Last Updated : 23 Jul, 2024 06:15 AM

 

Published : 23 Jul 2024 06:15 AM
Last Updated : 23 Jul 2024 06:15 AM

படிப்பில் முன்னேற்றம் காண பெற்றோரின் பங்கு அவசியம்

எழுபது, எண்பதுகளில் தொடக்கப் பள்ளி மாணவர்களின் ஒரே கற்றல் பொருள், ‘சிலேட்’ என்றழைக்கப்படும் மரச்சட்டகத்துக்குள் இருக்கும் சிறிய பலகை. அதை கையில் எடுத்துக் கொண்டு சிலேட்டுக்குச்சி என்ற பலப்பங்கள் நான்கை பாக்கெட்டில் போட்டுக் கொண்டால்போதும் மாணவர் பள்ளிக்கு தயார்.

அந்த காலகட்டத்தில் படித்த மாணவரின் வீட்டுப்பாடம் என்பது தனது ஸ்லேட்டில் இரவு முழுக்க எழுதி வைத்தவைதான். காலையில் பள்ளிக்கு வரும்போது தமது உடம்பிலோ அடுத்தவர் மேலோ பட்டு தான் எழுதியது அழிந்துவிடாமல் கொண்டுவருவர். ஆசிரியரிடம் காட்டி ஒரு ‘டிக்’ பெற்றுக்கொள்வர்.

அனைவருக்கும் பாடநூல்: அப்போது பாட புத்தகத்தை ஆசிரியர் மட்டுமே வைத்திருப்பார். ஒரு சில மாணவர்கள் வாங்கி படிக்கும் பாடநூல்களை அடுத்த வகுப்பு மாணவர்களுக்கு விலைக்கு விற்பர். புத்தகங்களின் பராமரிப்புக்கேற்ப கால் விலை, அரை விலை, முக்கால் விலை இப்படியாக விலை கொடுத்து பாடநூல்களை வாங்க வேண்டிய நிலை இருந்தது.

பிற்காலத்தில் மாவட்டத் தொடக்கக் கல்வித் திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் போன்ற தமிழக அரசின் திட்டமானது அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாகப் பாடநூல் வழங்கத் தொடங்கின. பிறகு குறிப்பேடு, மடிக்கணினி இப்படியாக பல்வேறு கற்றல் துணைக்கருவிகளும் விலையில்லாமல் அரசால் வழங்கப்பட்டது.

குழந்தை மைய கற்றல்: இன்றைய தொழில்நுட்ப உலகில் இவை எல்லாம் பழைய கதையாகிவிட்டது. 2009-க்கு பிறகு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துடன், பள்ளிகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் செயல் திட்டங்கள் அளிக்கத் தொடங்கினர்.

இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் பல நேரம் கையில் ஏதாவது ஒரு படைப்பைக் கொண்டு செல்வதைப் பார்க்க இயல்கிறது. நல்ல வழிகாட்டியாக திகழக்கூடிய வட்டார கல்வி அலுவலர்கள் அமைந்துவிட்டால் அந்த ஒன்றியத்தில் கிராமங்கள் தோறும் இவ்வாறு நிகழ்வது அன்றாட காட்சி ஆகிவிடுகிறது.

வகுப்பறையைத் தாண்டி.. குழந்தைகள் இவ்வாறு கற்றல் பொருட்களை எடுத்துச் செல்வது என்பது ஒரு நல்ல பரிணாம வளர்ச்சி. இன்னும் இதில் மேம்பட வேண்டி இருக்கலாம். ஆனால், தொடக்கப் பள்ளி குழந்தைகள் தானாக செய்யக்கூடிய செயல் இதுவல்ல. அந்த வீட்டில் உள்ள பெற்றோர் ஓரளவு எழுத்தறிவு பெற்றவர்களாகவும், குழந்தைகளுக்கு கற்றலில் உதவ வேண்டும் என்ற மனப்பான்மை உடையவர்களாகவும் இருத்தல் அவசியமாகிறது. தமிழக பெண்களில் 73 சதவீதத்தினர் எழுத்தறிவு பெற்றிருப்பதால் இது சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் தமிழ்நாட்டில் கனிந்திருக்கிறது.

இந்நிலையில், குழந்தைகளின் கல்வியில் துரித முன்னேற்றம் ஏற்பட பெற்றோர் ஈடுபட வேண்டும் என்ற உத்வேகத்தினை பள்ளி ஆசிரியர்களால் மட்டும் அளிக்க முடியாது. ஊடகங்கள் இதுபோன்ற செயல்பாடுகளில் பெற்றோர் ஈடுபட வேண்டும் என்பதை ஏதாவது ஒரு வகையில் சொல்லிக் கொண்டிருக்கவேண்டும். இன்று காட்சி ஊடகத்தின் தாக்கம் என்பது மிகவும் பலமாகவே உள்ளது.

அந்த வகையில் எவ்வளவோ கருத்தோட்டங்களைக் கொண்டு உருவாக்கக்கூடிய மாலை நேர தொடர்கள் கொஞ்சம் இதுபோன்ற செயல்பாடுகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதாக அமைய வேண்டும். மற்றபடி வணிக ரீதியாக அவர்கள் செய்து கொண்ட விஷயங்களில் நமக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அந்த வணிக ரீதியான படைப்புகளுக்கு மத்தியிலே கற்றல் என்பது ஒரு குடும்பமே இணைந்து ஒரு குழந்தைக்கு கொடுக்க வேண்டியது என்ற புரிதலை மேம்படுத்தவேண்டும்.

ஆங்காங்கே சில திரைப்படங்கள் கல்வி சம்பந்தமான விஷயங்களை வைத்துக் கொண்டு இருந்தாலும் தினம் தினம் மக்கள் பார்க்கக் கூடிய தொடர்கள் இதில் பெரும் பங்காற்ற முடியும். ஆசிரியர்கள் தமக்கு இருக்கக்கூடிய பல்வேறு பணிகளுக்கு மத்தியிலே பெற்றோர்களை குழந்தைகளின் செயல்பாடுகளில் ஈடுபடுத்தும்போது நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்படி வகுப்பறையைத் தாண்டியதாக, பள்ளியைத் தாண்டியதாக கற்றல் செயல்பாடுகள் நீள்வது என்பது அவசர அவசியம்.

- கட்டுரையாளர்கல்வியாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்; தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x