Published : 21 Feb 2024 04:30 AM
Last Updated : 21 Feb 2024 04:30 AM
அரம் போழ்ந்து அறுத்த கண் நேர்
இலங்கு வளை
அறுக்கப்பட்ட சங்கின் எச்சங்கள் கண்கள் போன்று காட்சியளிப்பதாக சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சி கூறுகிறது. சங்க இலக்கியத்தில் சங்குகளை அறுத்து குடைந்து அணிகலன் செய்வது பற்றி பல குறிப்புகள் உள்ளன. தமிழகத்தில் நடந்த அகழாய்வு தளங்களில் பல இடங்களில் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் மிக அதிக அளவு சங்கு வளையல் துண்டுகள் கிடைத்த இடம், வெம்பக்கோட்டை ஆகும்.
வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து கழுகுமலை செல்லும் சாலையில் 18 கி.மீ. தொலைவில் வைப்பாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள தொன்மையான ஊர்களில் வெம்பக் கோட்டையும் ஒன்று.
கலைநயமிக்க முன்னோர்: வெம்பக்கோட்டையில் அக்காலமக்கள் பயன்படுத்திய அணிகலன் களான விலைமதிப்பற்ற பச்சை, நீல நிற கற்பாசிகளும் பவளப்பாசிகளும் கிடைத்துள்ளன. மேலும் பாசிகளாலும் சங்குகளாலும் மண்ணாலும் அழகிய வேலைப்பாட்டோடு செய்யப்பட்ட பலபொருட்கள் இங்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
நூல்நூற்கும் தக்களி, சதுரங்க காய்கள், சுடுமண் பொருட்கள், புகைபிடிக்கும் சுக்கான், வட்டச் சில்லுகள், எடை அளவை போன்ற பொருள்கள் இந்த அகழாய்வு தளத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது.
இவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த கலைநயத்துடன் வாழ்ந்துள்ளனர் என்பதையும் தொழிற்சாலைகளும் வணிக மையங்களும் நிறைந்த பகுதியாக இந்த ஊர் இருந்தது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
3,700 பொருட்கள் கண்டெடுப்பு: முதல் கட்ட கள ஆய்வில் 3,654 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தங்க அணிகலன்கள், பகடைக்காய், சுடுமண் பொம்மைகள், சங்கு வளையல்கள் இவற்றோடு சேர்த்து தமிழகத்தின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறிய தங்கத் தாலியும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட அகழாய்வில் கருங்கல்மற்றும் செங்கல் கொண்டு உருவாக்கப்பட்ட சுவர் கண்டெடுக்கப் பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கருங்கல் கட்டிடம் மக்களின்வாழ்விடமாகவோ அல்லது தொழிற் கூடமாகவோ இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வணிகர் குடியிருப்பு: பாண்டிய நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்த வெம்பக்கோட்டை கரிசல் மண் நிறைந்த பகுதியாகும். அதனால் இப்பகுதியில் பருத்தியை கொண்டு ஆடை நெசவு செய்யும் தொழிற்சாலை சிறப்புற்று விளங்கியுள்ளது. இந்தப் பகுதியில் அறுவை வாணியஞ்சேரி என்ற பெயரில் ஆடை வணிகம் செய்யும் வணிகர் குடியிருப்பு ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.
வெம்பைக்குடி கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்பே மிகச்சிறந்த வணிக மையமாக திகழ்ந்ததாய் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த ஊர் வைப்பாற்றின் கரையில் இருந்து தூத்துக்குடி கடல் வழியாக கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகளுடன் வணிக உறவை கொண்டு இருந்தது.
இங்குள்ள வணிகர் சபை வெம்ப குடியில் உள்ள வேணுகோபாலசுவாமி கோயிலின் பூஜை காரியங்களுக்காக இறையிலியாக நிலம் அளித்ததாக தெரிவிக்கிறது. மேலும் இங்கு உள்ள ஒரு கல்வெட்டு. பொதுவாக மன்னர்கள் தான் கோயில்களை பராமரிப்பதற்கு நிலங்களையும் ஆடுமாடுகளையும் தானமாக அளிப்பார்கள்.
வெம்பக்கோட்டை பெருங்குடி யில் பிறந்த வணிகர்கள் மன்னர்களைப் போல தானமாக நிலங்களையும் ஆடு, மாடுகளையும் வழங்கியதிலிருந்து அவர்கள் செழிப்புற்று வாழ்ந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
கழுகுமலை சமணப் பள்ளியில் வெம்பை குடி ஊரைச் சேர்ந்த சிரிவிசய குரத்தியார் சேந்தன் சாத்தி என்ற பெண்ணின் பெயரால் திருமேனி ஒன்றை செய்வித்துள்ளனர்.
இதே ஊரைச் சேர்ந்த குமரன் என்பவர் கழுகுமலையில் தீர்த்தங்கரர் திருமேனி ஒன்றை செய்துள்ளார். மேற்கண்ட செய்தியிலிருந்து வெம்பக்குடியில் சமண சமயம் சிறந்து விளங்கியது என்பதை அறியலாம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் ஒரு ஊர் தன் நிலையில் இருந்து திரியாமல் தொடர்ந்துநிலைத்து வருவது வரலாற்றில் பெரும் ஆச்சரியம்.
- கட்டுரையாளர்: பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, குலமங்கலம், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment