, 2024 07:35 AM

 

Published : 11 Nov 2024 07:35 AM
Last Updated : 11 Nov 2024 07:35 AM

கல்விக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்

மௌலானா அபுல் காலம் ஆசாத், இந்தியாவின் கல்வி நிலையை மேம்படுத்திய தலைவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார். நாட்டின் முதல் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் பல சவால்கள் நீடித்த நிலையில் ஆரம்பக் கல்வி, உயர் கல்விக்கான தேசியக் கொள்கையை வகுத்ததில் ஆசாத் முக்கியப் பங்காற்றினார்.

கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக ஆசாத் இருந்தபோது எல்லாருக்கும் ஆரம்பக் கல்வி, 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இலவசக் கல்வி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வலியுறுத்தினார்.

முதல் ஐஐடி: ஆசாத் மத்தியக் கல்வி அமைச்சராக இருந்தபோது மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் நாட்டின் உயர் கல்வி அமைப்பான ஐஐடி (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) அமைக்கத் திட்டமிடப்பட்டது.

1951இல் நாட்டின் முதல் ஐஐடி கரக்பூரில் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டும் அமைப்பாக ‘பல்கலைக்கழக மானியக் குழு’வான யுஜிசி 1953இல் தொடங்கப்பட்டது.

மாணவர்கள் பயன்பெறும் வகையில் டெல்லி பல்கலைக் கழகத்தில் ‘University School of Architecture and Planning’ துறையை ஆசாத் உருவாக்கினார். இதன் தொடர்ச்சியாக 1952இல் மேல்நிலைக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை உருவாக்கினார். இந்தியா முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் அரசுத் துறையிலும் கல்விக்கான அமைப்புகளையும் துறைகளையும் அவர் ஏற்படுத்தினார்.

சர்வதேசத் தரம்: இந்தியக் கல்வித் துறையைச் சர்வதேசத் தரத்திற்கு ஆசாத் கொண்டுசென்றார். கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில், அடிப்படைக் கல்விக்கான தேசிய நிறுவனம் (National Institute of Basic Education NIBE) ஆகியவை ஆசாத் காலத்தில்தான் அமைக்கப்பட்டன.

இந்தியாவின் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை பல்வேறு சீர்திருத்தத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அதைச் செயல்படுத்திக் காட்டிய ஆசாத் தனது இறுதி மூச்சுவரையும் இந்தியாவின் கல்வி அமைச்சராகவே நீடித்தார்.

இந்திய மாணவர்கள் இன்று தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வருகின்றனர். இந்தச் சாதனைகளுக்கெல்லாம் அடித்தளமிட்டவர் ஆசாத் என்றே வரலாறு நினைவுகூரும்.

உலக அளவில் பெருமிதம்! - கல்வி என்பது ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருக்கிறது. அதை உணர்த்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11 அன்று ‘தேசியக் கல்வி நாள்’ கொண்டாடப்படுகிறது. கல்வித் துறையின் வளர்ச்சியில் இந்தியா மாபெரும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சந்தித்திருக்கிறது. உலகின் பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா மிகப் பெரிய உயர் கல்வி அமைப்பைக் கொண்டுள்ளது. உயர் கல்விக் கட்டமைப்பில் இந்தியா உலக அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றன. வெளிநாட்டு மாணவர்களும் இங்கே வந்து படிக்கும் அளவுக்குச் சிறப்பான கட்டமைப்போடு இருக்கின்றன. 2018இல் இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலக அளவில் 40ஆவது இடத்தில் இருந்தன. இரண்டே ஆண்டுகளில் 33ஆவது இடத்துக்கு உயர்ந்திருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x