Published : 27 Feb 2024 04:30 AM
Last Updated : 27 Feb 2024 04:30 AM
புத்தாண்டு பிறந்தது. தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் நம்உள்ளம் மகிழ்வாய்த் திறந்தது. அறுவடைத் திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தோம். அடுத்து வருகிறது மாணவர்களின் கற்றல் திறனைத் தெரிந்து கொள்ள, மதிப்பெண்களை அறுவடை செய்ய, தேர்வுத் திருநாள்.
வயலைப் பண்படுத்தி, விதைத்து,பயிராக்கிப் பக்குவமாய் அறுவடை செய்து மகிழ்ந்தான் விவசாயி. அதைப்போல ஓராண்டில் ஆசிரியர்களிடம் கற்றதை, புத்தகங்களில் இருந்து பெற்றதை வெளிப்படுத்தி மாணவர்களின் மதிப்புகளை மதிப்பெண் வாயிலாகத் தர வந்துவிட்டது தேர்வுத் திருவிழா. மாதத்தேர்வுகள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் முன்னோட்டமாக அமைய, இதோ பொதுத்தேர்வு அவர்களை நோக்கி முதன்மைத் தேர்வாய் வரவுள்ளது.
போர் வீரர்கள்: மாணவர்களின், பெற்றோர்களின், பள்ளிகளின் மதிப்பினைக் கூட்டும்விதமாகப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இருக்கின்றன. 10,11,12 - ம் வகுப்பு பயிலும் மாணவர்களைச் சுற்றி விசாலப் பார்வை வீசியிருக்கும் சுற்றமும் நட்பும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைப் போர் வீரர்களைப்போல பார்க்கத் தொடங்கி இருப்போம்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நம் வீட்டில் இருந்தால், நம்மைவிட அதிகம் அக்கறை கொள்பவர்கள் நண்பர்களும், உறவினர்களும் தான். எல்லோரும் முதல் மதிப்பெண் என்ற எல்லையை நோக்கி ஓடும் குதிரையாகவே மாணவர்களைப் பார்ப்பார்கள்.
பெற்றோர் மனநிலையும் இதுதான். எப்படியாவது உன் அண்ணனைவிட, அக்காவைவிட ஒரு மார்க்காவது அதிகம் எடுத்துவிடு. நீ அதிக மதிப்பெண் எடுத்தால்தான் நம்ம சொந்த பந்தங்களிடம் மதிப்பு என்றும், உறவுகளிடம் முகம் கொடுத்துப் பேச முடியும் என்றும் நம் எண்ணங்களை எல்லாம் பிள்ளைகளிடம் திணித்திருப்போம். அவர்களும் சரிசரியெனச் சொல்லியிருப் பார்கள்.
வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரே திறன் பெற்றவர்களாக இருப்பது இல்லை. மாணவர்களின் அகமும் புறமும் கற்றலின் மீதான ஊக்கத்தையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துகின்றன. அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஓடிக்கொண்டு இருக்கின்றார் ஆசிரியர். மாணவர்களும் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்துகின்றனர்.
வெறுப்புணர்ச்சி வேண்டாம்: மாணவர்கள் கலைத்திருவிழா விலும், விளையாட்டு விழாவிலும் தங்களது திறமைகளை வெளிக்கொணர்ந்ததைப் போல தேர்வுத் திருவிழாவிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். சகமாணவனோடு ஒப்பீடு செய்துஅவர்களது மனதில் வெறுப்புணர்ச் சியை ஏற்படுத்தாது ‘உன்னால் முடியும்' என்ற நம்பிக்கை விதையினை விதைத்து தேர்வை சந்திக்க வழிகாட்டுவோம். நாம் விதைக்கும் நம்பிக்கை விதை நிச்சயம் வெற்றி என்னும் விருட்சமாக மாறும்.
உலகளாவிய போட்டி: இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது. ஒரு காலத்தில் படித்தவர்களைத் தேடித்தேடி வேலை கொடுத்தார்கள். அதன்பின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி கிடைத்தது. இப்போது எல்லா வேலைகளுக்கும் கடும்போட்டி நிலவுகிறது.
இந்தப் போட்டிகள் உள்ளூருக்குள் இல்லை. உலகளாவிய அளவில் இருக்கின்றன. போட்டித் தேர்வுகளில் வெல்ல வேண்டிய ஒரு சூழலில் இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள். எனவே, மாணவர்கள் முழுநம்பிக்கையோடு இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ள பொதுத் தேர்வு ஓர் அடிப்படையாக அமைகிறது.
அதிகாலை எழுந்து படிக்கும் பழக்கத்தைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அமைதியான அதிகாலைப் பொழுதில் படிப்பது மாணவர்களின் மனதில் எளிதில் பதியும். படித்ததைத் தினமும் எழுதிப் பார்க்கச் செய்வது இ்ன்னும் சிறப்பானது. நமது கனவுகளைப் பிள்ளைகளின் மீது திணிக்காது, அவர்களால் இயன்றதைத் தேர்வில்எழுத வாழ்த்துவோம்.
உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் பெறும் மதிப்பெண்களுக்கு வாழ்த்து வோம். தேர்வு எனும் திருவிழாவில் அனைத்து மாணவர்களும் வெற்றி எனும் பரிசு பெற வாழ்த்துகள்.
- கட்டுரையாளர் தமிழாசிரியர் அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி, இளமனூர், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT