Published : 12 Jan 2024 04:30 AM
Last Updated : 12 Jan 2024 04:30 AM
அவனுக்கு அன்றைய ஞாயிற்றுக்கிழமை ஏனோ கசப்பாகவே விடிந்தது. காலையிலேயே அப்பாதான் சொல்லிட்டாரே உறவினரின் காதணி விழாவுக்குப் போயிட்டு வா என்று. மனமோ முனகத் தொடங்கிவிட்டது. இதெல்லாம் ஞாயிற்றுக்கிழமையில்தான் வர வேண்டுமா என்ன? மற்ற நாளாக இருந்தால் தப்பித்து விடலாம், இன்று கல்லூரி விடுமுறை வேறு தப்புவதற்கு வழியே இல்லை. அரை மனதுடன் அவனுடைய பயணம் தொடங்கியது.
காலையில் குளித்துவிட்டு பழையடிரங்க் பெட்டியில் நல்ல ஆடைகளை அவனுடைய கைகள் துழாவத் தொடங்கியது. சிறிது நேர தேடலுக்குப் பின் ஒரு வழியாக ஊதா நிறத்தில் வெள்ளைக் கோடு போட்ட ஒரு சட்டை கிடைத்தது. அப்பாடா ஒரு வழியா கிடைச்சிடுச்சு, இது மட்டும்தான் கிழியாமல் உள்ளது. என்ன இரண்டு பட்டன் மட்டும்தா இல்ல. ஊக்க உள்புறமா வச்சுக் குத்தினா யார் கண்ணுலயும் படாது.
நீச்ச தண்ணியக் குடிச்சிட்டு அவன் வீட்ட விட்டு வெளியே வரும் போது அவனுக்காகவே காத்திருந்தது அவனோட மிதிவண்டி. ஓட்டுறவன் வறுமையில இருக்கும் போது வாகனம் மட்டும் என்ன வளமாவா இருக்கும்.
அது ஒரு பழைய ஹீரோ சைக்கிள். அதுவும் வேற ஒருத்தர் கிட்ட இருந்து ரூ.300-க்கு வாங்கினது. ஆத்தர அவசரத்துக்கு உதவுமேனு அம்மாதா வாங்கினா. இந்த சைக்கிள் வீட்டுக்கு வந்தது பிடிக்காமலோ என்னவோ? அம்மாவின் மூக்குத்தி சேட்டுக் கடையில அடமானமாகத் தங்கிவிட்டது.
தனது ஒடிந்து போன ஒரு காலுடன் பயணத்தைத் தொடங்கியது மிதிவண்டி. குளிர்காய்ச்சலில் படுத்த வன் ஈனசுரத்தில் முனகுவது போல ஒலித்தது மணி. துருப்பிடித்த கைப்பிடியுடன் தனது நட்பைத் துண்டித்துக் கொண்ட மட்காடு எழுப்பும் கடகட என்ற ஓலத்துக்கு முன்னால் மணியின் முனகல் ஓசை தோற்றுப் போனது. சைக்கிள் இப்போது தார்ச்சாலையில் இருந்து விலகி புதிய செம்மண் ரோட்டில் பயணிக்கத் தொடங்கியது.
மேடு பள்ளம் நிறைந்த அச்சாலை யில் முட்டக் குடித்தவனைப் போலதள்ளாடித் தள்ளாடித் தன் பயணத்தைத் தொடங்கிய சைக்கிளை உப்பு மூட்டை தூக்கும் தன் அண்ணணின் கழுத்தை இறுகக் கட்டிக் கொள்ளும் சிறுமியாய் கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்தவாறு தொடர்ந் தது அவனது பயணம்.
விழா நடைபெறும் வீட்டை நெருங்கியதும், வண்ண வண்ணமாய் அணிவகுத்து நின்ற வாகனங்களுடன் நெருங்கி நிற்க வெட்கப்பட்டதால் என்னவோ தனித்து விடப்பட்ட வேப்ப மர நிழலில் இளைப்பாறியது சைக்கிள். அந்த நண்பனை பிரிந்த துக்கமோ அல்லது விழா வீட்டிற்குள் நுழைய வெட்கமோ தெரியவில்லை. மெல்ல மெல்ல நகர்ந்தது அவனுடைய கால்கள்.
தன்னை யாருமே கண்டு கொள்ளாவிட்டாலும் எல்லோரையும் ஐயா, அம்மா என்று விடாமுயற்சியுடன் அழைக்கும் குரல் வாசலிலே திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் குரல் எழுப்பியவனை சில நொடிகள் நின்று கவனித்தான் அவன். நல்ல வேளை அவனைப் போல தனது சட்டை கிழியவில்லை. நைந்து போய் நிறம் மாறி உள்ளது அவ்வளவுதான்.
அங்கு வரவேற்பு, பின்னர் சாப்பாடு முடிந்ததும் அன்பளிப்பை அளித்துவிட்டு வெளியே வந்தான். தனித்து விடப்பட்ட தன் நண்பனைத் தேடி கால்கள் வேகம் எடுத்தன. சைக்கிளைத் தொட்டவுடன் ஏன் இவ்வளவு நேரம் என்று கோபித்துக் கொள்வதைப்போல, கைப்பிடி எதிர்ப்புறம் திரும்பியது.
எதற்காக இந்த கோபம்? உனக்குத் தெரியாதா என்ன? நாம் இருவருமே எந்த ஒரு நிகழ்விலும் முதல் வரிசையில் நின்றதில்லையே என்று கைப்பிடியைத் தொட்டபோது அது ஆமாம் என்று ஆமோதிப்பதாய் திரும்பி அவனைப் பார்த்தது.
மீண்டும் அவனைச் சுமந்தபடி கம்பீரமாய் செம்மண் சாலையில் தனதுஓட்டத்தைத் தொடங்கியது சைக்கிள்.அதற்கு ஈடு கொடுத்து அவனுடைய மனமும் ஓடிக் கொண்டிருந்தது. சாமி ஆண்டவனே வேறு யாரும்கல்யாணம்னோ காது குத்துனோபத்திரிக்கை வைத்துவிடக் கூடாது புதுச்சட்டை வாங்கும் வரை.
- கட்டுரையாளர்:தமிழ் ஆசிரியர், எஸ்.ஆர்.வி சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT