Published : 27 Aug 2024 06:30 AM
Last Updated : 27 Aug 2024 06:30 AM
கருவறையின் முகவரியான தாயின் புன்னகையில் உலகத்தைக் கண்டுணர்ந்த குழந்தைகளின் உலகம் மகிழ்ச்சி நிறைந்தது. தான் காண்பது அனைத்தையும், ரசித்து கண் சிமிட்டி, சிறு புன்னகை வீசி ரசிக்கும் குழந்தைப் பருவம் மூன்று ஆண்டுகள் மட்டுமே.
தந்தையின் அரவணைப்பில் அழுகை நிறுத்தி, ஆறுதல் கொள்ளும் அற்புதப் பருவம் குழந்தைப் பருவம். பெற்றோரின் கரம் கோர்த்து மகிழ்ச்சியையே எதிர்நோக்கிய குழந்தைப் பருவம் சந்திக்கும் அடுத்த கட்ட பயணமே பள்ளிப் பருவம்.
அதுவரை விரல் பிடித்து நடை பழக்கிய பெற்றோர், விரல் நகர்த்தி புதிய பாதையை கைநீட்டி பயணப்படுத்தும் அற்புதமான பருவம் பள்ளிப் பருவம். அதிகபட்சம் மூன்று வயதே முதிர்ச்சி அடைந்த பருவமாக கணக்கில் கொள்கிறது பள்ளிப் பருவம்.
தொடக்கக் கல்வியில் முழு மதிப்பெண். எல்லாப் பாடத்திலும் முழு மதிப்பெண், மொழியின் முதல் எழுத்தை குழந்தைகள் எழுத முற்படும் போது ஆகாயத்தையே அசைத்துப் பார்த்தது போன்ற அற்புத உணர்வு அடையும் பெற்றோர், சற்றே வளர்ந்த பிறகு ஏற்படும் கற்றல் பின்னடைவை ஏற்றுக் கொள்வதில்லை. தான் கற்றபோது அடைந்த சிறு சிறு ஏற்ற இறக்கங்களைத் தன் குழந்தையும் கடந்துதானே வர வேண்டும் என்ற புரிதல் ஏற்பட கால தாமதம் ஆகிறது.
திட்டமிடல்: ஆண்டுகள் கடக்க கடக்க பருவங்கள் குழந்தைகளுக்கு மாறுவது போல வகுப்புகள் மாற மாற பாடப்பகுதிகள், மதிப்பெண் வழங்கும் முறை,விடைத்தாள்களில் நேர்த்தி, செயல்பாடுகளில் முனைப்பு, இப்படி பலதரப்பட்ட கூட்டு விஷயங்களின் முடிவு தான் மதிப்பெண் என்பதை பெற்றோர் மனம் ஏற்க மறுக்கிறது.
பெற்றோர்கள் ஆசிரியர்களைச் சந்திக்கும்போதெல்லாம் நாள் முழுக்க உங்களிடமே இருக்கின்றான்/ இருக்கிறாள், நீங்களே சொல்லுங்கள் என்று பொறுப்பு துறப்பு செய்துப்பதவி விலகிக் கொள்கின்றனர். பள்ளியில் சிறப்பு வகுப்பு, வீடு வந்தவுடன் மற்றொரு சிறப்பு வகுப்பு என நேரத்தை வீணாக்காமல் திட்டமிட்டுத் தருகின்றனர் பெற்றோர். ஆனால், குழந்தைகளின் அனுமதியோடுதானா என்பது கேள்விக்குறியே.
ஒப்பிடல்: இயந்திரமா குழந்தைகள்? நாள் முழுக்க வகுப்பறை, மாலையில் சிறப்பு வகுப்பு, விடுமுறை நாட்களில் எதிர்கால பயணத்திற்காக சில வகுப்புகள், தனி திறமைகளைக் கொண்டு செல்ல சில வகுப்புகள் என வாழ்க்கையே வகுப்புகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் மனதை யார் புரிந்து கொள்வது? வீட்டில் இருக்கும் மற்றொரு குழந்தையோடு அல்லது அக்கம்பக்கத்துக் குழந்தைகளோடு ஒப்பிடல், வகுப்பறையில் உள்ள அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளோடு ஒப்பிடல், உறவினர்களின் குழந்தைகளோடு ஒப்பிடல் என பலவகையான ஒப்பிடல்கள் நடக்கின்றனவே தவிர தம் குழந்தையின் திறனை, சோதித்து அறிந்து கொள்ள முயல்வதில்லை. அவர்களது ஆற்றாமையை அறிந்து கொள்ள சிரத்தை எடுப்பதில்லை.
ஆற்றுப்படுத்தல்: குழந்தைகளின் மனச்சுமையைப் பெற்றோர் தாங்கிப் பிடிக்க வேண்டும். ஆறுதலும், உத்வேகமும் கொடுக்க நேரம் செலவழிக்க வேண்டும். சென்ற முறையைவிட இந்த முறை சற்றே முயன்றிருக்கிறாய், உன் முயற்சிக்கு எனது பாராட்டுகள் என மனம் மகிழ்ந்து பாராட்டுங்கள்.
உங்களது சிறிய பாராட்டு, பெரிய மாற்றத்திற்கான விதையாக மாறும் என்பதை மறவாதீர்கள். பெற்றோர்களே முதல் ஆசிரியர்; குடும்பமே முதல் பள்ளி என்பதை நாளும் நினைவில் கொள்ளுங்கள். பெற்றோர்களின் அதீத அன்பும் ஆற்றுப்படுத்தும் அக்கறையும் ஊக்க மருந்தாக மாற வேண்டும்.
சிறிய பாராட்டு பெரிய மதிப்பெண்ணை இலகுவாக்கும் எளிய எந்திரம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். வெல்லட்டும் அன்பு மதிப்பெண்களாக.
- கட்டுரையாளர்: தமிழாசிரியர், குழந்தை நல ஆர்வலர் தொடர்புக்கு: agracy5533@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment