Published : 19 Feb 2024 04:25 AM
Last Updated : 19 Feb 2024 04:25 AM
நீண்ட வருடங்களுக்கு பின்பு பள்ளி ரீயூனியன். "சரி எப்படி இருக்கே?" என்று குரல் கேட்டுத் திரும்பினேன். தியாகு நின்று கொண்டிருந்தான். அவன் பி கிளாஸ் நான் ஏ கிளாஸ். ஆனால், ஒரே டியூசன். அதனால் எனக்கு கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில் இருந்தான்.
"நீ?"என்று தடுமாறினேன். "தியாகு" என்றான்.
ஏதேதோ பேசினோம். பேச்சின் இடையில் "அப்போ எல்லாம் உன்னை ஆனந்தியை பூங்கொடியை பார்த்தாலே பயமாக இருக்கும்" என்றான்.
"புரியல" என்றேன். நீங்கதான் அப்போ குங்ஃபூ கத்துக்கிட்டு இருந்தீங்களே! ஓடலாம் உடைச்சீங்க! பிளாக் பெல்ட் வேற! எங்க ஏதாவது எக்குத் தப்பா பேசிட்டா அடிச்சிடுவீங்களோனு நாங்க பயந்துக்குவோம்" என்றான். நான் சிரித்தேன். "சிரிக்காத பா உங்கள பார்த்தாலே நாங்க ரெண்டு அடி தள்ளி நிற்போம். இது நிஜம்தான்" என்றான்.
அது என்னை சிந்திக்க வைத்தது.சிறு வயதில் என்னுடன் பேசி யாரும்என்னைத் தவறான பார்வை பார்த்ததில்லை. என்னைத் தொட முற்பட்டது இல்லை. தொட்டுப் பேசியதுவும் இல்லை. இப்பொழுதுதான் புரிய ஆரம்பித்தது. நான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை தான் எனக்கு பாதுகாப்பு வளையமாக இருந்திருக்கிறது என்று.
காலம் காலமாக பாலியல் ரீதியான துன்புறுத்தல் குழந்தைகளுக்கும் சிறார் களுக்கும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த துன்புறுத்தல்கள் பெரும்பாலும் நட்பு, உறவு வட்டங்களில் தான் நடக்கிறது. இந்த நட்பும் உறவும் நம்மைப் பற்றி அறிந்திருப்பார்கள்.
அப்படி இருக்கும்போது தற்காப்பு கலை கற்று வைத்திருக்கும் ஒரு சிறுமியை பார்த்தாலே அவர்களுக்கு ஒரு பயம் வந்துவிடுகிறது. இவள் தைரியமானவள் தொட்டால் அடித்து விடுவாள். அல்லது கத்தி விடுவாள். இல்லையென்றால் வெளியில் சொல்லி விடுவாள் என்று அதனாலேயே விலகி நின்று இருக்கிறார்கள்.
அப்படி எல்லாம் அடிக்க முடியுமா? என்ற கேள்வி எழலாம். அடிக்க முடியும் ‘ஒன் டு ஒன்’ என்றால் கண்டிப்பாக முடியும். தற்காப்புக் கலையில் மிக முக்கியமான ஒன்று அடித்தல். மற்றொன்று தடுத்தல். சில புள்ளிகளில் அடித்தால் சுலபமாக வீழ்த்தி விடலாம். அது மாதிரியான பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. தற்காப்புக் கலைஉடலை மட்டுமல்ல, மனதையும் வலிமையாக்குகிறது. உடல் மனதோடு இணைந்தது.
மனதால் ஒன்று செய்ய முடியும் என்று நினைத்தால் மட்டுமே உடல் செய்ய முடியும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை இந்தத் தற்காப்பு கலை விதைக்கிறது. நீ உடலால் வலிமை பெற்றிருக்கிறாய். உன்னை தற்காத்துக் கொள்ளும் வலிமைஉனக்கு இருக்கிறது என்று இந்தக் கலை மனவலிமையை ஏற்படுத்துகிறது.
இதற்கு பயிற்சியும் முக்கியக் காரணம். தற்காப்புக் கலையோடு, மூச்சுப் பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது. தற்காப்புக் கலை தியானத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது. முதலில் மனதை ஒருமுகப்படுத்தித் தான் எந்தக் கலையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் வழியாக கவனச் சிதறல் குறைகிறது. ஒன்றை நோக்கிய பார்வையை கூர்மைப்படுத்துகிறது.
ஆணும் பெண்ணும் குழந்தையோ, பெரியவர்களோ ஏதோ ஒரு தற்காப்புக் கலையை கற்றுக் கொண்டால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் அது மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் தற்காப்புக் கலை கற்றவர்கள் தனித்துவமாக மிளிர்கிறார்கள். எந்த செயலிலும் அவர்கள் பிரகாசிப்பதைக் காண முடிகிறது.
இன்றைய காலச் சூழலில், போட்டியிலிருந்து உலகில் எத்தனையோ புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ளகுழந்தைகளை அனுப்பி கொண்டிருக்கிறோம். அது எதுக்கு என்றே தெரியாமல் கூட சில பெற்றோர்கள் இருக்கலாம். ஆனால், தன் குழந்தையை எந்த இடத்திலும் தற்காத்துக் கொள்ளும் ஒரு கலையை ஏன் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க தவறுகிறார்கள். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு.
- கட்டுரையாளர் கதைசொல்லி (மந்திரக் கிலுகிலுப்பை, கடலுக்கு அடியில் மர்மம் உள்ளிட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்); தொடர்புக்கு: sarithasanju08@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT