Published : 05 Feb 2024 04:35 AM
Last Updated : 05 Feb 2024 04:35 AM
எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்றார் பாரதி. அவரின் சொல்படி எழுத்தாளர்களின் சிறந்த எழுத்துகளை ஊக்குவிப்பதற்கு எல்லோராலும் பிரபலமாக அறியப்படும் சாகித்ய அகாடமி விருது பற்றி அறிந்து கொள்வோமா?
தேசிய அகாடமியை நிறுவுவதற்கான திட்டத்தை சுதந்திரத்திற்கு முன்பே ஆங்கிலேய அரசு பரசீலனை செய்தது. பின்னர், நேஷனல் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ் என்ற அமைப்பு இயங்கி வந்தது. பல்வேறு மொழிகளில் உள்ள இலக்கியங்களை மேம்படுத்தவும், சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 1954 மார்ச் 12-ல் மேற்கண்ட அமைப்புகளுக்கு பதிலாக சாகித்ய அகாடமியை ஜவகர்லால் நேரு தொடங்கி வைத்தார்.
இது பல்வேறு இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்தவும் எழுத்தா ளர்களை அங்கீகரிக்கவும் இந்திய அரசால் சாகித்ய அகாடமி நிறுவப்பட்டது.
முதன்மை நோக்கங்கள்: சாகித்ய அகாடமியின் முதன்மை நோக்கங்கள் இந்திய மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்துதல், பாதுகாத்தல், சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு விருதுகள் வழங்குவதுடன் அவற்றை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தல், எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களை ஆதரிப்பதாகும்.
சாகித்ய அகாடமியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்று அதன் வருடாந் திர இலக்கிய விருதுகள் ஆகும். சாகித்ய அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் இந்த விருதுகள் பல்வேறு இந்திய மொழிகளில் புனைக்கதை, கவிதை, நாடகம், இலக்கிய விமர்சனம் போன்ற வகைகளை உள்ளடக்கிய சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படுகின்றன.
சாகித்ய அகாடமி பல்வேறு இந்திய மொழிகளுக்கு இடையேயான இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்ப்பதை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது.இந்த முன்முயற்சியானது பார்வையாளர்கள் இலக்கியத்தை பரவலாக அணுகுவதற்கு உதவுகிறது. கலாச்சார ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் உணர்வையும் வளர்க்கிறது.
இந்நிறுவனம் ஒரு நூலகத்தைப் பராமரித்து, இலக்கியத் துறையில்அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர் களுக்கு ஆதரவாக ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சாகித்ய அகாடமி நூலகத்தில் பல்வேறு இந்திய மொழிகளில் இலக்கியப் படைப்புகள் உள்ளன.
எழுத்தாளர்களிடையே இலக்கிய பரிமாற்றம், கலாச்சார புரிதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் மற்ற இலக்கிய அமைப்புகளுடன் சாகித்ய அகாடமி இணைந்து செயல்படுகிறது. பல ஆண்டுகளாக, இந்தியாவின் இலக்கிய நிலப்பரப்பை வடிவமைப்பதிலும், வளமான இலக்கிய பாரம்பரியத்தை வளர்ப்பதிலும், பல்வேறு மொழிகளில் எழுத்தாளர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதிலும் சாகித்ய அகாடமி முக்கியப் பங்காற்றியுள்ளது.நாட்டின் பல்வேறு இலக்கிய பாரம்பரியத்தையும் மேம்படுத்துகிறது.
தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது: தமிழகத்தில் முதன்முதலில் 1955-ல்ரா.பி.சேதுப்பிள்ளைக்கு சாகித்ய அகாடமிவிருது வழங்கப்பட்டது. இவர் எழுதிய தமிழ் இன்பம் என்ற நூலுக்கு விருது பெற்றார். இவரை தொடர்ந்து ஜெயகாந்தன், கி.வா.ஜகந்நாதன், பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து, சு. வெங்கடேசன், சி.எஸ்.லட்சுமி உள்ளிட்ட பல தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த எழுத்தாளர் தேவிபாரதி 8 மாதங்களாக எழுதிய நாவல் நீர்வழிப்படூம். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நாவலுக்கு கடந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருதும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT