Published : 25 Jun 2024 06:45 AM
Last Updated : 25 Jun 2024 06:45 AM
பலமுறை நான் குள்ளமாக்கப்படுகிறேன்
மின்கம்பியை முட்டிக்கொண்டு வளர்ந்த மரக்கிளையின் உச்சிப்போல
ஒவ்வொரு பருவத்திலும் நான் கத்தரிக்கப்படுகிறேன்
என்னை கடந்து செல்பவர்களில் சிலர் எனது சாதி என்னவென்று உறுத்துகிட்டே உற்றுப் பார்க்கையில்!
- பல்பீர் மதோபுரி எழுதிய பஞ்சாபி மொழி கவிதை
“தீண்டாமை மனிதநேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும்” என்று அச்சடிக்கப்படாத பாடப்புத்தகங்கள் இல்லை. அதிலும் 1950-லேயே தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக இந்திய சாசனம் சட்டம் பிறப்பித்தது. ஆனாலும் ஏட்டில் நீக்கப்பட்ட சொல்லை நாட்டிலிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தும் வழியை இன்றும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வால் ஏற்படும் வன்முறைகளைத் தவிர்க்கவும் சமூக நல்லிணக்கத்தைப் பேணவும் அதற்கான வழிமுறைகளை வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட குழு பரிந்துரைகள் வழங்கியுள்ளது.
இதில், மொத்தமுள்ள 20 பரிந்துரைகளில் பலவற்றுக்கு எதிர்ப்பும் வரவேற்பும் மாறி மாறி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நெடுங்காலமாகப் பேசப்பட்டு வரும் ஒரு பரிந்துரை இதில் இடம்பெற்றிருந்தாலும் தற்சமயம் பேசு பொருளாகவில்லை. அது அறநெறி கல்வி புகட்டுதல் குறித்ததாகும்.
6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2வரையிலான அனைத்து விதமான பள்ளி மாணவர்களுக்கு ‘அறநெறி வகுப்புகள்’ நடத்த வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பரிந்துரையாகும். வாரம் ஒரு வகுப்பு இதற்கென ஒதுக்கப்பட வேண்டும், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் சுழற்சி முறையில் இதனை பயிற்றுவிக்க வேண்டும், வருகை தரும் நிபுணர்கள் மூலமாகவும் சிறப்புரைகள் ஏற்பாடு செய்யப்பட வெண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகநீதி, சமத்துவம், ஏற்றத்தாழ்வுகளைக் களையும் நோக்கில் இதற்கான புதிய கையேடு தயாரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறம் செய்வது எப்படி? - அறநெறி பாடம் என்பது திருக்குறளையும், அறம் செய்ய விரும்பு என்று ஆத்திச்சூடியையும், ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதாகவும் கற்பிப்பதினால் மட்டும் வந்துவிடாது. ஏனெனில் இவற்றை நமது பள்ளிகள் ஏற்கெனவே நெடுங்காலமாகப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.
ஆகையால், சுவாரஸ்யமான புதிய வடிவங்களில் அறநெறிகளை நமது இளையோர் மனதில் பதியம் போட வேண்டும். உதாரணத்துக்கு, ஆரம்பத்தில் சொன்ன தீண்டாமை பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். தீண்டாமை தவறு என்ற வாசகம் மட்டும் இளம் வாசகரின் மனதை உலுக்கப்போவதில்லை. அதுவே முதலில் இடம்பெற்ற பாடலை மீண்டும் வாசித்துப் பாருங்கள். சாதிய பாகுபாடு ஏற்படுத்தும் வலியை மெல்லிய உணர்வாக கடத்துகிறதல்லவா?
அதிலும் பஞ்சாபி மொழி பாடல் என்பதிலிருந்து சாதிய சிக்கல் ஏதோ நமது சமூகத்தை மட்டும் பிடித்தாட்டவில்லை. நாடு தழுவிய பிரச்சினை இது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. முக்கியமாக இந்த பாடல் பிரச்சார தொனியில் இல்லாமல் இலை மறை காயாக இருப்பதால் குழந்தைகளுக்குள் ஒருவிதமான தேடலை தூண்டும். இதுபோன்று போதனையாக அல்லாமல் கதை, கவிதை, வரலாற்று சம்பவங்களை எடுத்துரைத்தல் கைகொடுக்கும்.
அதைவிட இதுபோன்ற கதைகள், கவிதைகளை வகுப்பறையில் வாசித்த பிறகு எது சரி, எது தவறு என்ற முடிவை ஆசிரியர் கூறாமல் மாணவர்கள் மத்தியில் கேள்விக்கணைகளை வீசுதல், உரையாடலை தூண்டுதல் மனமாற்றத்துக்கு வித்திடும்.
இதேபோன்று, எந்தெந்த அறப்பண்புகள் இந்த பாடத்திட்டத்தில் இடம்பெறப்போகின்றன என்பதை முதலில் வகுக்க வேண்டும். மற்றவர்கள் மீதான அக்கறை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், மன்னித்தல், சுதந்திர உணர்வு, சக மனிதர்களை நேசித்தல், பாலின சமத்துவ நுண்ணுணர்வு, தேசிய ஒற்றுமையைப் பேணுதல், பண்பாட்டு வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளுதல், சூழலியல் நண்பராக வாழுதல், சுயமரியாதை காத்தல், சமூக அக்கறை கொண்டிருத்தல், சரி எது தவறு எது என்பதை பிரித்தறியும் விமர்சனப்பார்வையை வளர்த்துக் கொள்ளுதல், வன்முறை வீரம் அல்ல என்ற புரிதலை ஏற்படுத்துதல், குடி, புகை, போதைபழக்கங்களை தவிர்த்தல் போன்ற முக்கிய அறப்பண்புகள் அடையாளம் காணப்பட்டு அவற்றைக் கடத்தும் கதைகள், கவிதைகள், விளையாட்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பூமாலை போல கோர்க்கப்பட வேண்டும்.
கூட்டு முயற்சி! - அதேபோன்று 6ஆம் வகுப்பு பயிலும் சிறுவர்களுக்குப் பரிந்துரைக்கும் அதே பாடப்பகுதியை பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கற்பித்தலும் போதாது. இரண்டு விதமான கையேடுகள் வயதுவாரியாகத் தயாரித்தல் அவசியமாகிறது. பயிற்றுவிக்கும் முறையும் தீர்மானிக்கப்பட்டு அவ்வப்போது ஆசிரியர்களுக்கு அதற்குரிய பயிலரங்குகள் நடத்தப்பட வேண்டும். இப்படி ஆசிரியர்களும் மாணவர்களும் கூட்டாக இணைந்து செயல்முறையில் பயின்றால் மட்டுமே நடைமுறையில் மாற்றம் நிகழும்.
தங்களின் மதம், சாதி, இனம், மொழி கடந்து அனைவரையும் சகோதரத்துவத்துடன் அணுகி, சமமாக நடத்தி ஒற்றுமையாக வாழும் கடமை அனைவருக்கும் உள்ளது. இத்தகைய கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்டதுதான் இந்திய அரசியலமைப்பின் முகவுரை. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஆகையால், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் சிறார் மனதில் விதைக்க சமதர்மம் போற்றும் முகவுரை அறநெறி கையேட்டின் முகப்பில் இடம்பெறுவது மாற்றத்துக்கான முதல்படியாக இருக்கும்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT