Published : 09 Feb 2024 04:30 AM
Last Updated : 09 Feb 2024 04:30 AM
“சின்ன கிளாஸ் டீச்சருக்கு எப்பவும் நாங்க குழந்தைங்க தான். எனக்கு எட்டாம் வகுப்பு வரை சொல்லிக் கொடுத்த எட்டு ஆசிரியர்களையும் முதல் வரிசையில் உட்கார வைத்துத்தான் நான் திருமணம் செஞ்சிகிட்டேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறிய ஆட்டோடிரைவர் பாண்டியனை நான் மதுரையில் சந்தித்தேன்.
தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி அளிப்பதற்காக மதுரைக்குச் சென்றிருந்தேன். ஆட்டோவில் செல்லும் போது,ஓட்டுனரின் குடும்பம் பற்றி நட்புணர்வோடு விசாரிப்பது எப்போதும் எனது வழக்கம். அந்த வகையில், அன்றும் அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் பேசிக்கொண்டு வந்தேன்.
மனதிற்கு நெருக்கமானவர்கள்: பாண்டியன் கூறிய செய்திகளை, உள்ளது உள்ளவாறே, உங்களிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். “நான் சொல்றனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க மேடம், உயர் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களை விட, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள்தான் குழந்தைகளின் மனதிற்கு சற்று நெருக்கமா இருப்பாங்க.
பெத்த தாய் மாதிரியோ, தகப்பன் மாதிரியோ, ரொம்ப ஹார்ட்டா (இதயத்துக்கு நெருக்கமானவரா) இருப்பாங்க. ‘டேய், இன்னார் மகனே, டேய் சங்கரோட அண்ணனே, இங்க வாடா’ என உரிமையோடு கூப்பிடுவாங்க. பத்தாவது வாத்தியாரோ, பதினொன்னாவது வாத்தியாரோ இப்படியெல்லாம் கூப்பிடுவாங்கன்னு நாம எதிர்பார்க்க முடியாது.
அன்பாக ஓரிரு வார்த்தைகள்: வளர்ந்திட்ட மாணவங்க என்ப தாலயோ என்னவோ, இவ்வளவு உரிமையா பேச தயங்கறாங்கன்னு தோணுது. அவங்களிலும் ஒரு சிலர் விதி விலக்கா இருக்கலாம். ஆனா, பெரும்பான்மையான ஆசிரியர்கள், படிக்க வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவாங்க. உயர் வகுப்பு ஆசிரியர்கள் பாடம் கத்துத்தறதோட கூட அன்பா ஓரிரு வார்த்தை பேசினாகூட போதும்.
ஆனா, சின்ன கிளாஸ் டீச்சருக்கு எப்பவும் நாங்க குழந்தைங்க தான்.எனக்கு எட்டாம் வகுப்பு வரை சொல்லிக் கொடுத்த எட்டு ஆசிரியர் களையும் முதல் வரிசையில் உட்கார வைத்துத்தான் நான் திருமணம் செஞ்சிகிட்டேன். அவங்கள்ள மூணு பேர் இப்போ உயிரோட இல்லை. அவங்க இறுதி சடங்குக்கு நான் போய், என்னோட அஞ்சலியை செலுத்திவிட்டுத் தான் வந்தேன்.
நான் படிச்ச ஸ்கூலில், எனக்கு நாலாம் வகுப்பு சொல்லிக்கொடுத்த தமிழரசி டீச்சர்தான் இன்னைக்கு வரைக்கும் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கிறார். அந்தப் பக்கமா நான் போகும் போதெல்லாம், அவரைப் பார்த்து பேசிவிட்டுத்தான் போவேன். என்னைப் பார்த்தவுடன் கொஞ்சமும் யோசிக்காம, “ஏலேய், பாண்டி, எப்பிட்றா இருக்க?” அப்படீன்னு உரிமையாவும், அன்பாவும் கேப்பாங்க.
எப்பயாவது பஸ் கிடைக்கலன்னா, அவங்க கணவரோட ஸ்கூட்டர்ல வருவாங்க. இங்க கிராஸ் செய்யும் போது, ஆட்டோ ஸ்டாண்டில் இறங்கி, “நீங்க போங்க, நான் பாண்டிகிட்ட பேசிக்கிட்டே ஆட்டோல போறேன்” அப்படின்னு சொல்லிட்டு, “டேய், பாண்டி, வண்டியை எட்றா” என்று உரிமையா சொல்வாங்க.
ஆட்டோ ஸ்டாண்டில் சீனியாரிட்டி படிதான் வண்டியை எடுக்கணும். ஆனா, டீச்சர் வந்தா மட்டும் எனக்கு ஃபர்ஸ்ட் பிரிபரன்ஸ் தருவாங்க. “டேய் நீ போடா பாண்டி” என்று எல்லோரும் என்னைப் போக அனுமதிப்பாங்க. மத்த நேரத்தில், சீனியாரிட்டியை மாற்றினால் ஃபைன் போடுவாங்க. டீச்சர் வந்தால் மட்டும் ஃபைன்கிடையாது.
எனக்கு சொல்லிக் கொடுத்த டீச்சர்தான் என்றாலும், மத்த ஆட்டோடிரைவரும் அவங்களுக்கு மதிப்பு தருவாங்க. இது தாங்க உங்களை மாதிரி இருக்கற ஆசிரியர்களோட பெருமை”
பாண்டியனின் வார்த்தைகளைக் கேட்டபோது, எனக்கு பரவசம் ஏற்பட்டது. ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் மட்டுமே, மாணவர்கள் மனதில் இடம் பிடிக்க இயலும்என்பதும் ஆசிரியர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும், பசுமரத்தாணி போல மாணவர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதும் உண்மை தானே?
- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சிங்காடிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT