Last Updated : 16 Jul, 2024 06:15 AM

2  

Published : 16 Jul 2024 06:15 AM
Last Updated : 16 Jul 2024 06:15 AM

என்ஐடி, ஐஐடியில் கால்பதிக்கும் தமிழ்நாட்டின் எளிய மாணவ, மாணவிகள்

அறுபது ஆண்டுகால வரலாற்றை உடைய திருச்சி என்.ஐ.டிக்குள் முதன்முறையாக இரண்டு பழங்குடியின மாணவிகள் உயர்கல்விக்காக நுழைந்திருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் மகன் சென்னை ஐஐடிக்குள் நுழைந்திருக்கிறார். சில தலைமுறைகளாகத் தொடர்ந்து கல்வி பெறுகிற, ஓரளவு பொருளாதார வசதியுடைய குடும்பத்தைச் சார்ந்த மாணவர்களுக்கே எட்டாக்கனியாக இருக்கும் இக்கல்விவாய்ப்பு அரசு பள்ளியில் பயின்ற இம்மாணவர்களுக்கு எப்படிக் கிட்டியது?

இதற்குப் பின்னால் உறுதியான தொலைநோக்கு பார்வையும் தெளிவான திட்டமிடலும் தளராத செயலாக்கமும் இடைவிடாத போராட்டங்களும் அரசு பள்ளி ஆசியர்களின் அயராத உழைப்பும் மாணவர்களின் குன்றாத ஆர்வமும் இணைந்திருக்கின்றன. மருத்துவக்கல்விக்கு நீட் தேர்வு கட்டாய மாக்கப்பட்டதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதிய இடம் கிடைக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

எனவே, மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடமளிக்க வகைசெய்யும் சட்டத்தை தமிழ்நாடு அரசு 2020ஆம் ஆண்டில் இயற்றியது. அதன் விளைவாக, அரசு பள்ளிகளில் பயின்ற 435 மாணவர்கள் 2020-21ஆம் ஆண்டிலும், 555 மாணவர்கள் 2021-22ஆம் ஆண்டிலும், 584 மாணவர்கள் 2022-23ஆம் ஆண்டிலும், 622 மாணவர்கள் 2023-24ஆம் ஆண்டிலும் மருத்துவக்கல்வி பெறுகின்றனர்.

மருத்துவக்கல்விக்கு வழங்கப்படுவதைப்போலவே, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் உள்ளிட்ட இளநிலை தொழிற்கல்விப் படிப்புகளில் பயில அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா 2021 இல்தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

அம்மாணவர்களின் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், கலந்தாய்வுக்கட்டணம் ஆகியவற்றையும் அரசே ஏற்றது. இதனால் 2021-22ஆம் கல்வியாண்டு தொடங்கி மூன்று ஆண்டுகளில் 28,749 அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு தொழிற்படிப்புகளில் இணைந்துள்ளனர். அவர்களுக்காக 2024-25 நிதியாண்டில் ரூ. 511 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்விக்கூடத்தில் நுழைய பயிற்சி: இதற்கும் அப்பால், ஆர்வமும் திறமையும் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிலையங்களில் சேர்வதற்குத் தேவையான மதிப்பெண்களைப் பெற, அவர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கில் மாவட்டம்தோறும் மாதிரிப்பள்ளிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டுறைவிடப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 2000 மாணவர்கள் பயில்கின்றனர்.

மேலும் பிளஸ் 2 படிக்கும் பிற மாணவர்கள் மருத்துவக்கல்லூரி, ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, என்ஐஎஃப்டி ஆகிய நாட்டின் தலைசிறந்த உயர்தொழில் நுட்ப நிறுவனங்களில் பயில்வதற்கு எழுத வேண்டிய ஜெஇஇ, நீட், என்ஏடிஏ (NATA), ஐஎம்யு-சிஇடி (IMU-CET), கியூட் ஆகிய நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்கான பயிற்சிகளும், வெளிநாட்டில் சென்று பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவற்றை மேற்கொள்வதற்கான உதவிகளும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன.

இத்தகைய முயற்சிகளின் விளைவாக, கடந்த கல்வியாண்டில் 186 அரசு பள்ளி மாணவர்கள் மேற்கூறிய உயர்கல்வியில் சேர்ந்தனர். இந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்ற பழங்குடியின மாணவிகள் ரோகிணி, சுகன்யா, மாற்றுத்திறனாளியான ஆர்த்தி ஆகியோர் திருச்சி என்ஐடியிலும் ஆட்டோ ஓட்டுநர் மகனான பார்த்தசாரதி சென்னை ஐஐடியிலும் சேர்ந்திருக்கின்றனர். இன்னும் பலர் இப்பட்டியலில் இவ்வாண்டில் இணைவர்.

ஊக்குவிப்புத் திட்டங்கள்: இவை மட்டுமன்றி, 2024-25ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக 2252.51 கோடி ரூபாயும் பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக 43.23 விழுக்காடு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையைப் பெருக்கிட புதுமைப்பெண் திட்டமும் ஆண்களின் சேர்க்கையை உயர்த்திட தமிழ்ப்புதல்வன் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டால் பயனடையும் மாணவர்கள் அனைவரும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள்.

அவர்தம் பெற்றோரோ கூலித்தொழிலாளர், வீட்டுவேலை செய்பவர், ஏழைவிவசாயி, ஆட்டோ ஓட்டுநர் என விளிம்புநிலையினர். பெருந்தொகையைச் செலவிட்டு உயர்கல்வியைப் பெற இயலாத பொருளாதாரச் சூழலில் வாழும் இவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்றுக்கொண்டு இருப்பதும் 7.5% இட ஒதுக்கீடும் இவர்களது உயர்கல்விக் கனவை நனவாக்கி உறுதியான சமூக மேம்பாட்டிற்கான அடித்தளத்தை அமைத்திருக்கின்றன.

இந்த அடித்தளத்தை சரியாகப் பயன்படுத்தி, அரசு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து முழுமூச்சோடு முயன்றால், தமிழ்நாட்டின் உயர்கல்வியில் மொத்தச் சேர்க்கை விகிதம் தற்போதைய 47 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காட்டை விரைவில் எட்டும் என நம்பலாம்.

- கட்டுரையாளர்: வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர், பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x