Last Updated : 11 Nov, 2024 07:49 AM

 

Published : 11 Nov 2024 07:49 AM
Last Updated : 11 Nov 2024 07:49 AM

ஆராய்ச்சியும் கல்வியும்

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11ஆம் தேதி கொண்டாடப்படும் தேசியக் கல்வி நாளன்று கல்வி குறித்த கருப்பொருள் தேர்வு செய்யப்படும். 2022ஆம் ஆண்டு ‘பாடத்தை மாற்றுதல், கல்வியை மாற்றுதல்’ என்கிற கருப்பொருளும் 2023ஆம் ஆண்டு ‘புதுமையை ஏற்றல்’ என்கிற கருப்பொருளும் தேர்வு செய்யப்பட்டன. இந்த ஆண்டு, ‘அனைத்தையும் உள்ளடக்கிய கற்றல் - எதிர்காலத்துக்கு ஏற்பக் கற்றலை மேம்படுத்துதல்’ என்கிற கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்தபோது 12% ஆக இருந்த நாட்டின் கல்வியறிவு 2022ஆம் ஆண்டு 76.32% ஆக உயர்ந்தது. 1948ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்தியக் கல்வி மாநாட்டில் பேசிய முன்னாள் பிரதமர் நேரு, ‘நாட்டின் வளர்ச்சி கல்வியில் ஏற்படும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது…’ என்றார். அதிலிருந்து இந்தியச் சுதந்திரத்துக்கு பிறகான ஆண்டுகளில் கல்வி முறையில் பல முன்னேற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 2047இல் இந்தியாவின் கல்வியறிவை 89.8% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசியக் கல்வி நாளன்று கல்வியின் முக்கியத்துவம், கல்வியால் ஒருவர் அடையும் தனிப்பட்ட வளர்ச்சி, தேசிய வளர்ச்சிக்கான அதன் பங்களிப்பு பற்றியும் சமூக - பாலின பேதமின்றி அனைவருக்கும் சமமான கல்வி வழங்குதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாணவர்களின் ஆர்வத்தையும் பங்களிப்பையும் ஊக்குவிக்கக் கற்றல், கற்பித்தல் தொடர்பான விவாதங்கள், கலந்துரையாடல், போட்டிகள், பயிலரங்குகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் கல்வித் துறையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மாற்றத்துக்கு ஈடுதரும் வகையில் கற்றல், கற்பித்தல் முறைகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. பணியில் சேர்ந்து வாழ்வாதாரம் உயர்வதற்கான ஒரு கருவியாக மட்டும் கல்வியைப் பார்க்காமல், ஆராய்ச்சிக் கல்வியில் மாணவர்களின் பங்கு தேவைப்படுகிறது. எந்தவொரு துறையானாலும் ஆராய்ச்சியும் ஆய்வும் இருந்தால் மட்டுமே அந்தக் குறிப்பிட்ட துறையில் புதுமைகளைப் புகுத்த முடியும்; முன்னேற்றம் அடைய முடியும். இதற்குக் கல்வித் துறையும் விதிவிலக்கல்ல.

ஒரு துறையின் ஆராய்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்பதால், ஆராய்ச்சிக் கல்வி சார்ந்து இயங்கும் திட்டங்களில் மாணவர்கள் அதிகம் பங்கெடுக்க வேண்டும். மாணவர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் பல்துறை சார்ந்தவையாக இருத்தல் நல்லது. இதற்காக எழுத்துத் திறன், மொழித் திறன்களைப் பட்டப்படிப்பு படிக்கும்போதே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசு, தனியார் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் இணைப்புக் கல்லூரிகள் போன்றவற்றில் ஆராய்ச்சிப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பொறியியல், மருத்துவம், மேலாண்மை, சட்டம், கலை எனப் பல்வேறு பிரிவுகளில் விருப்பப் பாடத்தைத் தேர்வுசெய்து மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x