Published : 01 Feb 2024 04:30 AM
Last Updated : 01 Feb 2024 04:30 AM
நிறவெறியானது ஆப்பிரிக்க-அமெரிக்க குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கக்கூடிய தாக்கத்தைக் கண்டறிய அமெரிக்காவில் 1940களில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
முதலில் வெள்ளையர்கள் வாழும்பகுதியில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கருப்பு, வெளிர் நிறம், பழுப்பு, அடர் பழுப்பு என வெவ்வேறு நிறங்கள் ஆனால் தோற்றத்தில் ஒன்றுபோல் இருக்கக்கூடிய நான்கு பொம்மைகள் குழந்தைகளுக்கு முன்பு வைக்கப்பட்டன. மூன்று முதல் ஏழு வயது வரையிலான குழந்தைகளில் பலர் வெளிர் நிற பொம்மையை விரும்பினர். அதற்கு நேர்மறையான நிறங்களை ஒதுக்கினர்.
மறுபுறம், கிராமப்புற கறுப்பின குழந்தைகளிடம் எந்த பொம்மை அவர்களை போன்றது என்று கேட்கப்பட்டது. குழந்தைகள் சிரித்தபடி கறுப்பு பொம்மையை சுட்டிக்காட்டின. பாரபட்சம், பாகுபாடு மற்றும் பிரிவினை ஆப்பிரிக்க-அமெரிக்க குழந்தைகளிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அவர்களின்சுயமரியாதையை சேதப்படுத்தியுள் ளது என்பது இந்த ஆய்வின் வழியாகக் கண்டறியப்பட்டது. இந்தபோக்கு வெள்ளையின குழந்தை களின் வளர்ச்சியையும் தடுக்கிறது என்றும் தெரியவந்தது.
குழந்தைகளில் கெட்டவர்கள், நல்லவர்கள் இருப்பதாக இது குறிக்கவில்லை. மாறாக, இளம் மனங்களில் சமூக செல்வாக்கு ஏற்படுத்தும் பாதிப்பு எத்தகையது என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சமூக செல்வாக்கு: ஒரு தனிநபரின் நடத்தை, கருத்துகள் அல்லது நம்பிக்கைகள் அவருடன் தொடர்புடையவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதனால் நிகழ்க்கூடிய விளைவு சமூக செல்வாக்கு எனப்படுகிறது. பள்ளிக்கூடத்தில் சமூக செல்வாக்கு என்பது Coding-ல் அதிக ஆர்வம் கொண்ட ஒருவருடன் நண்பர்களாக இருக்கூடிய சக மாணவர்களும் Coding-ல் அதிகஆர்வம் காட்டுவார்கள்.
அதேபோன்று, Coding முறைகளில் ஆர்வமில்லாத நண்பர்களைக் கொண்ட மாணவர்கள் குழு என்று இன்னொன்று உருவாகும். இப்படிப்பட்ட குழு மனப்பான்மை, உயர்கல்வி படிக்க செல்லும்போது தொழில்நெறி தெரிவுகளில் பெரும் குறுக்கீடாக அமைந்து விடுகிறது.
உதாரணத்துக்கு, பத்தாண்டுகளுக்கு முன்பு மிகவும் சுமாரானதாக கருதப்பட்ட இன்ஜினியரிங் கல்லூரி சில ஆண்டுகளுக்கு முன்பு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இன்ஜினியரிங் அறிமுகப்படுத்தியது. சமூக ஊடகத்தின் பாதிப்பு, சமூகசெல்வாக்கு, மற்றும் குழு மனப்பான்மை இம்மூன்றும் போட்டி போட்டுக் கொண்டு கடும் வினையாற் றியதால், 2022- 23 கல்வியாண்டில்,இக்கல்லூரியின் ஏஐ-பிரிவில் முதலாண்டு சேர்ந்த மாணவர்கள் 600 பேர்.
இன்ஜினியரிங் பிரிவில் ஏஐ, முதல் மூன்று தரவரிசைக்குள் இருப்பதால், 2021-22 கல்வியாண்டில், இந்தியாவில் 14,000 சீட்டுகள் இருந்த பிரிவு, 2022 -23 கல்வியாண்டில், புதியதாக 134 இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டது. கிட்டத் தட்ட 8490 சீட்டுகள் கூடுதலாக இந்த பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.
தனித்துவத்தை விட்டுக்கொடுக்காதீர்: உண்மையில் ஏஐ பாடப்பிரிவானா லும் சரி, வேறெந்த படிப்பாக இருந்தாலும் சரி அதில் சேர்வதற்கு முன்னர் 6 காரணிகளை மாணவர்கள்கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு, சேரும் பாடப்பிரிவு தொடங்கப்பட்ட ஆண்டு, ஆசிரியர் அனுபவம், நூலகம் மட்டும் உள்கட்டமைப்பு வசதிகள், தெரிவு பாடத்திட்டங்கள் (electives) மற்றும் வேலைவாய்ப்பு விகிதம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்த பிறகே சேர்க்கை பற்றி முடிவெடுக்க வேண்டும்.
மாணவச் செல்வங்களே நீங்கள்ஒவ்வொருவரும் தனித்துவமான வர்கள். உங்கள் ஒவ்வொருவரின் வாசிப்பு, எழுத்து, மற்றும் கவனம் செலுத்தும் திறன் தனித்துவமானது.
உயர்கல்வியை தொடர பலதரப்பட்ட படிப்புகள் உள்ளன. தகவல் புரட்சி உலகில் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ள மாறுபட்ட கோணங்கள் நிச்சயம் அவசியம். கலை, இலக்கியம், வனவியல், வானவியல், கட்டுமானம், வரலாறு, தொழிற்கல்வி, வணிகவியல், சட்டம், தோட்டவியல், கணக்குப்பதிவியல், தத்துவம், என்பதையெல்லாம் மறுந்துவிட்டு கடிவாளம் கட்டப்பட்ட வாழ்க்கை தேவையா?
- ச.இராதாகிருஷ்ணன், கட்டுரையாளர்: மனிதவளமேம்பாட்டுத் துறை,எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி,சமயபுரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT