Last Updated : 14 Feb, 2024 04:30 AM

 

Published : 14 Feb 2024 04:30 AM
Last Updated : 14 Feb 2024 04:30 AM

உறவை மேம்படுத்திய களப்பயணம்

பள்ளியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரைஸ்மில்லுக்கு சைக்கிளில் களப் பயணம் செல்ல திட்டமிட்டோம். அதற்கான நாளும் குறிக்கப்பட்டது. மாணவர்கள் மட்டுமல்லாது மாணவிகளும் இணைந்து கொண்டனர்.

சைக்கிள் பயணம் செல்வதற்கு முன்பாகவே சாலையில் எவ்விதம் செல்வது, எப்படி கவனித்து செல்லவேண்டும் என்பன போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. வழக்கமாக மோட்டார் சைக்கிள் பயன்படுத்தும் நானும் கூட அவர்களோடு சைக்கிளில் பயணித்தேன். மிகவும் பொறுப்போடு பெண் குழந்தைகளை முன்னர் அனுப்பிவிட்டு பாதுகாப்பாக பின்னர் மாணவர்களும் பயணித்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஏற்கெனவே ரைஸ் மில்லின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்த தனால் அவரும் எங்களை வரவேற்க தயாராக இருந்தார். ரைஸ்மில்லுக்கு சென்றவுடன் அங்கு என்னென்ன கேள்விகள் எல்லாம் கேட்க வேண் டும் என கேள்விகள் அடங்கிய குறிப்பேடுகளை குழுத் தலைவர்கள் எடுத்து வந்திருந்தனர்.

எத்தனை இயந்திரங்கள்: மாவரைக்கும் இயந்திரம், மிளகாய்பொடி அறைக்கும் இயந்திரம், நெல்அரைக்கும் இயந்திரம், கல் நீக்கும்இயந்திரம் இப்படி நிறைய இயந்திரங் களை ஒவ்வொன்றாக அந்த மில்லின் உரிமையாளர் மாணவ மாணவியருக்கு காண்பித்தார்.

எப்படி இயந்திரம் இயங்குகிறது என மாணவர்கள் கேட்டவுடன் மறுப்பு ஏதும் சொல்லாமல் இயந்திரத்தை இயக்கிக் காட்டினார். இயந்திரம் ஓடுவதை மாணவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கண்டு மகிழ்ந்தனர்.

யாரும் அருகில் செல்லாமல் தமக்கே உரித்தான கட்டுப்பாடுகளோடு குழந்தைகள் நடந்து கொண்டது சிறப்பு. பின்னர் மேலே போடப்படும் அரிசி எப்படி மாவாக மாறுகிறது என்ற கேள்வியை முதலில் கேட்டனர்.

பற்களை கொண்ட இரண்டு வட்ட தட்டுகளைக் காட்டி இவை ஒன்றோடு ஒன்று ஒட்டி உராயும்போது அதற்குள் இந்த அரிசி சென்று அரைபட்டு, மாவாக மாறுகிறது என்பதை செய்து காட்டினார். அருகிலுள்ள சக்கரம் எதற்கு என்று கேட்ட மாணவருக்கு அதுதான் அந்த இரண்டு வட்ட தட்டுகளும் சுருக்கி விரிவதற்கானது என்று கூறி அதனை சுழட்டியும் காட்டினார்.

மிகுந்த ஆச்சரியம்! - கற்களை அகற்றும் இயந்திரத்தை மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்தனர். அரைக்கப்பட்ட நெல் அரிசியும் உமியும் சேர்ந்து கிடைத்தவுடன் அவற்றை இந்த மிஷினில் போட்டு தவிடு தனியாகவும் அரிசி தனியாகவும் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அரிசியில் உள்ள கற்களையும் அகற்றக் கூடிய இயந்திரத்தை இயக்கி காட்டினார்.

கழட்டி வைக்கப்பட்டிருந்த இன்னொரு இயந்திரத்தையும் கூட ஒவ்வொரு பாகமாக சுட்டிக்காட்டி மாணவரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒன்றரை மணி நேரம் சுற்றிப் பார்த்த அனுபவங்களோடு ரைஸ் மில் உரிமையாளருக்கு நன்றியும் கூறிவிட்டு விடை பெற் றோம்.

கட்டுரையான அனுபவம்: மிகுந்த உற்சாகத்தோடு இருந்த ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் சென்று வந்த அனுபவத்தை கட்டுரையாக பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு குழுவும் சுவாரசியமான தகவல்களை தெரிவித்தனர். அதில் ஒரு குழுவினர் எழுதிய கருத்து என்னை செதுக்கியது.

எங்களோடு பேசிக் கொண்டே பள்ளியில் இருந்து களப்பயணமாக சைக்கிளில் வந்த ஆசிரியரை எங்களால் மறக்க முடியாது. இந்த நாள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியானது என எழுதியிருந்தனர்.

நான் சைக்கிளில் சென்றது சாதாரண விஷயமே என்றாலும் அதுமாணவர்கள் மத்தியில் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அந்தக் களப்பயணம் மேற்கொண்ட மாணவர்கள் இன்றும் கூட முகநூலிலோ இணையத்திலோ தொடர்பில் இருப்பது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது.

குறைந்தது இடைவெளி: இந்த களப்பயணம் எனக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்ததோடு மாணவர்களுக்கும் எனக்குமான இடைவெளியையும் குறைத்தது மறக்க முடியாத அனுபவம். நமக்கு சிறிய விஷயமாக தோன்றும் காரியங்கள் கூட குழந்தைகளுக்கு மிகப் பெரிய விஷயமாக மாறியதற்கு இது ஒரு உதாரணம்.

- கட்டுரையாளர் ஓரிகாமி பயிற்சியாளர் தலைமையாசிரியர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, மணியம்பட்டி, விருதுநகர் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x