Last Updated : 31 Jan, 2024 04:30 AM

 

Published : 31 Jan 2024 04:30 AM
Last Updated : 31 Jan 2024 04:30 AM

குழந்தைகளை வாசிப்பில் சூரப்புலி ஆக்குவோமா...

நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சிக்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை, ரூ.18 கோடிக்கு மேல் புத்தகங்கள் விற்பனை என்ற செய்தி புத்தகத்தின் தேடல் அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

குவிந்து கிடந்த புத்தகங்களை சாரை சாரையாக சர்க்கரை எடுத்து செல்லும் எறும்புகள் போல வாசகர்கள் வாரி எடுத்து சென்று இருக்கிறார்கள். இந்தக் கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல் லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வாசகர் கள் மற்றும் படைப்பாளிகள் ஆர்வத் தோடு கலந்து கொண்டார்கள்.

பஞ்சுமிட்டாயும் பலூனும்... பெரும்பாலான அரங்குகளில் குழந்தைகள் நிரம்பி வழிந்தார்கள். பெற்றோரின் கைப்பற்றி ஒவ்வொரு அரங்கினிலும் நுழைந்த குழந்தைகள் முகத்தில் பஞ்சுமிட்டாயையும் பலூனையும் பார்த்த பரவசம் தெரிந்தது.

புத்தகங்களை மெதுவாகத் தொட்டும்புரட்டியும் வண்ண வண்ண பக்கங்களை கண்களில் பரவசத்தோடு பார்த்தும் மகிழ்ந்தார்கள். எவ்வளவோ விளையாட்டு பொருட்களும் உணவுப்பொருட்களும் குழந்தைகள் விருப்பத் திற்கு வாங்கிக் கொடுக்கப்படுகிறது. அதுபோல் குழந்தைகளுக்குப் பிடித்த மான புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதும் முக்கியம்.

குழந்தையின் வாசிப்புத் திறனுக்கு, புரிதலுக்கு ஏற்ற மாதிரியான புத்த கங்களை தேர்வு செய்யவில்லை எனில் அந்த குழந்தைகள் வாசிப்பின் சுவை அறியாமல் ஒரு அழுத்தம் ஏற்பட்டு வாசிப்பிலிருந்து வெளியேறவும் வாய்ப்பு இருக்கிறது.

வாசிப்பு பரவலாக்கப்பட வேண்டும். புத்தக வாசிப்பு ஒரு பண்பாடாக மாற வேண்டும். தொடர் செயலாக உருவெடுக்க வேண்டும். இதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் தான்உறுதுணையாக இருக்க வேண்டும்.

சிறார் எழுத்தாளர்களுக்கு மேடை: தமிழ்நாடு அரசு இதற்கான பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவருகிறது. இளந்தளிர் திட்டம், வாசிப்புஇயக்கம் என்று குழந்தைகளின் வாசிப்பை மேம்படுத்த அடுத்தடுத்த திட்டங்களின் வழியாக புத்தகங்களை குழந்தைகளின் கையில் தவழச்செய்ய முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.

ஆளுமைகளின் உரையில் சிறார் செயல்பாட்டாளர்கள், சிறார் எழுத்தாளர்களின் உரையும் இன்னும் அதிகமாக கொடுக்கப்பட்டால் குழந்தைகளும் அந்த உரைகளை கேட்க பெற்றோர்களோடு அழைத்து வரப்படு வார்கள்.

காலை நேரங்களில் சிறார்களுக் கான நிகழ்வுகளையும் நடத்தலாம். புத்தக காட்சியின் நுழைவாயிலில் சிறார் புத்தகங்கள் கிடைக்கும் அரங்குகளின் எண்களைத் தனியாக காட்சிப்படுத்தலாம். ஒவ்வொரு வரிசை முடிவு அல்லது தொடக்கத்தில் குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து சற்று இளைப்பார ஒரு அறையை ஏற்பாடு செய்யலாம்.

மேலும், சிறார்களுக்கு என்று ஒரு தனி வரிசையை அமைத்து அதில் சிறார் புத்தகங்கள் மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் மொத்த புத்தகக் காட்சி வளாகத்திலும் குளிர்சாதன வசதி செய்து கொடுத்தால் களைப்பு இல்லாமல் புத்தகங்களை தேட முடியும் என்கின்றனர் புத்தக ஆர்வலர்கள்.

- கட்டுரையாளர்: கதைசொல்லி, (மந்திரக் கிலுகிலுப்பை உள்ளிட்ட சிறார் நூல்களின் ஆசிரியர்), தொடர்புக்கு: sarithasanju08@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x