Published : 13 Feb 2024 04:30 AM
Last Updated : 13 Feb 2024 04:30 AM
இன்று கணினியிலும், திறன்பேசியிலும் தமிழில் சகஜமாக டைப் செய்கிறோம். ஒரு சொல்லை தமிழில் டைப் செய்யத் தொடங்கியதுமே அது சார்ந்த பல கலைச்சொற்கள் திறன்பேசியில் எட்டிப்பார்க்கின்றன. எதை பற்றி கூகுள் தேடுபொறியில் தமிழில் தேடினாலும் அது தொடர்பான லட்சக்கணக்கான வலைப்பதிவுகள், விக்கிப்பீடியாவில் தமிழில் தரவுகள் கொட்டிக்கிடப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் எப்படி சாத்தியமானது என்று இதுவரை யோசித்ததுண்டா?
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பழங்கால தமிழகத்தைச் சேரும் என்றால் மாநாடு நடத்தி கணித்தமிழ் வளர்த்த பெருமை நவீன தமிழகத்தைச் சேரும். அதென்ன கணித்தமிழ்?
1999-ல் தமிழக அரசு அன்றைய முதல்வர் கருணாநிதியின் தலைமை யில் ‘தமிழ் இணையம் 99’ பன்னாட்டு மாநாட்டை நடத்தியது. கணினி அறிவியல் தொழில்நுட்பத்துடன் தமிழ் மொழியின் வளத்தை ஒருங்கிணைப்பதே அதன் ஆதார நோக்கமாக இருந்தது.
இதனையொட்டி கடந்த 25 ஆண்டுகளில் விளைந்த முன்னேற்றங்களில் சிலவற்றைத்தான் மேலே கண்டோம். மிக முக்கியமாக 31,000 அச்சுப்புத்தகங்கள் டிஜிட்டல் வடிவில் பதிவேற்றப்பட்ட மின்னூலகம் அடங்கிய தமிழ் இணையக் கல் விக்கழகம் தொடங்கப்பட்டது அந்த மாநாட்டின் மைல் கல்.
இதன் அடுத்தகட்ட பாய்ச்சலாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் தமிழ் மொழி வழியாக தடம் பதிக்கவே தற்போது, ‘பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு 2024’நடைபெற்றது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த 8 தொடங்கி 10 வரை தமிழ் இணையக் கல்விக்கழகம் இந்த மாநாட்டை நடத்தியது.
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் இருந்தும், அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அயல்நாடுகளின் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் பங்கேற்றுஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்த னர். சென்னையில் உள்ள கல்லூரிகளின் 1000 மாணவர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். மாணவர் களுக்கான நிரலாக்கப்போட்டி, 40-க் கும் அதிகமான காட்சி அரங்குகள் என மாநாடு களைகட்டியது.
நாளை நமதே! - மாநாட்டில் நடைபெற்ற ‘கால் நூற்றாண்டு தமிழ் கணக்கிடுதல் மற்றும் அதன் எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தமர்வு மிகச்சிறப்பாக அமைந்தது. இதில் சிறப்புரை ஆற்றிய லிட்டில் ஃபீட் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் புகழ்பெற்ற லிப்கோ அகராதியை பதிப்பித்த குடும்பத்தைச் சேர்ந்தவருமான வெங்கடரங்கனுடன் பேசினோம். அவர் கூறியதாவது:
உலகெங்கிலும் ஒரே எண் முறை கொண்டு தமிழை டைப் செய்தல், அதிவேகமாக தமிழில் டைப்பிங் செய்ய கைகொடுக்கும் ‘தமிழ்99’ விசைப்பலகையைத் தரப்படுத்தியது இவ்விரண்டும் ‘தமிழ் இணையம் 99’ மாநாடு நிகழ்த்திக் காட்டிய மாபெரும் சாதனைகள்.
அதன்பிறகு 2010-ல் யூனிகோட் எழுத்துருவை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக்கியது. இப்படி கடந்த 25 ஆண்டுகளில் தமிழகம் கணினி அறிவியலில் கண்ட வளர்ச்சியை கொண்டாடவும் அடுத்த 25 ஆண்டுகளில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை தயார்ப்படுத்திக் கொள்வதுமே ‘கணித்தமிழ் 24’ மாநாட்டின் முதன்மையாக நோக்கம்.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு என்பது நமது மொழி மீது மட்டுமல்லாது இசை, சினிமா, கலை, இலக்கியம் என ஒட்டுமொத்த பண்பாடு, வாழ்க்கை முறையின் மீது தாக்கம் செலுத்தப்போகிறது. இதற்கான தயார்ப்படுத்துதலே இந்த மாநாடு என்றார்.
மொழி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியிலும் வணிகத்திலும் கடந்த 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் அமெரிக்கர் ரெனாட்டோ பெனினாட்டோ, ‘பன்மைத்துவ மொழி நிலப்பரப்பில் ஏஐ-யின் பங்கு’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
அவருடன் பேசுகையில்: பிரேசில், இத்தாலி, அமெரிக்காஉள்ளிட்ட 8 நாடுகளில் வசித்திருக் கிறேன். தமிழ்நாட்டில் தற்போது நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு இணையான புத்திக்கூர்மையான முன்னெடுப்பு வேறெந்த நாட்டிலும்அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வில்லை.
நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், உலகளவில் 65 பில்லியன் டாலர் மதிப்புடையது மொழி துறை. அதிலும் பன்மொழி பேசப்படும் இந்தியா போன்ற நாட்டில் ஏஐ தொழில்நுட்பம் ஊடாக கொழிக்கப்போகும் துறை இது.
உதாரணத்துக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம் 135 மொழிகளிலும் கூகுள் நிறுவனம் 100 மொழிகளிலும் தங்களதுதயாரிப்புகளை மொழிபெயர்க்கின்றன. ஆகையால் இந்திய இளைஞர்கள் மொழி மற்றும் ஏஐ மீது கண் வைத்தால் சர்வதேச அரங்கில் நிமிர்ந்து நிற்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT