Published : 22 May 2024 03:08 PM
Last Updated : 22 May 2024 03:08 PM
இசைஞானி இளையராஜாவின் பெயரில் இசை ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. ஒரு கலை வடிவத்தை பயிற்றுவிக்க ஐஐடி முன்வந்திருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை. இது பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்னால் ஐஐடியின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோமா!?
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் திகழ்ந்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது 23 ஐஐடிகள் செயலாற்றி வருகின்றன. இவற்றில் சென்னை ஐஐடி உட்பட ஐந்து ஐஐடிக்களை முதன்முதலில் தொடங்கி வைத்தவர் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
இந்தியா கல்வியில் எட்டவேண்டிய உயரத்தை அடைய 1949-ல் அமெரிக்கா சென்றபோது உலகப் புகழ்வாய்ந்த தொழில்நுட்ப கல்வி நிலையமான மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை நேரு பார்வையிட்டார். அதற்கு இணையான கல்வி தரத்தில் ஐஐடி-ஐ முதன்முதலில் காரக்பூரில் 1950-ல் நிறுவினார். அதைத் தொடர்ந்து பம்பாய் ஐஐடி (1958), சென்னை ஐஐடி (1959), கான்பூர் ஐஐடி (1959), டெல்லி ஐஐடி (1961) ஆகிய நிறுவனங்களை இந்திய அரசின் நிதியில் தொடங்கினார். இதையடுத்து ஐஐஎம் எனப்படும் இந்திய மேலாண்மை கழகம், இந்திய சுரங்கப் பள்ளி, வேளாண் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நேரு தான் நிறுவினார்.
இத்தகைய பின்னணியில் தொடங்கப்பட்ட ஐஐடிகளில் தற்போது ஏரோஸ்பேஸ் பொறியியல் தொடங்கி மெட்டலர்ஜிக்கல் பொறியியல் வரை கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலாண்மை படிப்புகள் தொடங்கி மருத்துவ அறிவியல் தொழில்நுட்பம் வரை பயிற்றுவிக்கப்படுகிறது. இதுபோன்ற அதிநவீன அறிவியல் படிப்புகள் கற்றுத்தரப்படும் ஒரு உயர்கல்வி நிலையத்தில் கலையும் பண்பாடும் ஊடாடும் தனது இசையை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டிய வரலாற்று அவசியத்தை உணர்த்தி புதிய சகாப்தம் படைத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா.
‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து சென்னை ஐஐடியில் இசைஞானி இளையராஜா உரையாற்றுகையில், "எதை செய்தாலும் வேட்கையுடன் கவனம் செலுத்தி செயல்பட்டால் உச்சத்தை அடையலாம். இசைக்கலைஞர் மொசார்ட் தோன்றி 200 ஆண்டுகளான பிறகும் உலகத்தால் இன்னொரு மொசார்ட்டை உருவாக்க முடியவில்லை. இந்த கல்வி நிலையத்தின் வழியாக 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை" என்றார்.
இசைஞானி இளையராஜாவின் இசை தனி ரகமாக ரீங்காரமிட முக்கிய காரணம் அவர் கற்பனைக்கு அப்பாற்பட்ட வகையில் மேற்கத்திய இசை நுணுக்கங்களை நாட்டுப்புற இசையிலும் தமிழ் இசையிலும் கர்நாடக சங்கீதத்திலும் இழையோடச் செய்தவர். இந்த பாங்கை பாராட்டி வியந்த இசை ஆய்வாளர்கள் பலருண்டு. தற்போது இளையராஜாவே தனது மனதுக்கு நெருக்கமான மாமேதை மொசார்ட்டை மேற்கோள்காட்டிவிட்டதால் நமது ’ராஜா’ ரசிகர்கள் வழக்கத்தைக் காட்டிலும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். அதிலும் சில தினங்களுக்கு முன்புதான் புதிய சிம்பனி எழுதி முடித்திருப்பதாகவும் இளையராஜா அறிவித்துவிட்டதால் அந்த கொண்டாட்டமும் கைகோத்துக் கொண்டுவிட்டது.
இசைஞானி இளையராஜாவின் பல பாடல்களில் சிம்பனி பாணி பின்னிப்பிணைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் ’மொசார்ட் மீட்ஸ் இளையராஜா இன் சிம்பனி நம்பர் 25’ என்ற இசை பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் மேற்கூறிய இரண்டு அறிவிப்புகளும் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்பே இந்த இசைப் பதிவு யூடியூப் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
‘டைட்டன்’ கைக்கடிகாரத்தின் விளம்பரத்தில் ஒலித்த மொசார்ட்டின் சிம்பனி நம்பர் 25, ‘90ஸ் கிட்ஸ்’களுக்கும் அதற்கு முந்தைய 'கிட்ஸ்களுக்கும்’ நன்கு பரிச்சயம். 'விமல்பெர்சி’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் நபர் மொசார்ட்டின் இசை கோர்வையை அட்டகாசமாக இசைஞானி இளையராஜாவின் 'வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்’ (‘கிழக்கு வாசல்’, 1990) பாடலின் இசை கோர்வையுடன் சங்கமிக்கச் செய்து காட்டியிருக்கிறார்.
மொசார்ட்டின் இசை குறிப்புகள் ஒரு வயலினில் இழையோட மற்றொரு வயலின் வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும் என நாதம் எழுப்பி தானும் கரைந்து நம்மை உருக்கிவிடுகிறது. தனது இசைப் பதிவு பற்றிய குறிப்பில், “மொசார்ட்டின் மிக பிரபலமான அழகிய சிம்பனி நம்பர் 25ஐ முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு ஒரு நாட்டுப்புற பாடலை வடிக்கிறேன் பார் என்று தனக்குத்தானே இளையாராஜா சவால்விட்டுக் கொண்டார். ஒருவேளை இளையராஜாவின் பாடலை கேட்டு ஊக்கம்பெற்று மொசார்ட் சிம்பனி எழுதியிருந்தால் எப்படி இருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன்” என்று அழகுற ‘விமல்பெர்சி’ யூடியூபர் எழுதியிருக்கிறார்.
சென்னை ஐஐடியின் மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்குள் மொசார்ட்டை மட்டுமின்றி மேலும் பல இசைமேதைகளை இளம் இசைஞர்கள் சந்திக்க நமது இசைஞானி ஏற்பாடு செய்யும் நாள் இதோ வந்துவிட்டது.
கட்டுரையாளர் - தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT