Published : 17 Sep 2024 06:25 AM
Last Updated : 17 Sep 2024 06:25 AM
எதிர் பாலினத்தவரைக் கிண்டல் செய்வது, கேலி செய்வது என்பது இருபாலினத்தவரும் செய்யக்கூடிய குறும்புத்தனம். குடும்பங்களிலேயே கூட சகோதர சகோதரிகளிடையே ஏற்படும் சேட்டைகள் இயல்பானது. அண்ணன் தூங்கும்போது மீசை வரைந்து விடுவது, பள்ளிக்கு மட்டம், குறைவான மதிப்பெண் பெறும்போது காட்டிக்கொடுப்பது என்பவை இன்றும் காணக்கிடைப்பவை. இவ்வகையான குறும்புகள் ஒரு வட்டத்துக்குள் நின்றுவிடும். பெரும்பாலும் பிற்காலங்களில் நினைத்துப் பார்க்கக்கூடிய மலரும் நினைவுகளாகக் கூட அமையும்.
தமிழ்த் திரைப்படங்களில் கூட இது போன்ற நகைச்சுவைக் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. எங்கே கவலை பிறக்கிறது? இன்றைய காலகட்டத்தில் வரம்பு மீறிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது. தன்னை ஒரு பெண் காதலிக்கவில்லை என்று சொன்னால் அவரை துன்புறுத்தி கொலை செய்யும் அளவுக்குக் கூட செல்கிறது. இதைப் பார்க்கையில் சமூக இயங்கியலில் ஏற்பட்டுவரும் பாரதூரமான மாற்றங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. இதில் சினிமா, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள்உள்ளிட்ட பல்லூடகங்களுக்கு மிகப்பெரிய பொறுப்புண்டு.
ஒரு காலத்தில் திரைப்படம் என்பது ஓய்வு நேரத்தில் பார்க்கும் ஒன்றாக இருந்தது. அதுபோலவே மாலை நேரத்தில் ஒளிபரப்பப்படுவதாகத் தொலைக்காட்சித் தொடர்கள் இருந்தன. இன்றைக்கு வீட்டிலோ வெளியிலோ விழித்திருக்கும் நேரமெல்லாம் நச்சுக் கருத்தை விளைவிப்பதாக ஊடகங்கள் விளங்குகின்றன.
தணிக்கைக்கு வாய்ப்புண்டா? - சிந்தனையில் நஞ்சை கலப்பதாய் பல்லூடகங்கள் உள்ளன. எவ்விதமான தணிக்கைக்கும் ஆட்படாமல் பல ஆபாசமான காட்சிகளும் சுதந்திரமாய்த் திரிகின்றன. யார் வேண்டுமானாலும் தனிப்பட்ட வகையில் சேனல்களைத் தொடங்கி குப்பையைக் கொட்டத் தொடங்கிவிடுகின்றனர். இவர்கள் நம் மீது வீசும் கழிவை அகற்ற யாரோ ஒருசிலர் மட்டும் பணிகள் செய்தால் போதுமானதாக இருக்குமா? ஆகவே பல்லூடகங்களுக்கு ஏதாவது ஒருவகையில் தணிக்கை முறையைக் கொண்டு வந்துதான் ஆகவேண்டும்.
சரி இதுபோன்ற ஆண்களின் செயல்பாடுகளை எதிர்க்கப் பெண்கள் வலிமையாகப் போராடப் பயிற்றுவிக்கலாம் என்று ஆலோசிக்கையில் கல்வியாளர் பேரா. கிருஷ்ணகுமாரின் கருத்து யோசிக்க வேண்டியதாகிறது. “சிறுவர்கள் வயதாக ஆக வெளியில் சுதந்திரமாகச் சுற்றுவது அதிகமாகும்போது சிறுமிகள் விஷயத்தில் வெளியில் சுதந்திரமாக புழங்குவது குறைகிறது. இதனால் அவர்களுக்கான முறை சாராக் கல்விக்கான வாய்ப்பு வெகுவாக மட்டுப்படுகிறது” என்றார்.
சிறுமிகள் இயல்பாக இயங்கும் சமூகம் உருவானால் மட்டுமே அவர்கள் சவால்களை வலிமையாக எதிர்கொள்ளும் திறன் பெறுவர். குறிப்பாக தேசிய கல்விக் கொள்கை வரைவில்கூட சிறுமிகள் வெளியில் செல்லும்போது பாலியல் ரீதியாகத் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். இதனைத் தவிர்க்க சிறுமிகள் இணைய வழியில் கல்வி கற்கலாம் என்று கூட ஆலோசனை கூறியது. சாலையில் முட்கள் இருக்கிறது என்று சொன்னால் அதனை நீக்கவேண்டுமே தவிர சாலையைத் தவிர்க்கவா வேண்டுகோள் வைப்பது என்று பல கல்வியாளர்களும் இதனை விமர்சித்தோம்.
தீர்வுதான் என்ன? - பாலின சமத்துவம் என்பது மனம், வாக்கு, செயல் இந்த மூன்று கூறுகளிலும் வெளிப்பட வெளிப்படத்தான் நனவாகும். இன்றைக்குப் பள்ளி குடும்பம், சமுகம் ஆகிய மூன்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும். குறிப்பாகப் பள்ளிகளை இருபாலர் பள்ளிகளாக மாற்றி சரியான பார்வையினை உருவாக்குவது.
ஆண் பெண் நட்பே தவறு என்ற கண்ணோட்டத்தினை மாற்றி சரியான முறையில் பழக வாய்ப்பு அளிப்பது. ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் நட்பாய் இருப்பது தவறல்ல என்ற பார்வையை விதைப்பது. எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்களின் துணிவைக் கூட்டுவது. சமூகமாக இயங்குவதை உறுதிசெய்வது போன்ற ஏற்பாடுகள் அவசர அவசியம். மொத்தத்தில் பெண்களை மாண்புடன் நடத்துவது என்பது ஆளுமையின் அங்கமாக மாற வேண்டும்.
- கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்; தொடர்புக்கு:thulirmadhavan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT